இன்று காலை ரயில் நிறுத்தம், சற்றே மழை நின்றிருந்த நேரம்.ஓட்டமும், நடையுமாக உள்ளே நுழைந்த என்னை சற்றே நிறுத்தி நிதானப்படுத்தியது பின்வரும் உரையாடல்.
இரண்டு முதியவர்கள் மெல்ல படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஆணுக்கு கொஞ்சம் வயது அதிகமிருக்கலாம். அவரை கை பிடித்து அழைத்து செல்லும் வயதான பெண்மணிக்கு அவரை விட சற்று குறைவான வயது இருக்கலாம்.
பாட்டி: உன்னை உங்க வூட்டுல நல்லா பாத்துக்கறாங்களா.
தாத்தா: ஆம். அதுக்கின்னா. நல்லாதான் பாத்துக்குறாங்கோ.
பாட்டி: ம். ஆமா உங்கிட்ட பணம் இருக்குது. பென்சன் வருது. நல்லாதான் பாத்துப்பாங்கோ. என்ன சொல்லு.
தாத்தா: ஏன் இன்னா
பாட்டி: ம். இருக்க சொல்லோ எல்லா நல்லாதான் இருந்தது. இப்ப நம்மகிட்ட ஒன்னியும் இல்ல. நாய் படாத பாடா இருக்கு. தோ. காலீல இருந்து இந்த மழைல ஒரு டீ த்தண்ணிக்கு விதி இல்ல வூட்டுல. யாரும் இன்னான்னு கேக்கறது இல்ல. இன்னாத்த சொல்றது.
இன்னமும் பேசிகொண்டே நடக்கிறார்கள். அதற்குள் எனக்கு வர வேண்டிய ட்ரெயின் வரவே நான் அவர்களை வேகமாக கடந்துவிட்டேன்.
ஆனால் அந்த உரையாடல் இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. நம்ம வீட்டுல இருப்பவர்களை நாமே கவனிக்காமல் போனால் பின் யார் கவனிப்பார். வீட்டிலுல்ல வயதானவர்கள் மீது இப்படி வெறுப்பை உமிழ எப்படி இந்த சமூகம் கற்றுக்கொண்டது. வயதான பின்னர் அவர்களை நம் பெற்றோர்களாய் பார்க்க மறந்தது ஏன். இப்படியாய் ஏகப்பட்ட கேள்விகள்.
இதெல்லாம் சரியே. ஆனால் கொஞ்சம் "கொசுவர்த்தி" சுத்தி நினைவுகளின் பின்னால் சென்றால், நான் சரியல்ல.
என் அப்பா மிகவும் வயதானவர். மிகவும் என்றால், என்னை அவரோடு பார்ப்பவர்கள் நான் அவரின் பேத்தி என்று சொல்லுமளவுக்கு. எனக்கும் என் அக்காவுக்கும் 17 வயது வித்யாசம். என் அக்காவின் திரும்ணத்தின் போது எனக்கு ஒரு வயதுக்கும் குறைவே.
என் அப்பாவுக்கு வயதான காரணத்தினாலேயே என் பள்ளிக் காலத்தில் மனதளவில் பட்ட வேதனைகள் ஏராளம். எல்லாருக்கும் ப்ராக்ரஸ் கார்டு வாங்க அப்பா வருவார்கள். நான் அவர் வரக்கூடாது என்று அழுவேன். ஏனெனில் அவர் என் ஸ்கூலுக்கு வந்தால் என் சக தோழிகள் என் காது படவே கிண்டல் செய்வது என்னை மிகவும் பாதித்தது. எல்லாவற்றிற்கும் என் அக்காவையே அழைத்து செல்ல நேர்ந்தது.
பள்ளியில், வெளியில் என்று எங்குமே தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தேன். பள்ளியில் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளமாட்டேன். அதிகம் யாருடனும் பேசமாட்டேன்.
யாரவது அப்பாவுடன் செல்வதைப் பார்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அந்த ரெண்டும் கெட்ட வயது அப்படியோ, என்னால் எதையும் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
பாதிப்பின் உச்ச கட்டம் அவரை கண்டாலே எனக்கு வெறுப்பாய் வரும்.
இப்படியாக நிறைய பாதிப்புகள். இந்த பாதிப்பெல்லாம் சேர்ந்து ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை இப்படி முடியும்.
இப்படியாக
எனக்கு இன்சியல் மட்டும் தந்துவிட்டு
எதிலும் என்னுடன் வராமல்
கடைசியில் பாத பூஜைக்கு மட்டும் வந்து
முன்னிற்பாயோ
நீ என் தந்தை
என்று
சபையோர் கூற.
