17 March 2009

சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்

மிகவும் சின்ன சின்ன நிகழ்வுகள் தான் எனினும் அவை இன்னும் மனதை விட்டு அகலாதவை. எப்போதும் மனதின் ஓரத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டு எனது தனிமையான நடை பயணத்தை சற்றே சுவாரஸ்யமாய் இருக்கச்செய்கின்றன்.
சில சமயம் இந்த யோசிப்பு எல்லை மீறி நான் போகும் இடத்தை விட்டு கடந்து சென்றிருக்கிறேன். நான் அடிக்கடி அசை போடும் சில நினைவுகள் இவை.

அண்டங்காக்கா :
எனக்கு இந்த அண்டங்காக்காயை எங்க பார்த்தாலும், எங்க அக்கா சொல்றதுதான் ஞாபகம் வரும். அது ஒரு அ. காக்காவ பார்த்தா அன்னைக்கு வீட்டுல சண்டை வரும். அது தான்.
எங்கயாவது வெளியே போயிட்டு இருக்கும், அட வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு போகும் வழியில் கூட எங்கயாவது ஒரு அ.காக்காவ பார்த்தா அவ்வளவுதான். அக்கா இன்னொரு காக்காவ தேட சொல்லும்.
நானும் அய்யயோ எங்க வீட்டுல சண்டை வந்துடப்போகுதோன்னோ பயந்துகிட்டு ரோட பார்க்காம மரத்தையே பார்த்துக்கிட்டு வருவேன். எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்கா அதோ அதோ சீக்கிரம் .... அங்க பாரு அப்படின்னு பார்க்க வெச்சிடுவேன்.. அப்புறம் தான் நிம்மதியே வரும், இல்லனா வகுப்புல இதே ஞாபகம் அடிக்கடி வந்து அதன் தொடர்ச்சியா என்னைக்காவது நடந்த சண்டை அதெல்லாம் மனசு குழம்பும்.
மதிய உணவு வேளையின் போது, நிறைய காக்கா வந்துடும், ஸ்கூல் க்ரவுண்ட்ல, அதுல சரி பாதி அ. காக்காதான். உடனே, இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன். ஆனா சொன்னதில்லை.

போன வாரம் கூட, காலை டிபன் சாப்பிடும்போது (ஆபிஸ் மாடியில்) அ. காக்காவ பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒன்னே ஒன்னுதான். உடனே அன்வர் சார், இன்னொரு அ. காக்காவா தேடுங்க, என்று இயல்பாய் சொல்ல நேர்ந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டுபோனேன்.

வேப்பமரம் :
ஐந்தாவது படிக்கும் போது, ரோஸபல் டீச்சர்னு ஒரு கணக்கு டீச்சர். இங்கிலீஷ்க்கும் அவங்கதான். ரெண்டும் பத்தாதுன்னு அவங்க தான் எங்க க்ளாஸ் டீச்சர். மத்த எல்லா க்ளாஸ் பசங்களும் எங்கள ஒரு பரிதாபமாகவே பார்ப்பார்கள். ஏன்னா, அவங்களுக்கு எப்ப எப்படி எதுக்கு கோபம் வரும்னே தெரியாது. உடனே கூப்பிட்டு வெச்சு ஒரு கிள்ளு அந்த இடம் ரத்தம் கட்டிறும். எல்லாருக்கும் அம்மை ஊசி போட்ட தழும்பு கைல இருக்கும் இல்ல, அவுங்க க்ளாஸ்ல படிச்ச பசங்களுக்கு (அதான் எங்களுக்கு) அவங்க கிள்ளுன தழும்பும் சேர்ந்தே இருக்கும். கிள்ளும்போது, கண்ணுல தண்ணி தளும்பி எதிர்ல இருக்குற பொண்ணுங்க மூஞ்சி கூட தெரியாது, அந்தளவு வலிக்கும். அதுவும் சாப்பிட்டு முடித்தவுடன் முதல் பீரியட் அவங்களோட மேக்ஸ் இல்லனா இங்கிலீஷ் பீரியட்தான். பக்கத்துல இருக்குர வேப்பமர காத்தும், சாப்பிட்ட சாப்பாடும் சேர்த்து தூக்கம் அள்ளும். அவங்க பிக்ஸ் பண்ண டார்கெட் அன்னைக்கு சரியா முடிஞ்சி போயிருக்கும், அந்தளவுக்கு 35 பேர்ல 15 பேராவது கிள்ளு வாங்கியிருப்போம். இதைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன செய்வது என்று யோசித்து, சிவப்பு காயத்ரி ஒரு ஐடியா கொடுத்தாள்.

