05 November 2008

வழக்கொழிந்த விளையாட்டுகளும், விழுப்புண்ணும்.

வருங்கால முதல்வரில் எழுதியிருந்த கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகலை? என்ற பாடல் நேற்று முழுவதும் நிறைய ஞாபகங்களை கிளறிவிட்டது. அதன் விளைவே இந்தப்பதிவு.

விளையாட்டு 1
ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது, ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்தது.
ரெண்டு பேர் எதிரெதெரே கையை மேலெ உயர்த்தி, இரண்டு பேரின் கை விரல்களையும் சேர்த்து வைத்துக்கொள்ளுவார்கள். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் சற்றே தள்ளி தள்ளி நிற்பார்கள். எல்லாரும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே அந்தக் கை வளையத்தினுல் நுழைந்து வெளி வரவேண்டும். பாடிக்கொண்டே சட்டென இருவரின் கைகளயும் சேர்த்து லாக் பண்ணுவார்கள் . அப்போது யார் லாக் ஆனார்களோ அவர்கள் அவுட். பூ பூப்பது 7 எண்ணிக்கையை தாண்டிவிட்டால் சற்றே கிட்ட கிட்ட நிற்பார்கள். கட கடவென பாடல் ஓடும், அவுட் ஆகிக்கொண்டே இருப்பார்கள்.