இக் கவிதை எழுதி சில வருடங்கள் கழித்து எனது திருமணம் நடந்தது. என் அப்பா உயிரோடு இருந்தும் பாத பூஜை செய்துக்கொள்ளவில்லை. காரணம் அதற்கு சில மாதங்கள் முன்னர் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, கண் பார்வை மங்கிவிட்டது. அவரால் எழக் கூட முடியாத உடல்நிலை. அவரை அவரின் உடல்நலம் சரியாய் இல்லாதபோது கூட சரிவர கவனித்துக்கொண்டது கிடையாது. எல்லாம் என் அக்காவே செய்வாள்.(ஆனால் இப்போது நினைத்தால் அழுகையாய் வருகிறது)
அந்தக்கவிதையை கட்டாயம் அவர் படித்திருக்க மாட்டார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் அவர் என் திருமணத்திற்கு வரவும் இல்லை. அவர் காலில் விழ்ந்து ஆசி பெரும் நிகழ்வும் வாய்க்கவில்லை. (என் கவிதை எப்படி அவரின் காதில் விழுந்திருக்ககூடும். சே நான் எழுதிய அந்த வார்த்தைகள் .)
இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா, நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன். நான் ஒரு பாவி அப்பா. எந்த ஜென்மத்திலாவது இதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா.
27 comments:
மனம் உணரும் தவறை இறைவனே மன்னிக்கும் போது உங்க அப்பா மன்னிக்க மாட்டாரா என்ன?
//இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா, நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன். நான் ஒரு பாவி அப்பா. எந்த ஜென்மத்திலாவது இதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா.//
:((
கவலை வேண்டாம் அக்கா கண்டிப்பாய் மறக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் மிக அதிகம் உண்டு!
பெரியவர்களுக்கும் சரி பெற்றோர்களுக்கும் சரி !
//நம்ம வீட்டுல இருப்பவர்களை நாமே கவனிக்காமல் போனால் பின் யார் கவனிப்பார்.//
உணர்கிறேன்! :(
ரெண்டாம் கெட்ட வயதில் செய்த தவறுக்கு வருந்த தேவை இல்லை. சிறு வயதில் ஏற்பட்ட எண்ணமே தொடர்ந்தது இருந்துள்ளது. நாம் நமது அடுத்த சந்ததிக்கு நாம் கற்ற பாடத்தை சொல்லிகொடுத்தாலே அது பெரியவர்களுக்கு நாம் செய்கின்ற மரியாதையாய் இருக்கும். கலக்கம் தேவை இல்லை.
குறிப்பு : தங்களுக்கு பற்றி வந்து இருக்கும் விடயத்தை எனக்கும் கொஞ்சம் அனுப்புகிறீர்களா. என்னுடைய பதிவில் மெயில் விவரம் கொடுத்துளேன்.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.அப்பாக்கள் காட்டும் பாசம் ஒரு அப்பாவாய் எனக்கு தெரியும். ஒரு மகனாய் என் அப்பாவின் பாசம் புரியும்.
நாம் தவறு செய்தோம் அதை நம் குழந்தைகள் செய்யாமால் பார்த்துக்கொள்வோம்.
என்ன ஒரு அழுத்தமான பதிவு
போகிற போக்கில் போட்டு விட்டீர்கள்?
''நான் சரி அல்ல'' என்று நீங்கள் சொல்லி
இருப்பது ''நீ சரியா'' என்று என்னை கேட்பது போல
இருக்கிறது! என் அப்பா, அம்மா இப்போது
என்னுடன் இல்லாவிட்டலும் என் அருகில் என்
கவனிப்பில் இருக்கிறார்கள்! உங்கள்பதிவின் பாதிப்பினால்
என்னை பற்றி சொல்கிறேன்!
மேலும் உங்கள் தந்தையை பற்றி சொன்ன
நீங்கள், உங்கள் மாமனார்,மாமியார் பற்றி
சொன்னால் மேலும் சிறப்பாக இருக்கும்
தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட உங்களின் நேர்மை வியப்புக்கும், பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.
உங்களைப் போலவே நானும் என் பெற்றோருக்கு வயதான பிறகு பிறந்தவன்தான்.
(அண்ணனுக்கு திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, நான் பிறந்தேன்.)
உங்களைப் போலவே நானும் என் தந்தையை அவர் வாழும் காலத்தில் மதித்ததில்லை.