அதாகப்பட்டது, சீக்கிரம் சாப்பிட்டு விட்டு அந்த வேப்ப மரத்தை சுற்றுவது. அதாவது வேப்ப மரம் சாமி, அத சுத்தினா டீச்சர்கிட்ட கிள்ளு வாங்க மாட்டோம், அவங்க ஏதாவது கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல முடியும் என்றெல்லாம் முடிவு செய்து, வேப்பமரத்தை சுற்று சுற்றுன்னு சுற்றி, ஒரு கட்டத்தில்
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து மஞ்சள்,குங்குமமெல்லாம் எடுத்து வந்து அதற்கு பொட்டெல்லாம் வைக்க முற்பட்டிருக்கிறோம்.

வேப்பமரத்தை சுற்றி வர ஆரம்பித்ததிலிருந்து கிள்ளு விகிதம் குறைந்திருந்தது. மேக்ஸுக்கு வேற ஒரு டீச்சர் வர ஆரம்பித்திருந்தார்கள். அந்த டீச்சர் எங்களுக்கு முன்னாடியே கொட்டாவியை ஆரம்பித்து வைக்க எங்களுக்கெல்லாம் ஜாலி. கொஞ்ச நாள் கழித்து ரோஸபல் டீச்சர் லாங்க் லீவ், காரணம் அவரின் ஹஸ்பெண்டுக்கு மாரடைப்பு, ஆபரேஷன் என்று சொன்னார்கள். சிவப்பு காயத்ரி, என்னிடம், பார்த்தியா, வேப்ப மரம் சுத்துனதுக்கு என்னவெல்லாம் பலன் கிடைச்சிருக்கு அப்படின்னு. அத நம்பவும் முடியல, நம்பாம இருக்குவும் முடியல. ஆனா டீச்சர்கிட்ட கிள்ளு வாங்க கூடாதுன்னு தானே நாம சுத்துனோம், அவங்க ஸ்கூலுக்கே வரக்கூடாதுன்னு சுத்தலியே
அப்படின்னு பெரிய வகுப்பு போனபின்பு கூட அந்த வேப்பமரத்தை பார்க்கும் போது நான் யோசித்ததுண்டு.

தென்னை மரம்:

இதுவும் அக்கா தான். காலையில் கண் முழிக்கும் போது தென்னை மரத்தைப் பார்த்தால் அன்றைக்கு காசு கிடைக்கும் என்று கிளப்பிவிட்டது. அப்படி ஒரு பொன் காலைப்பொழுதில் தென்னை மரத்தைப் பார்க்க நேர, அன்றைக்கு பார்த்து எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் எங்கள் கைகளில் காசை திணித்து விட்டுப்போக,
பார்த்தியா, நான் சொன்னேனே, அப்படின்னு.. சரி வொர்க் அவுட் ஆகிடுச்சு, அப்படின்னு, டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும் பார்க்காமல், படுத்திருந்த பாய், தலைகாணி முகத்தில் கூட விழிக்காமல், கவனமாய் மிக மிக கவனமாய் எழுந்து வெளியே வந்து, எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் தெரியும்
ஒரு தென்னை மரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டானது. அது ஆரம்பிச்சதிலருந்து எப்படியாவது டெய்லி 50 பைசா கெடச்சிடும், ஏன்னா எங்க மாமா, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருந்த்தால் தினமும் காசை பார்க்க முடிந்தது. அதில் அவர் 50 பைசா, 1 ரூபாய் என்று எங்களுக்கு தருவார். இதெல்லாம் புரியாமல், தென்னை மரம்தான் காரணம் என்று
தென்னை மரம் தெய்வமானது. கூடவே முருங்கை மரத்தைப் பார்த்தால் அன்றைக்கு உதை விழும் என்று வேறு அக்கா கிளப்பி விட்டிருந்தது. தென்னை மரத்துக்கு முன்னாடி ஒரு முருங்கை மரம் ரொம்ப கிட்டத்துலயே தெரியும். ரொம்ப கஷடப்பட்டு முருங்கை மரத்தை பார்வையிலிருந்து தவிர்த்து, தென்னை மரத்தை பார்க்க வேண்டும். யப்பா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...