விளையாட்டு 2
கல்லாங்கல்
வேறுதுமில்லை.கருங்கற்களை நிறைய தரையில் பரப்பி கற்களை கையால் மேலெழுந்தவாரியாக விட்டு அப்புறம் பிடிப்பதுதான்.
ஒன்னாங்கா, ரெண்டாங்கா, அஞ்சாங்கா வரைக்கும் போகும். இந்த கருங்கல் எடுத்துக்கொண்டு வர பெரிய பெரிய அக்கால்லாம் எங்களை அனுப்பிடுவாங்க. எங்க வீடு கட்டுறாங்களோ அந்த இடத்தில கொட்டுற ஜல்லியை ஆளாளுக்கு கொஞ்சம் பாவாடையில் கட்டி எடுத்துவருவோம். முதன் முதல் எடுத்து வரும் கற்கள் ஒரு மினுமினுப்போடு இருக்கும். நாளடைவில் கைப் பட்டு கைப் பட்டு ஒரு வழவழப்பு வந்துவிடும். அதன் கோனிக்கல் ஷேப்பும் அடடா, அடடா.
அந்தப் பழைய கற்கள் ஒரு பொக்கிசமாகவே பாதுகாக்கப்படும். விளையாட்டு முடிந்தவுடன் கற்களை எண்ணி எண்ணி சேமித்து வைப்போம்.
விளையாட்டு 3
ரிங்கா ரிங்கா ரோஸஸ், பாக்கெட் ஃபுல்லா ரோஸஸ், அஸ்ஸா புஸ்ஸா ஆல் பார் டவுன்.
வட்டமாக ஓடிக்கொண்டே இருப்பவர்கள் டவுன் என்று சொன்னவுடன் உட்கார்ந்திட வேண்டும். நிற்பவர்கள் அவுட்
விளையாட்டு 4
நொண்டி
தரையில் பாக்ஸ் பாக்ஸாக வரைந்துவிட்டு , கையில் ஒரு சில்லை வைத்துக்கொண்டு முகத்தை மேல் நோக்கி வைத்துக்கொண்டு, போதாக்குறைக்கு கண்ணை மூடிக்கொண்டு அதன் மேல் சில்லை வேறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் ஒரு ஒரு பாக்ஸாக தாண்டா வேண்டும். தாண்டும் போது ரைட்டா, ரைட்டு, ரைட்டா, ரைட்டு, ரைட்டா, கொய்ட்டு. அபீட்டே, அதாங்க அவுட்டு.
விளையாட்டு 5
ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொண்டு சா பூ த்ரி போடுவோம். சா பூ த்ரியில் அவுட் ஆவோர் வெளியில் வந்து கண்மூடி சுவற்றை நோக்கி நின்று கொள்ளவேண்டும்.
மீதியிருக்கும் கும்பல் ஏதாவ்து ஒரு கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த சுவற்றை நோக்கி நிற்கும் பெண்ணின் அருகில் நின்று கொண்டு “கலர் கலர் வாட் கலர், டூ யு நோ” என்று கேட்கவேண்டும். ரெட் - இல்ல, ப்ளு - இல்ல, மஞ்சள் - இல்ல, க்ரீன் - இல்ல. பச்ச - ஆமாம். எடு ஓட்டம் ஆளாளுக்கு எங்கெங்கேயோ ஓடுவோம். துரத்திவந்தவர் நம்மைப் பிடித்துவிட்டால், நாம்தான் சுவற்றை நோக்கி நிற்கவேண்டும்.
விளையாட்டு 6
சொப்பு சாமான் விளையாட்டு - இது அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும். அறுபத்து மூவர் எப்போ வரும் என்று காத்திருந்து விதம் விதமாய் மண்ணில், ஸ்டீலில் சொப்பு சேர்த்த காலம் உண்டு.
(அம்மா அது என்து மா, அவ எடுத்துனு போயிட்டாமா. இப்ப அவுள்துனு சொல்றாமா. கேட்டு வாங்கிக்குடுமா.
சனியனே, வீட்டுக்குள்ளியே வெச்சிக்கினு விளையாடுனு சொன்னா கேக்கறியா, எடுத்துன் போய் வெளிய வெச்சிக்கினு வெளயாடிட்டு இப்ப அவ எடுத்துக்கினா, இவ எடுத்துக்கினா, இனிமே சொப்புன்னு எங்கிட்ட வந்து கேட்டுப்பாரு.)
ஓகே கேம் ஓவர்.
இப்பல்லாம் இந்த மாதிரி டொமஸ்டிக் கேம்ஸ் யாராவது விளையாடுறாங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
இப்படி இன்னும் நிறைய உண்டு. சில ஞாபக வலையில் சிக்கவேயில்லை. ஆனால் எனக்கு அவ்வளவாய் விளையாட்டு பிடிக்காது. கல்லாங்கல் தவிர மற்ற விளையாட்டுகள் சற்றே அலர்ஜிதான். வேடிக்கை பார்க்கப்பிடிக்கும். ஓடிப்பிடிக்கும் அத்தனை விளயாட்டில், சீக்கிரம் கொயிட் (அவுட்) ஆகிடுவேன். நமக்கு எப்பவுமே வாசிப்புதான். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா போதும்.
ஸ்கூலில் எனக்கு பிடிக்காத க்ளாஸ் கேம்ஸ் களாஸ், முக்கால்வாசி நாள் உடம்பு சரியில்லை என்று காரணம் காட்டிவிட்டு லைப்ரரியில் உட்கார்ந்து கொள்வேன். இதனால் எனக்கும் கேம்ஸுக்கும் செம அண்டர்ஸடாண்டிங். ஒரு நாள் கேம்ஸ் என்னை கூப்பிட்டு அனுப்பியது, போனேன் என்ன நீ கேம்ஸ் க்ளாஸுக்கே வரதில்ல. எப்ப பாத்தாலும் லைப்ரரியிலே உக்காந்து இருக்கியாம். (ஆஹா எவளோ போட்டு குடுத்துட்டாயா) வந்தாலும் ரிங் தவிர எதையும் விளையாடறதில்ல. ம் என்ன கதை உன்னுது. ஸ்போர்ட்ஸ் டே வரப்போகுது இன்னிக்கு ஒழுங்கா போய் கொக்கோ விளையாடற. நான் இங்கருந்து வாட்ச் பண்ணுவேன். போ . ....... இல்ல மிஸ். எனக்கு,,,,,,,,,,,,,, போய் விளையாடு. ம் வருவதை எதிர்கொள்வோம் என்று கொக்கோ விளையாடப் போனேன். ரூல்ஸும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது.
வரிசையாய் ஒரு பத்து பேரு எதிரும், புதிருமாய் ஒடும் வாக்கில் உட்கார்ந்திருந்தார்கள். நான் போய் கடைசியாய் அதே போல் உட்கார்ந்தேன். உடனே கோ கோ என்று ஒரு குரல் கேட்டது, முதுகில் பலமாய் ஒரு அடி (ஆக்சுவலா அது ஒரு தட்டுதான்) நாம் தான் மிக திடகாத்திரமான ஆளாயிற்று, நமக்கு அது அடியாகிவிட்டது. எங்கே ஓடுவது, தட்டிய வேகத்திலேயே கீழே விழுந்து வாயில் மண்ணைக் கவ்வி, முட்டி, முழங்கை சிராய்த்து, விழுப்புண் பலமாகிவிட்டது. யாரோ என்னைக் கைத்தாங்கலாக க்ளீனிக் அழைத்துப் போனார்கள். வேறு யாருமல்ல போட்டுக்கொடுத்த புண்ணியவதி, என் க்ளாஸ் லீடர்தான் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துப் போனாள்.
ம்ஹும் வீரர்களுக்கு இதெல்லாம் சகசம்.