இத்தனைக்கும் என் அறிவு, திறமை, அவ்வளவு ஏன்...?, சில மாதங்கள் முன்பு வரையிலான சாப்பாடு வரையில்.... எல்லாமே அவருடையதுதான்.
அவ்ர் இறப்பதற்கு சுமார் ஒரு வருடம் முன்புதான் அவரது முழு அருமை, உணர்ந்து...
அன்பின் ஊற்றுக்கண் திறக்கப்பட்டு...,
அவரிடத்தில் பெற்ற கடலளவு நன்மையில், கடுகளவேனும் திருப்பித் தர முழு இருதயத்துடன் தவமிருக்கத் தொடங்கினேன்.
என் தவம் ஈடேறுமுன்னே தந்தை என்னை விட்டுச் சென்றார்.
இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வினாடியிலும் அழுகிறேன்.
எத்தனை முறை கதறினாலும், அழுதாலும், இழந்த அந்த நாட்கள் திரும்ப வரப்போவதில்லை.
நான் சாகும் அந்த வினாடி வரை என் மனம் முழுக்க இந்த வலியின் வேதனை தீரப்போவதில்லை.
என் தந்தை குறித்த சிறு பதிவு இஙகே...!
நான் வளர்ந்த விதம் குறித்த பதிவு இங்கே...!
Akka don't worry..!! :((
மன்னித்தால் நல்லாதான் இருக்கும்
மன்னித்தால் நல்லாதான் இருக்கும் புதுகை அண்ணா & ஆயில்யன்
உணர்ந்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்தவேண்டும் ஆயில்யன்
நன்றி, மெயிலிடுகிறேன் SK
நன்றி ஜீவன். உண்மையில் போகிற போக்கில் தான் ஆரம்பித்தேன். ஆனால் அதை சொல்ல எந்த தகுதியும் எனக்கில்லை என்று உணர்ந்தபின் தான் என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கும் இந்த பதிவு உருவானது.
மாமனார், மாமியார் அவர்கள் எனக்கு இன்னொரு தாய், தந்தை எனக்கு மட்டுமல்ல என் பெண்ணுக்கும். அவர்களுக்கே உரிய ஒரு சில சில்மிஷங்கள் இருந்தாலும் என் பெற்றோர்களை நினைத்துக்கொள்வேன். இதுவும் ஒருவகையில் எனக்கு ப்ராயச்சிததமாகவே படுகிறது.
என் மாமனாரை பற்றி சொல்லும்போது ஒரு முக்கியமான விசயத்தை என்னால் நினைவு கூற முடிகிறது. எனக்கு திருமணமானபின் வந்த பிறந்த நாள் அன்று, நான் வேலைக்கு கிளம்பிவிட்டேன், ரயில் நிறுத்தத்திற்கு நடந்து கொண்டிருந்தேன். சட்டென சைக்கிளில் வந்த் அவர் என் கையில் ஒரு முழம் பூவையும், 10 ரூபாயையும் கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றார்.
என் அப்பாவே, ஏன் என் கணவருக்கே தோன்றாத, செய்யாத இதை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கும். இந்த ஒரு நினைவொன்றே குடும்ப சூழ்நிலைகளில் ஏதாவது ப்ரச்சினைகள் தோன்றினாலும் என் மாமனார் மீது எனக்கு எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது.
நன்றி அந்தோணிமுத்து. உங்களின் பதிவை படிக்கிறேன்.
ஆமாம்.
எத்தனை முறை கதறினாலும், அழுதாலும், இழந்த அந்த நாட்கள் திரும்ப வரப்போவதில்லை.
நான் சாகும் அந்த வினாடி வரை என் மனம் முழுக்க இந்த வலியின் வேதனை தீரப்போவதில்லை.
ஆமாம். வலித்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. நிழலின் அருமை வெயிலில் புரிகிறது. ஆனால் மரம் வெட்டுப்பட்டு விட்டது.
OK Srimaa
ரொம்ப நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா. மெயில் கிடைத்தது.
AMMA said...
மன்னித்தால் நல்லாதான் இருக்கும்//
அவர் அப்பா, அவர் மன்னிக்காமல் பிறகு யார். இதெல்லாம் தெரியாமல் நடப்பது.
இன்னும் சொல்லப்போனால் உங்கள் தப்பே அல்ல, நம் சமுதாயம் பிறர் பழிப்பார்களோ என்ற வாழ்வதற்கு பழக்கப்பட்டதால் வந்ததுதான் இதெல்லாம்.