இப்போது தினமும் முருங்கை மரத்தையும், தென்னை மரத்தையும் ஒரு சேரப் பார்க்கிறேன். ஆனால் காசுமில்லை, உதையுமில்லை. நினைவுகளுக்கு பஞ்சமுமில்லை.

அப்புறம் வழக்கம்போல மயிலிறகை புக்ல வைக்கறது, இதுல ஏனோ எனக்கு நம்பிக்கையே இல்ல. சும்மா ஒப்புக்கு வைத்திருப்பேன். எல்லோரும் வைத்திருக்கிறார்களே அப்படின்னு.

ரெண்டு விரல்ல ஒரு விரல்ல தொட சொல்லி அது ஒரு பழக்கம், அதுவும் அக்காதான் ரிப்பன் கட் பண்ணி தொடங்கி வச்சது. அப்படியாராவது என்னை தொட சொன்னா, முதல்ல எந்த விரலை தொட்டா நல்லது நடக்கும் என்று நினைத்திருக்கிறீர்கள் என்று கேட்பேன். அவர்களிடமிருந்து பதில் வராது, சாமியை வேண்டிகிட்டு ஏதாவது ஒரு விரலை கண்ணை மூடிகிட்டு தொடு. ஊரிலிருக்கும் எல்லா சாமியும் வேண்டப்பட்டு, அதை தொட்டால், நல்லதாக இருந்தால் சிரிப்பார்கள். கெட்டதாக இருந்தால் ஒரு ரியாக்‌ஷனும் இருக்காது. வற்புறுத்தி அவர்களிடம் காரணத்தை கேட்டோமானால் அடச் சே, இதுக்கா என்று இருக்கும் எனக்கு.

கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால், அது நடக்கும் என்று தோழிகள் சொன்னார்கள். நடந்ததாக வரலாறே இல்லை. ஆனால் சற்றே வளைவான கண்முடியே வெள்ளை யூனிபார்மின் மீது பார்க்க நேர்ந்தால் அதை எடுத்து இப்படி செய்யும் பழக்கம் ரொம்ப நாள் இருந்தது.


இதையெல்லாம் விடுத்து, என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது ரோஜா இதழ்களை பத்திரப்படுத்துவது. சிகப்பு பெங்களூர் ரோஸை தலையில் வைத்து விட்டால், அன்று மதியமே (இதழின் ஓரங்கள் சற்றே கருத்திருக்கும்) அதன் இதழ்களை எடுத்து கொஞ்சம் தடிமனான புக்கில் வைத்து மூடி விடுவேன். இதற்கு எனக்கு மிகவும் உதவியது ஹார்ட்ஹேண்ட் புக்தான். சுமார் 300 பக்கம், குட்டியூண்டு தலையணை மாதிரி இருக்கும் இந்தப் புத்தகம் முழுவதுமே காய்ந்த ரோஜா இதழ்கள் தான். சில சமயம் டைரியில் கூட வைப்பேன். கொஞ்ச நாள் கழித்து இதழ்களை எடுத்து பார்த்தால், அதன் சிறு சிறு நரம்புகள் கூட தெரியும் வண்ணம் ப்ரவுன் கலரில் இதழ் மாறியிருக்கும். அதில் எனக்கு பிடித்தவர்கள் பெயரை எழுதிவைப்பேன். இந்தப் பழக்கம் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. இப்போது கூட அந்த ரோஜா இதழ்களை எடுத்துப்பார்க்க நேர்ந்தால், அதில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை காணலாம்.