25 comments:

தமிழ் அமுதன் said...

என்னங்க பொம்புள புள்ளைங்க வெளையாடுற
ஆட்டமா சொல்லி இருக்கீங்க!

பசங்க ஆடுற! கோலி,பம்பரம்,
கிட்டி புள் இதல்லாம் ஆட மாட்டிங்களா?

ஆனா எங்க ஊருல பொம்புள புள்ளைங்க எல்லாம்
கோலி,பம்பரம்,கிட்டி புள் எல்லாம் ஆடுவாங்க!

தமிழ் அமுதன் said...

நீங்க ஏங்க கோ கோ எல்லாம்
ஆடி மண்ணை டேஸ்ட் பண்ணுறீங்க
ஒரு ஸ்கிப்பிங்,தாயம்,பல்லாங்குழி
மாதிரி வீர வெளயாட்டுல எறங்கி
ஆடலாம்ல!

அமுதா said...

ரொம்ப நாளா இதைப் பற்றி போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போட்டுவிட்டீர்கள். என் தாய் என் பெண்ணுக்கு பல்லாங்குழி விளையாட சொல்லிக் கொடுத்தார், ஆர்வத்துடன் அவள் விளையாடுவதைக் கண்டு ஒருகுடம், தாயம், பரமபதம், பாண்டி, கல்லாட்டம் என்று சொல்லிக் கொடுக்க, அவர்களுக்கு பொழுது நன்றாக போனது. என்ன, அவள் வயது பிள்ளைகள் விளையாட இருந்தால் நன்றாக இருக்கும். இயலும் பொழுது முயன்றாலும், அவ்ர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. "பூ பறிக்க வருகிறோம்" விளையாடி உள்ளீர்களா? இந்த பதிவு சிறு வயது நினைவுகளைத் தூண்டி விட்டது.

சந்தனமுல்லை said...

வாவ்! சூப்பர் போஸ்ட்! ரொம்ப சுவாரசியம எழுதியிருக்கீங்க!! என்னுடைய ஞாபகத்தையும் கிளறி விட்டுட்டீங்க!! கேர்ஸ்-க்கு எப்போவும் கோ-க்கோதான் விளையாட விடுவாங்க போல!! :-)))..சாகசம் தான் போங்க!

மோனிபுவன் அம்மா said...

என்னங்க நீங்க லாக் அன்டு கீ விளையாட்டு எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு
சீட்டு குளுக்கி போட்டு விளையாடும் விளையாட்டு
அப்புறம் புத்தகத்தில் புள்ளி வைத்து பாடம் நடத்தும் போது விளையாடும் விளையாட்டு
இதை எல்லாம் விட்டுவிட்டிங்க மேடம்.
அதை விட் ரொம்ப இன்டரஸ்டிங்க படிக்கும் போது மிஸ்சுக்கு ஒரு ஒரு பெயா் வைப்பது இது போன்றவை எல்லாம் எவ்வளவு சந்தோஷத்தை தருகிறது.
நம்முடைய சிறு வயது நியாபகங்கள் கண் முன்னே நிற்கிறது.

புதுகை.அப்துல்லா said...

அட! ஆச்சர்யமா இருக்கு??? நீங்க சென்னையில பிறந்து வளர்ந்த ஆளு. இதெல்லாம் எங்க ஊர்நாட்டுல உள்ள விளையாட்டாச்சே!!!! சிட்டில உள்ள பிள்ளைங்களுமா இதெல்லாம் விளையாடுனாங்க‌????