:-(((....
;-) Dont Eavesdrop! Things happen for a cause!
Did you see the movie Cheran's Thavamai Thavamirunthu?
:( என்ன சொல்வது.. நீங்கள் வெளிப்படையாக தவறை ஒப்புக்கொள்வது தவறை உணர்வதும் பாராட்டப்படவேண்டியது...
சில சமயங்களில் தெரியாது சில தவறுகளை செய்து விடுகிறோம். தெரியும் பொழுது உணர்ந்து உளமார மன்னிப்பு கேட்கும் பொழுது நிச்சயம் அது மன்னிக்கப்படும். என்றுமே நம் பெற்றோர்க்கு நாம் குழந்தைகளே... அவர்கள் நிச்சயம் மன்னித்திருப்பார்கள்... தெரியாமல் செய்து விட்டாள் என்று.
அடுத்து நம் கடமை குழந்தைகளுக்கு பெரியோரை மதிக்க கற்றுக்கொடுத்தல்...
இதை இப்பொழுது வெளிப்படையாகக் கூறும் பொழுதே நீங்க பண்பட்டுட்டீங்கன்னு தெரியுது. அதால இனி இதை நினைத்து வருந்த வேண்டாம் என்பது என் கருத்து. ஆனா, உங்கக்கிட்ட ஒருவேளை உங்க வீட்டை சேர்ந்த யாராவது மனசுவிட்டு பேசி இருந்தா பிரச்சினையே இருந்திருக்காது
அறியாத வயதில் தெரியாத செய்த தவறு. குஞ்சு மிதித்தால் கோழிக்கு வலித்ததில்லை. ஆனால் இப்போது வலிக்கும் உங்கள் மனதுக்கு ஆறுதல் காலம் கடந்த பின்னேயாயினும் தவறுகளை உணர்ந்து கொண்டது. அக்கணமே அவை மன்னிக்கப் படுகின்றன.
என் பெற்றோரை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்திற்று இந்த பதிவு...
நன்றி!
நன்றி முதல் வருகைக்கு விஜய் ஆன்ந்த்
நன்றி முதல் வருகைக்கு ரமேஷ்
நன்றி முத்துலெட்சுமி madam
இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போது என் தந்தையைப் பற்றி நான் எழுத நினைக்கவே இல்லை. அந்த முதியவர்களின் உரையாடலை மட்டுமே பதிவிட எண்ணிணேன். எழுதியபின் படித்து பார்த்து அதை எழுதும் தகுதி எனக்கு கொஞ்சமும் இல்லை என்றானபின் என் தந்தையை பற்றி எழுதினேன். அப்போது மிகவும் பாரமாக இருந்தது.
உஙல் அனைவரின் கருத்தும் என்னை ஒரு குற்ற உணர்வில் இருந்து விடுபட்டது போல செய்துவிட்டது. நன்றி உங்களனைவருக்கும்
அன்பின் அமித்து அம்மா
தவறுகள் அறியாப் பருவத்தில் செய்யப்படுபவை. ஏதோ ஒரு காரணம் அத்தவறுகள் செய்வதற்கு. ஆனால் வயது ஆக ஆக, நாம் பெற்றோரின் அன்பிற்கு ஏங்குகிறோம். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். தவறை உணரும் போது எல்லை மீறி விடுகிறது. ஒன்றும் செய்ய இயலாத நிலை.
மனம் வருந்தாதீர்கள். எந்தப் பெற்றோரும் பிள்ளைகள் மீது வன்மம் பாராட்டுவதில்லை. அவர்களின் ஆசி நாம் விரும்பினாலும் விரும்பா விடாலும் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம்.
:((
//மனம் உணரும் தவறை இறைவனே மன்னிக்கும் போது உங்க அப்பா மன்னிக்க மாட்டாரா என்ன?//
Ithai Naanum vazi mozikiren..
:(, கவலை படாதீங்க.
\\'நான் சரி அல்ல'' என்று நீங்கள் சொல்லி
இருப்பது ''நீ சரியா'' என்று என்னை கேட்பது போல
இருக்கிறது!\\
enathu nilayum ithuthaan ...
அன்பின் அமித்து அம்மா
வலைச்சரம் மூலம் வந்து இடுகையினைப் படித்து மறு மொழி போட வந்தால், நானே ஏற்கனவே போட்டிருக்கிறேன். அம்மறு மொழிக்கு ஒரு ரிப்பீட்டேய் இப்ப போடறேன்
Post a Comment