02 March 2009

என்னைக் கவர்ந்தவர்கள் (தொடர் பதிவு)

நமக்கு பிடித்தமான இசை, வாசிப்பு, நட்பு இன்னும் பல நம் மனதுக்கு நெருக்கமான விஷயங்களில் நம்மை எத்தனையோ பேர் கவர்ந்திருப்பார்கள். ஆனால் இன்னதுதான் காரணம் என்றே தெரியாமல் ஒரு சிலர்
நம் மனதை ஆக்ரமித்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் என்னைக் கவர்ந்தவர்களாக இங்கே அறிமுகப்படுத்தப் போகிறேன்.

1. டென்சிங்க் பால்டன்

கோலிகுண்டு கண்கள், அதில் தெரியும் ஒரு சோகம். குட்டியூண்டு முடி, நான் அண்ணாந்து பார்க்கும் உயரம், நல்ல வெளிர் நிறம் இப்படித்தான் எனக்கு அறிமுகமானால் டென்சிங்க். +1 ல் நான் சயின்ஸ் பாடப்பிரிவு. 10ம் வகுப்பு வரை
தமிழிலியே படித்துவிட்டு, +1 ல் சர்வம் இங்கிலிஷ் மயம், நல்லவேளையாக தமிழை மட்டும் தமிழிலேயே படிக்கச் சொன்னார்கள். யாரைப் பார்த்தாலும் ஒரு பயம், நம்மளோட பேச்சு எல்லாம் நம்மள மாதிரியே தமிழ்ல 10வது வரைக்கும் படிச்சு +1 சேர்ந்த
மக்களோட மட்டும் தான். தப்பித் தவறி அந்தப் பக்கம் தாவற்தேயில்லை. அவர்களை கடந்து போக நேரிட்டாலும் ஒரு சிரிப்பு மட்டுமே. இப்படியிருந்த வேளையில் நானாய் போய் பேச ப்ரியப்பட்டது டென்சிங்கிடம் மட்டும்தான். காரணம் ஏனென்று தெரியாது.

டென்சிங்க் ஒரு நேபாள ஃரெப்யூஜி (இப்படி அவளைப் பற்றி சொல்லப்பட்டபோது எனக்கு ரெப்ஃயூஜியின் அர்த்தம் தெரியாது, ஆனால் அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் கண்டு கொண்டபின் அவளைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு வலித்தது) எங்கள் பள்ளியின் ஹாஸ்டல் வாசம், அவளது தங்கையுடன். 5ம் வகுப்பு முதலே இங்குதான். அவர்கள் அம்மா அப்பா எல்லோரும் வேலூர் பக்கம் எங்கேயோ இருக்கிறார்கள். இதையெல்லாம் நான் அவளைப் பற்றி பிறரிடம் விசாரித்தது. அவளுடன் நான் பேச தடையாய் இருந்தது மொழி, அவளுக்கு ஆங்கிலம் தண்ணி பட்ட பாடு, தமிழ் பால் குடிக்கற் மாதிரி ஒரு நாளைக்கு ஒரு தடவைதான். லேங்க்வேஜ் கூட ஹிந்தி எடுத்து படித்தாள். இப்படியிருக்க நான் அவளுடன் பேசுவது எட்டாக்கனிதான்.

ஆனால் சிரிக்க மட்டும் தவறுவதேயில்லை. ஆனால் சில நாட்கள் அந்த சிரிப்பு கூட மிஸ்ஸிங்க். காரணம் தெரியாது, அவள் சிரிக்காத அன்று மட்டும் எனக்கு என்னவோ போல இருக்கும்.

+2வின் கடைசி நாட்களில்தான் என் அரைகுறை ஆங்கில அறிவை வைத்து அவளிடம் பேச முற்பட்டேன். அவளும் பேசினாள். எனக்கு வராத பிஸிக்ஸ் சப்ஜெக்ட்டை அவள் சொல்லித் தருவதாக சொன்னாள். கூடவே சில அட்வைஸும் படிப்பை பற்றி. ஆரம்பத்தில் நான் மிகுந்தஹார்ட்வொர்க் செய்ததாகவும், நாளடைவில் சுதா (சமீபத்தில் இறந்த என் தோழி) வோடு சேர்ந்து அதிகம் பேசி, கதைப்புத்தகங்கள் படித்து நான் வீணாகப்போவதை சுட்டிக் காட்டினாள். என்னைப் பற்றியும், என் குடும்ப சூழ்நிலைகள் பற்றியும் அவளும் பிறரிடம் விசாரித்திருக்கிறாள். நான் அவளை ஆரம்ப நாட்களில் விசாரித்ததை போலவே.