விஜய் ஆனந்த் said...

:-)))...

சூப்பர் கொசுவத்தி!!!

பழமைபேசி said...

நம்ம பக்கத்துல, அப்பப்ப நாம இதெல்லாம் எழுதறதுதான்.... அப்பப்ப வந்து பாருங்க...

http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_09.html

ராமலக்ஷ்மி said...

இந்த விளையாட்டுக்கள் எல்லாமே சிறுவயதில் நானும் விளையாடியவை. நினைவுகளை மலரச் செய்ததற்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க ஜீவன்,நன்றி வருகைக்கு
கோலி,பம்பரம்,கிட்டி புள்
அப்படியா, எங்க ஊருல இந்த விளையாட்டெல்லாம் ஆம்பள புள்ளைங்கதானே விளையாடுவாங்க.

நீங்க கரெக்ட்டா சொல்லீட்டீங்க ஜீவன், நம்மளோட வீர விளையாட்ட்டே தாயம், பல்லாங்குழி, கல்லாட்டம் தான். நமக்கெல்லாம் இந்த சீட்டு தேய்க்கறதுதான் கை வந்த கலை.
இது அப்பவே தொடங்கியாச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா.

என்ன, அவள் வயது பிள்ளைகள் விளையாட இருந்தால் நன்றாக இருக்கும்.
பிள்ளைகளுக்கு இண்ட்ரஸ்ட் இருக்கத்தான் செய்யுது, ஆனா பெரியவங்களுக்கு தான் நேரமும், பொறுமையும் இருப்பதில்லை.


இயலும் பொழுது முயன்றாலும், அவ்ர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
அவர்களின் எனர்ஜி நமக்கில்லை.

"பூ பறிக்க வருகிறோம்" விளையாடி உள்ளீர்களா? இந்த பதிவு சிறு வயது நினைவுகளைத் தூண்டி விட்டது
ம். நல்லாவே. அப்படியா, நீங்களும் உங்கள் அனுபவங்களை பதிவிடுங்களேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாவ்! சூப்பர் போஸ்ட்! ரொம்ப சுவாரசியம எழுதியிருக்கீங்க!!
நன்றி முல்லை.

என்னுடைய ஞாபகத்தையும் கிளறி விட்டுட்டீங்க!!
ஆமா உங்க பதிவைப் பார்த்தேன்.

கேர்ஸ்-க்கு எப்போவும் கோ-க்கோதான் விளையாட விடுவாங்க போல!! :-)))..சாகசம் தான் போங்க!

சாகசமா, ஒரே சங்கடமாயிடுச்சி போங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட! ஆச்சர்யமா இருக்கு??? நீங்க சென்னையில பிறந்து வளர்ந்த ஆளு. இதெல்லாம் எங்க ஊர்நாட்டுல உள்ள விளையாட்டாச்சே!!!! சிட்டில உள்ள பிள்ளைங்களுமா இதெல்லாம் விளையாடுனாங்க‌????

நன்றி புதுகை அண்ணா.
அட கிராமத்துல ஆரம்பிச்சாலும் இந்த விளையாட்டெல்லாம் ஃபர்தரா டெவலப் ஆனதே நம்ம சிட்டிலதான்.
இன்னொன்னும், இதெல்லாம் அரசியல் எட்டிப்பார்க்காத விளையாட்டு. இதற்கு கிராமம், சிட்டியெல்லாம் கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க புவனேஷ் அம்மா.
என்னங்க நீங்க லாக் அன்டு கீ விளையாட்டு எனக்கு ரொம்ப பிடித்த
விளையாட்டு
அப்படியா ஆடலாமா.

சீட்டு குளுக்கி போட்டு விளையாடும் விளையாட்டு
அப்புறம் புத்தகத்தில் புள்ளி வைத்து பாடம் நடத்தும் போது விளையாடும் விளையாட்டு இதை எல்லாம் விட்டுவிட்டிங்க மேடம்.
சரி நீங்க பதிவிடுங்க.