முதலில் சொன்னது மாதிரியே, மிகவும் அற்பமான நிகழ்வுகள் மாதிரி தோன்றும் இவைதான் ஆயுசுக்கும் நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.

38 comments:

நட்புடன் ஜமால் said...

\நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.\\

சூப்பர்.

உண்மை தான் உயிரோடு இருப்பதை விட

உயிர்ப்போடு இருக்க வேண்டும் ...

அதற்கு பெரும்பாலும் பழைய நினைவுகளே உதவுகின்றன

நட்புடன் ஜமால் said...

நல்லா எடுத்து பாருங்க ரோஜாவினை என் பேரு எங்கனா இருக்கான்னு

:)

சந்தனமுல்லை said...

பெரிதாய் ""சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்""!! :-)

சந்தனமுல்லை said...

உங்களுக்கு அ.காக்காவா! எங்க ஸ்கூல்ல அது சிட்டு குருவி! one for sorrow and two for joy...:-)

சந்தனமுல்லை said...

//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//

ஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு!

Ungalranga said...

ரொம்ப பெர்சா கீதுங்க...
வந்து படிக்கறேன்..

கிகிகி... :))

sindhusubash said...

இந்த மாதிரி நம்பிக்கைகள் எனக்கு இப்பவும் உண்டு.

சூப்பர் பதிவு!

www.narsim.in said...

//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால், அது நடக்கும் என்று தோழிகள் சொன்னார்கள். நடந்ததாக வரலாறே இல்லை//

ரசித்த பதிவு..

அமுதா said...

செல்லமான நினைவுகள் :-)
அ.காக்கா - one for sorrow, two for joy என்று ஏதோ சொல்லுவோம்...

/*மிகவும் அற்பமான நிகழ்வுகள் மாதிரி தோன்றும் இவைதான் ஆயுசுக்கும் நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.*/
உண்மை தான். நல்ல கொசுவத்தி...

Deepa said...

ரொம்ப அழகான பதிவு!

//அந்த டீச்சர் எங்களுக்கு முன்னாடியே கொட்டாவியை ஆரம்பித்து வைக்க எங்களுக்கெல்லாம் ஜாலி.//
:-)))

//இப்போது தினமும் முருங்கை மரத்தையும், தென்னை மரத்தையும் ஒரு சேரப் பார்க்கிறேன். ஆனால் காசுமில்லை, உதையுமில்லை. நினைவுகளுக்கு பஞ்சமுமில்லை.//

நீங்களும் என் கேஸ் தானா. நானும் இப்படி சின்ன வயசு நினைவுகள் எதையாவது அசை போட்டுக்கிட்டே இருக்கேன்.
தொடர்ந்து எழுதுங்க அமித்து அம்மா!

Vidhya Chandrasekaran said...

One for sorrow. Two for joy என அ.காக்காவிற்கு நாங்கள் கூட பயந்ததுண்டு. ஹி ஹி அப்புறம் அந்த ரோஸ் மேட்டர் சேம் ப்ளட்:)

அ.மு.செய்யது said...

//இந்தப் பழக்கம் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. இப்போது கூட அந்த ரோஜா இதழ்களை எடுத்துப்பார்க்க நேர்ந்தால், அதில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை காணலாம்.
//

ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம்..

Keep it up !!!!!!

ப‌திவு அழ‌கா இருக்கு..

கார்க்கிபவா said...

/பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்//

அடடடடா...

Unknown said...

அட என் அக்கா கூட இப்படி நிறைய சொல்லி குடுத்திருக்கா (முட்டாள்தனமா தான்) நானும் செய்து இருக்கேன்... ரொம்ப சாதாரன விஷயம் தான் என்றாலும் அதை இன்றும் நான் மெல்ல அசை போட்டு பார்பேன் அதில் எனக்கே ஒரு சந்தோசம்.... இதை படிக்கும் போது என்னை சில வினாடிகள் என் குழந்தை பருவத்திற்கு எடுத்து சென்றது.... அங்கு நான் என் அக்கா கை பிடித்து கொண்டு சென்று கொண்டிருக்கின்றேன்.... அழகாகன நாட்கள்....