இதனால் தான் அந்த அட்வைஸ் எனக்கு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவள் சி.எம்.சி. யில் நர்சிங்க் படிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்றும் சொன்னாள். அதுபோல் எனக்கு ஏதாவது இருக்கிறதா என்று வினவினாள். அப்போதுதான் அது போன்ற எந்த எண்ணத்தையும் நான் உருவாக்கிக்கொள்ளவில்லை என்று அறிந்தேன்.

எனது ஆட்டோகிராஃப் புத்தகத்தில் கையொப்பமிட்டாள். அது இப்படி இருந்தது. நீ நல்லவள். கடின உழைப்பாளி. எப்படியாவது படித்து முன்னேறும்(?) எண்ணமுள்ளவள். ஆனால் இது சுதாவோடு சேர்ந்திருக்கும் வரை நடக்காது. அவளுடனான உனது ஃப்ரெண்ட்ஷிப்பை கட் செய்து கொண்டு, இருக்கும் கொஞ்ச நாட்களாவது படிப்பில் கவனம் செலுத்து. சுதா ஒரு மாயவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறாள், அவளுடன் சேர்ந்து நீயும அப்படியாகிவிடாதே. வித் லவ் என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தாள்.

அத்துடன் முடிந்தது, +2 எக்ஸாம் ரிசல்ட் முடிந்து மார்க் லிஸ்ட் வாங்கும் போது பார்த்தது. அன்றே கடைசி. பின்னொரு நாள் பள்ளித் தோழிகளிடம் விசாரித்ததில் அவள் சி.எம்.சியில் செவிலியர் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக சொன்னார்கள்.

டென்சிங்க், நீ எங்கிருக்கிறாய். இப்போது நான் உன்னைப் பற்றி நினைத்து எழுதுகிறேன். நீ குறைந்த பட்சம் என்னை நினைக்கவாவது செய்வாயா டென்சிங்க் பால்டன்.

2. ராணி மிஸ்

இவர்கள் எனது பள்ளி ஆசிரியை அல்ல. வெஸ்லி ஸ்கூலில் அவர்களிடம் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த என் அக்கா மகனால் எனக்கு அறிமுகமானார்கள். பார்த்த முதல் நாளே என்னைக் கவர்ந்தவர்கள். ஏ புள்ள என்று ஆரம்பித்து இவர்கள் பேசும் தொனியே அலாதிதான். என் வாழ்வின் சிரமமான கால கட்டத்தில் எனக்கு மிகவும் உதவினார்கள் ஆறுதல் பேச்சுக்களாலும், முன்னேற்ற வார்த்தைகள் கூறியும். நன்றி மிஸ். அவர்களை இன்னமும் ராணி மிஸ் என்றே கூப்பிட்டு பழகிவிட்டேன் என் அக்கா பையனைப் போல. எப்போது அவர்கள் வீட்டுக்கு போனாலும் எங்களுக்காக குறிப்பாய் என் நலனுக்காக ப்ரேயர் செய்வார்கள்.

ராணி மிஸ்ஸுக்கு குழந்தை கிடையாது. தத்தெடுப்பதிலும் அவ்வளவு மும்முரமில்லை. பள்ளிக்கூட வேலையே அவர்களுக்கு சரியாயிருந்தது.

ஒரு முறை சுரண்டையிலிருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்று வந்த போது ஒரு கைக்குழந்தையுடன் வந்தார்கள்.எங்களுக்கு ஒரே ஆச்சரியம். என்ன மிஸ். யார் என்று கேட்டதில் மிஸ் சொன்னது :

ராணி மிஸ்ஸின் மாமியார் வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். இந்தக் குழந்தை மூன்றாவது கர்ப்பமாக இருக்கும் போது அந்தம்மாளின் கணவர் யாருடனோ ஓடிப் போய்விட்டார்களாம். இந்தம்மா ஏற்கனவே இரு குழந்தைகளுடனும், இப்போது இந்தக் குழந்தையுடனும் மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கைக்குழந்தையை தன்னுடன் எடுத்துக் கொண்டு வந்தே வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணியின் நிலையைக் கேட்ட மிஸ், குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார்களாம். இதில் அந்த வேலைக்காரப் பெண்மணிக்கும் பெருத்த சந்தோஷமாம். எங்கேயோ இந்தக் குழந்தை நல்லா இருந்தா போதும் என்று. ஆனால் எதிர்ப்பு மாமியாரிடமிருந்தும், இன்னும் சில உறவினர்களிடமிருந்துதான்.