அதை விட் ரொம்ப இன்டரஸ்டிங்க படிக்கும் போது மிஸ்சுக்கு ஒரு ஒரு பெயா் வைப்பது இது போன்றவை எல்லாம் எவ்வளவு சந்தோஷத்தை தருகிறது நம்முடைய சிறு வயது
ம். சிறியவர்களாகவே இருந்திருக்கலாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:-)))...

சூப்பர் கொசுவத்தி!!!

வருகைக்கு நன்றி விஜயானந்த்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி பழமைபேசி உங்களின்
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

கண்டிப்பாய் வந்து பார்க்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ராமலக்ஷ்மி said...

வருகைக்கு நன்றி ராமலஷ்மிம்மா.
நினைவுகளை அசைபோடுஙகள். உங்களை அறியாமலேயே சிரித்துவிடுவீர்கள். இந்த கோ கோ பற்றி எழுதும்போது, என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

Dhiyana said...

ரொம்ப அருமையான பதிவு. படிக்கும் பொழுதே விளையாடுவதைப் போல ஒரு பிரமை.

குடுகுடுப்பை said...

என்னங்க பொம்புள புள்ளைங்க வெளையாடுற
ஆட்டமா சொல்லி இருக்கீங்க!

பசங்க ஆடுற! கோலி,பம்பரம்,
கிட்டி புள் இதல்லாம் ஆட மாட்டிங்களா?

/
அதானே?
/

Princess said...

சுப்ப்பரா இருக்கு பதிவு...சின்ன வயசு Friends எல்லாம் ஞாபகம் வருது
அமித்து அம்மா,.நீங்க அம்மா விளையாட்டு,..டீச்சர் விளையாட்டு,..எல்லாம் விளையாடி இருக்கீங்களா? நான் BANK விளையாட்டெல்லாம் கூட விளையாடி இருக்கேன் :)

Anonymous said...

கல்லா மண்ணா , ஆடு புலி ஆட்டம், அஞ்சு கல்லு ஆட்டம், கம்பம் தாவும் ஆட்டம், குரங்கு போன்ற விளையாட்டுகளை விட்டு விட்டீர்களே...

பி.கு : இவை எல்லாம் நான்கு முதல் பண்ணி இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் ஆட கூடிய விளையாட்டுகள்..

Jeevan said...

ஹா ஹா.... பழக நியாபகங்களின் கிளர்ச்சி.
இதில் நான் விளையாடியது 1, 2, 5 மட்டும்.
சித்தி, பக்கத்து விட்டு அக்க எல்லோரும் கல்லாங்கா
விளையாடுவாங்க, நாங்கலும் வருவோம்னு சொல்ல அவங்க
ஒரு அஞ்சு கல்லு குடுத்து அனுப்பிடுவாங்க. இல்ல அவங்க
ஜெயிச்ச கல்ல வச்சி விளையாரோம்னு அடிச்சிக்குவோம்.

cheena (சீனா) said...

ஓஓ நானும் பொம்பளெப் புள்ளங்க கூட சேந்து பாண்டி கல்லாங்கா கண்ணா மூச்சி எல்லாம் விளையாடி இருக்கேன் - அதெப் பத்திக் கூட பதிவு போடணும்

Anonymous said...

கல்லாங்கல்லை நாங்க 5 கல் விளையாடறதுன்னு சொல்வோம். இந்த மாதிரி விளையாட்டெல்லாம்,hand - eye coordination, multi tasking போன்ற அத்தியாவசிமான skills. என்ன கொடுமைன்னா இப்ப விளையாடறதில்லை நானெ. :)

Sanjai Gandhi said...

அ.மம்மி.. திச் இஸ் டூ மச்.. :(
என்ன கஞ்சத் தனம்? விரிவா எல்லா விளையாட்டுக்களும் எழுதலாம்ல.. ஜீவன் சொன்ன மாதிரி பெரும்பாலும் இதெல்லாம் பெண்கள் விளையாட்டு. அதனால நீங்க இன்னும் விரிவா எழுதுங்க..

ஒரே பதிவில் 6 விளையாட்டு போடறது தப்பு... தனித் தனியா எழுதுங்க.. :)

//கல்லாங்கல் //
இதை அஞ்சாங்கல் என்று சொல்வோம்.

அப்டியே இதை பாருங்க.. கொசுவர்த்தி ரொம்ப பலமா இருக்கும் :)