நாணல் said...

//சந்தனமுல்லை said...
//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//

ஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு! //

repeatuuuuuuu... :)))

நாணல் said...

//சந்தனமுல்லை said...
//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//

ஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு! //

repeatuuuuuuu... :)))

"உழவன்" "Uzhavan" said...

வழக்கம் போல் அருமை!

அன்புடன்
உழவன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான நினைவுகள்..
உங்க அக்கா ரொம்ப சூப்பரான ஆளுங்க..விதவிதமா கதை விட்டிருக்காங்க பாருங்க..

இந்த கண்ணிமை ஊதற விசயம் நான் இன்னமும் செய்கிறேன்.. :P
அதுவும் அதை நம் வீட்டு வாசல் எந்த திசையோ அந்த திசையில் திரும்பி தான் ஊதனுமாமே .. :)

குடந்தை அன்புமணி said...

நாளுக்கொரு கதையை விட்டிருக்காங்க உங்க சகோதரி. அதுசரி... இப்ப என்ன பண்றாங்க? சீரியலுக்கு கதை எழுதறாங்களா? (சும்மா... தமாசுக்கு...) நினைவுகள் நம்மை இளமையாக்கும்னு சொல்வாங்க. அதனால அடிக்கடி பழைய சம்பவங்கள நினைச்சுப்பார்க்கிறது நல்லதுதான். (இதை யாரு சொன்னது?)

அப்துல்மாலிக் said...

உங்க நினைவுகள் சூப்பர்

ஆயில்யன் said...

//எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்கா அதோ அதோ சீக்கிரம் .... அங்க பாரு அப்படின்னு/

ஹைய்யோ ஹைய்யோ!

இதுல ஒரே காக்காவையே அக்காகிட்ட திரும்ப காமிச்ச உங்களை டெரரர் பார்ட்டீன்னு சொல்றதா இல்ல,டபுள் ஆக்ட் பண்ணின அந்த காக்கவை சொல்றாதன்னு தெரியலயேம்மா........!

ஆயில்யன் said...

//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//

வெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க
வெரிகுட்!

ஆயில்யன் said...

//டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும் பார்க்காமல், படுத்திருந்த பாய், தலைகாணி முகத்தில் கூட விழிக்காமல், கவனமாய் மிக மிக கவனமாய் எழுந்து வெளியே வந்து, எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் தெரியும்//

குடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககிட்ட கொள்ளையடிக்கறதுக்குன்னே பிளான் பண்ணி நடத்துக்கிட்டிருந்துக்கீங்க :)))))

ஆயில்யன் said...

// நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//

உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)
டாங்கீஸ்:))

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

// நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//

உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)
டாங்கீஸ்:))//

ரிப்பீட்டு!

சந்தனமுல்லை said...

//
இதுல ஒரே காக்காவையே அக்காகிட்ட திரும்ப காமிச்ச உங்களை டெரரர் பார்ட்டீன்னு சொல்றதா இல்ல,டபுள் ஆக்ட் பண்ணின அந்த காக்கவை சொல்றாதன்னு தெரியலயேம்மா........!//

சான்ஸே இல்ல!! சூப்பர் ஆயில்ஸ் அண்ணா!

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//

வெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க
வெரிகுட்!//

ரிப்பீட்டு! ஒருவேளை காக்கா பாஷை தெரியுமோ!!?!!

சந்தனமுல்லை said...

/ஆயில்யன் said...

//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//

வெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க
வெரிகுட்!//

ரிப்பீட்டு!

சந்தனமுல்லை said...

//குடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககிட்ட கொள்ளையடிக்கறதுக்குன்னே பிளான் பண்ணி நடத்துக்கிட்டிருந்துக்கீங்க :)))))//

அதானே!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்ஸ் அண்ணா

என்னா

பேக் டூ த பெவிலியனா> ?

மொத போணி நான் தானா கலாய்க்கறதுக்கு

ஆச்சி!

நீங்களுமா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

////கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//

ஆஹா!!!!