தத்தெடுக்க இந்தக் குழந்தைதான் கிடைத்தா, வேறு எவ்வளவோ நல்ல, அழகான குழந்தைகள் இருக்கிறதே. அதுவும் வேலைக்காரப் பெண்ணோட குழந்தையாச்சே, பின்னாடி சொத்து ப்ராப்ளம் அது இதுன்னு வருமேன்னு ஏகப்பட்ட ப்ரச்சனைகள். இதை எதுவும் பெரிசு படுத்தாமல் குழந்தையை தன்னுடன் சென்னைக்கு எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள் ராணி மிஸ்.

மிஸ் தன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்தபோது குழந்தை சவலைக் குழந்தை போல ஒல்லியாய், வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பார்க்கவே பயமாகவும் பாவமாகவும் இருந்தது. அந்த சிறு வயதிலேயே அவனுக்கு சிறுநீர் போகும்போது ஏதோ தொந்தரவு இருந்தது. இதையெல்லாம் சரி செய்து எப்போதும் அழுது கொண்டேயிருக்கும் அவனைப் பார்த்துக் கொள்வதற்காக
தன் பள்ளிக்கூட வேலையை ராஜினாமா செய்து, வீட்டிலேயே ட்யூசன் எடுத்து குழந்தையின் மருத்துவ செலவைப் பார்த்துக்கொண்டார்கள். சென்னையில் வெஸ்லி சர்ச்சில் தான் அவனுக்கு பிரான்ஸிஸ் கிருபாகரன் என்று ஞானஸ்தானம் செய்யப்பட்டது.

நாளடைவில் எல்லா உறவுகளைப் போலவே ராணி மிஸ்ஸின் தொடர்பும் இல்லை. தொலைபேசுவது கூட மறக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் மாமா இறந்த செய்தியை (போஸ்டரில் பார்த்து) விசாரிக்க வந்தபோது அவர்களுடன் பேச நேர்ந்தது. அப்போது கிருபா எப்படியிருக்கிறான் என்று விசாரித்தேன். கடவுள் க்ருபையால நல்லா இருக்கான் புள்ள. எட்டாவது படிக்கிறான் கோபாலபுரம் டி.ஏ.வி ல என்றார்கள்.

ஏனோ இப்போது ராணி மிஸ்ஸை இன்னமும் அதிகமாக பிடித்தது.


நினைவுகளை வெளிக்கொணர வாய்ப்பு தந்த கண்ணாடி ஜீவனுக்கு எனது நன்றிகள்.
எல்லாருக்குமான தனிப்பட்ட சுவாரஸ்யமான மனதைக் கவர்ந்தவர்கள் எப்போதுமே இருக்கத்தானே செய்கிறார்கள் குழந்தைப் பருவத்திலிருந்து. அதனால் இந்தத் தொடரை எழுத பிடித்தவர்கள் தொடரலாம்.

35 comments:

சந்தனமுல்லை said...

ஹேய்..அமித்து அம்மா..செம டச்சிங்!
அப்புறம் டென்சிங் ஆர்குட்டில் கிடைக்கலாம்..:-)

சந்தனமுல்லை said...

நானும் என் தோழி பற்றி போஸ்ட் போடனும்னு நினைச்சேன்..நீங்க போட்டுட்டீங்க..என்னவொரு ஒற்றுமை!!

sindhusubash said...

எல்லார் வாழ்விலும் இப்படி யாரோவெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துவது எவ்வளவு உண்மை.

சில சமயம் சந்தோஷமும்,துக்கமும் இனம் புரியா உணர்வுகளும் ஏற்படும்.

அபி அப்பா said...

சுதா பாவும்ங்க! நண்பர்கள் இழப்பு என்பது ரொம்ப பெரிய சோகம்! ராணி மிஸ் பத்தி படீக்கும் போது கூட சுதா தான் மனசிலே இருந்தாங்க!

நட்புடன் ஜமால் said...

போட்டாச்சா ...


\\டென்சிங்க் பால்டன்\\

இவரை தெரிந்து கொள்ளனும் இனிதான்

நட்புடன் ஜமால் said...

எனக்கும் ரேவதி மிஸ் ரொம்ப பிடிக்கும்

உங்களுக்கு ராணி மிஸ்ஸா

எப்படியோ மிஸ்ஸ மிஸ் பன்றோம்

தாரணி பிரியா said...

டென்சிங்கும் ராணி மிஸ்ஸூம் இப்ப எங்களுக்கு ப்ரெண்ட் ஆகிட்டாங்க :). ஹீம் எத்தனை உறவுகளை இந்த மாதிரி தேடிக்கிட்டு இருக்கோம் இல்லையா அமித்து அம்மா

நட்புடன் ஜமால் said...

\\டென்சிங்க், நீ எங்கிருக்கிறாய். இப்போது நான் உன்னைப் பற்றி நினைத்து எழுதுகிறேன். நீ குறைந்த பட்சம் என்னை நினைக்கவாவது செய்வாயா டென்சிங்க் பால்டன்.\\

நிச்சியம் புறை ஏறியிருக்கும்

pudugaithendral said...

அருமையான பதிவு.

தொடர்பவர்கள் தொடரலாம்னு சொல்லியிருக்கீங்க மைண்ட்ல வெச்சுக்கறேன்.

கார்க்கிபவா said...

அருமை

narsim said...

மனதைத் தொட்ட பதிவு மேடம்!

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம் நல்ல பதிவு. நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள்.

அமுதா said...

மனதைத் தொட்டது பதிவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இப்படி யாரேனும் மனதைத் தொட்டு காணாமல் போய்விடுகிறார்கள். இராணி மிஸ்ஸையாவது மீண்டும் சந்தித்தீர்களே!!!

ச.முத்துவேல் said...

super.
Emotional,&touching.( i dont know that you are writing always,like this. this time it is really nice.

SK said...

முல்லை சொன்ன போல உங்க தோழிய ஒர்குட்ல கண்டுபுடிக்க வாய்ப்பு அதிகம் :)

அந்த ஆசிரியை அருமை. சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை :)

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு

அப்துல்மாலிக் said...

தோழியையும், ஆசிரியைரையும் வித்தியாசமா சொல்லிருக்கீங்க‌
இது கூட புதுமையாதான் இருக்கு

வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

மாநகரப் புகையில், வாகனங்களின் நெரிசல்களுக்கிடையே பணத்தைத் தேடும் இன்றைய வாழ்வில், நீங்கள் மனத்தை தேடுவதற்காய் சற்றுப் பின்னோக்கி திரும்பியிருக்கிறீர்கள்.
மனம் வருடும் பதிவு. வாழ்த்துக்கள்!

சேரன் போன்ற இயக்குநர்கள் விரைவில் உங்கள் ஆட்டோகிராப்பைப் படமாக்க, உங்களிடம் அனுமதி கேட்கும் நாள் வரும். :-)

அன்புடன்,
உழவன்

நட்புடன் ஜமால் said...

\\சேரன் போன்ற இயக்குநர்கள் விரைவில் உங்கள் ஆட்டோகிராப்பைப் படமாக்க, உங்களிடம் அனுமதி கேட்கும் நாள் வரும். \\

நடக்கனும் ...

Thamira said...

அழகான நினைவுகள்!

எம்.எம்.அப்துல்லா said...

நல்ல பதிவு. பாராட்டுகள்.
:)

RAMYA said...

சுதாவை நினைத்து மிகவும் வேதனையாக இருந்திச்சு.

நல்ல அருமையான் பின்னோக்கி சென்ற நினைவுகளை கோர்வையாக்கி அளித்திருக்கின்றீர்கள்

நினைவுகள் தந்த பொக்கிஷங்களை எங்களுக்காக எழுத்து வடிவத்தில் கொடுத்து இருக்கின்றீர்கள்.

RAMYA said...

நட்பிற்கு இலக்கணமும், ராணி மிஸ் பற்றி எழுதி இருக்கும் விஷயங்கள் என்னை எங்கோ அழைத்து சென்று விட்டது என் நட்பு வட்டாரங்களின் நினைவுகள் தான்!!!

குடுகுடுப்பை said...

நானும் எனக்கு பிடித்தவர்களை பத்தி போடலாம் ஆனா.............

குடுகுடுப்பை said...

நல்ல உணர்வுப்பூர்வமான பதிவு.

Karthik said...

நல்லாருக்குங்க. :)

Poornima Saravana kumar said...

நல்ல பிரண்டு...

// சந்தனமுல்லை said...
ஹேய்..அமித்து அம்மா..செம டச்சிங்!
அப்புறம் டென்சிங் ஆர்குட்டில் கிடைக்கலாம்..:-)

//

ஆஹா நானும் அதையே தான் நினைத்திருந்தேன்..

தமிழ் அமுதன் said...

ம்ம்ம்.......எதாவது இப்படி எழுதி நல்லா யோசிக்க வைச்சுடுறீங்க!
நானும் எனக்கு நினைவு தெரிஞ்சதுலேர்ந்து ஒரு ரவுண்டு எல்லோரையும் நெனைச்சு பாத்துட்டேன்!