என்னால இதை முத்ன் முதலில் செய்த நிகழ்வை எப்பவும் மறக்கவே முடியாது!!!

க்ளாஸ் ரூமில் ரேகா தான் என் கண்ணத்தில் விழுந்திருந்த முடியை எடுத்து என் கையை மடக்கி வச்சு விட்டு இப்படி செய்ய சொன்னாள்:)

இப்போ அவள் எங்கே இருக்கிறாள்????

Thamira said...

நல்ல ரசனையான பதிவு.. எழுத்தில் நல்ல ஃபினிஷிங் தெரிகிற‌து.

சின்னச்சின்ன சுவாரசியங்கள்தான் வாழ்க்கையின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான வழி.!

உங்கள் ஊரில் ஒற்றைக்காக்காவையா சண்டைக்கு காரணம் சொல்வீங்க.. நாங்கள் ஒற்றை மைனாவைப் பார்த்துதான் பயந்துபோய் இரண்டாவது மைனாவைத் தேடுவோம். ரோஜா இதழ்களில் பெயர்கள்.. அழகு.!

கானா பிரபா said...

உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)
டாங்கீஸ்:))// ரிப்பீட்டே

ச.முத்துவேல் said...

ச்சோ ச்வீட் நினைவுகள்.சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ஞாபகம் வருது.கடைசி பத்தி, அருமையாக சொல்லியிருக்கிறிர்கள்.எனக்கு இன்னைக்கும், பகுத்தறிவு தாண்டி கொஞ்சம் sentimets இருக்குது.(யாராவது என்னன்னு கேட்பாங்க.கேட்டா, எதுவும் சொல்லிடாதீங்க)

இன்னும் கொஞ்சம் இருக்குது.பல்லி
கத்துனா, தரையில,மூனுவாட்டி கொட்டணும். எதுக்கு? என் மனைவி
சொல்லமாட்டேங்கறாங்களே.

- இரவீ - said...

அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்.
ஒரு முறை முட்டினால் கொம்பு முளைக்கும்,
வேப்பங்கொட்டை, புளியன்கொட்டய முழுங்கினா வயித்துல மரம் வளரும்.
இப்டி எல்லாம் கூட நான் பயந்திருக்கேன்.

RAMYA said...

பழைய நினைவுகளின் தாக்கங்கள்!!

அசைபோடுவதில் தான் எத்துனை சுகம்.

அதிலும் நீங்க கூறி இருக்கும் விதம் மிகவும் ஆழமான அழகான உணர்வுகள்

படிக்கும்போதே ஓவ்வொரு நிகழ்ச்சியிலும் அதன் விளிம்பில் நின்று கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு..

எழுத்தின் கோர்வை என் பழைய நினைவுகளுக்கு கட்டி இழுத்துச் சென்றுவிட்டது.

அருமையா உணர்வுகளை பகிர்ந்து கொண்ட என் அன்புத் தோழிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

RAMYA said...

//பெரிதாய் ""சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்//

பக்கத்தில் இருந்து யாரோ காதோரம் கிசு கிசுப்பதுபோல் இருந்தது. :-))

தமிழ் அமுதன் said...

உங்களோட இந்த மாதிரி பதிவுகள் படிக்கும்போது படிக்கிறவங்களையும்
சின்ன வயசுக்கு அழைச்சுகிட்டு போயிடுறீங்க! பாலகுமாரன் நாவல் படிக்கும்போது
புக்க மூடிவைசுட்டு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு மறுபடி படிப்பாங்களே? அதுபோல.....

//பக்கத்துல இருக்குர வேப்பமர காத்தும், சாப்பிட்ட சாப்பாடும் சேர்த்து தூக்கம் அள்ளும்.///

தூங்காம இருக்கத்தான் டீச்சர் கிள்ளி இருப்பாங்களோ?

//முருங்கை பார்வையிலிருந்து தவிர்த்து, தென்னை மரத்தை பார்க்க வேண்டும். யப்பா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா//...

;;))

//நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//


அருமை..............


விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...........வாழ்த்துக்கள்!!!