கூடவே, நாலாம் வகுப்புல பாடம் நடத்தின எங்க சாவித்ரி டீச்சரையும்
நெனைக்க வைச்சுட்டிங்க!

இனிமையான பதிவு நன்றி!!!

Unknown said...

அருமையான பதிவு அமித்து அம்மா..உங்க தோழி கிடைக்க வாழ்த்துக்கள்..என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் அன்பை பகிர்வதைத் தவிர? நமக்கு ப்ரியமான சிலர் வாழ்க்கையின் நெடிய பாதையில் காணாமல் போய்விட்டாலும் அவர்கள் எங்கிருந்தாலும் நம் உள்மனம் அவ்வப்போது அவர்களின் நினைவுகளால் எழும்பும். வருடங்கள் பல கடந்திருந்தாலும் என்றேனும் அவர்களை நாம் சந்திக்க நேர்ந்தால் அப்போது பேசுவதற்கு வார்த்தைகள் இருக்காது தோழி! ராணி மிஸ் அற்புதமான பெண்மணி உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன் அவர்களை வாழ்த்த! உங்களைக் கவர்ந்த அந்த இருவர் என்னையும் கவர்ந்துவிட்டார்கள் அமித்து அம்மா! இந்த தொடர் பதிவில் நானும் கலந்துக்கறேன், சரியா?

ராமலக்ஷ்மி said...

//ஏனோ இப்போது ராணி மிஸ்ஸை இன்னமும் அதிகமாக பிடித்தது.//

எனக்கு இன்னும் இன்னும் ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.

நெகிழ வைக்கும் பதிவு.

தமிழ்நதி said...

உங்கள் பதிவைப் படித்தபிறகு நினைத்துப் பார்த்தேன். இப்படி என்னை நெகிழவைத்த நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் அவர்களை நினைத்துக்கொள்வதோடு சரி. பதிவுசெய்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறது. 'ஐடியா'குடுத்திருக்கீங்க. நன்றி:)

Deepa said...

உங்கள் பதிவைப் படித்ததும்சட்டென்று நினைத்தது - "சே! இப்படி ஒரு பதிவு போடணும்னு நமக்கு ஏன் தோணலை?! "
ஹாஸ்ட‌லில் த‌ங்கிப் படித்‌த நானும் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து ப‌ல‌வித‌மான‌ தோழிக‌ள் ஆசிரிய‌ர்க‌ளைச் ச‌ந்தித்து இருக்கிறேன், க‌வ‌ர‌ப்ப‌ட்டிருக்கிறேன். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி வாய் ஓயாம‌ல் வீட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் பேசி அறுத்திருக்கிறேன், அவ்வ‌ள‌வு தான்.

என்ன‌ ஒரு அழ‌கான‌ முய‌ற்சி.. உங்க‌ள் அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி முல்லை யோசனைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும்.

அப்படியா, ஒற்றுமையா நினச்சு சந்தோஷப்படுகிறேன்.

நன்றி சிந்து, நீங்கள் சொல்வது உண்மைதான். தனிமனிதர்கள் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமே.

அப்படியா அபி அப்பா.

நன்றி ஜமால்

ஆமாம் பிரியாக்கா

அப்படியா ஜமால்

நன்றி புதுகை அக்கா, சீக்கிரம் எழுதுங்க.

நன்றி கார்க்கி,

நன்றி நர்சிம் சார்

நன்றி வித்யா

நன்றி அமுதா, (ராணி மிஸ்ஸை ஒரு இக்கட்டான சூழ்நிலையின்போது சந்தித்தாலும் மனதுக்கு இதமாகத்தான் இருந்தது)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ச.முத்துவேல்

நன்றி எஸ்.கே

நன்றி அப்ஸர்

அப்படியா உழவன், ஆச்சரியப்படுத்தறீங்க போங்க.

நன்றி தாமிரா,
நன்றி புதுகை அண்ணா
நன்றி ரம்யா
நன்றி குடுகுடுப்பையாரே, போடுங்க, போட்டபின் வரும் பின்விளைவுகளையும் ஒரு பதிவா போடுங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி கார்த்திக்

நன்றி பூர்ணிமா

நன்றி ஜீவன் (நீங்க கொடுத்த வேலைய நான் கரெக்ட்ட செஞ்சிருக்கேன்னு நம்பறேன்)

நன்றி உமா, எழுதுங்க ப்ளீஸ்

நன்றி ராம் மேடம்

நன்றி தமிழ், நீங்களும் எழுதுனா அத படிச்சு நான் சந்தோஷப்படுவேன். எழுதுங்க ப்ளீஸ்

நன்றி தீபா, என் எழுத்துக்களை வாசிப்பதற்கு.