22 January 2010

வலி’யின் ஆசை

அனேகமாய் எல்லோருக்கும் தன் பெயர் என்றில்லாது இன்னொரு பெயரும் உடன் வந்து கொண்டேயிருக்கிறது வாழ்வு முழுதும். அஜ்ஜுமா, புஜ்ஜுமா என்று பால்யத்திலோ, உடல் அமைப்பை வைத்து ஒல்லி, குண்டு, மேக்குப்பல்லு, டப்சா, க்ரைண்டர், அரைட்ரவுசர் (இன்னும் அவரவர் உடல் வசதிக்கேற்ப...) என பதின்மத்தில் ஆரம்பித்து பருவம் வந்தபிறகும் நீண்டு, நிலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலருக்கு அவரின் வித்தியாசமான குணநலன்களே பெயராய் அமைந்துவிடுவதுண்டு, நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைக்கூட சில சமயம் யாராவது அது கெடக்குது பைத்தியம், லூசு என்று அழைத்திருக்கக்கூடும்! நாமும் யாரையாவது.

மேற்கூறியது எதுவுமில்லாது ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா? இல்லை அழைத்திருப்பதை கண்டிருக்கிறீர்களா?

காக்காவலிப்பு என்ற நோயின் பின்பாதியில் இருக்கும் வலி’ என்பதுதான் மூர்த்தியின் காரணப் பெயர். கரேலென்று, நெட்டை, தாட்டியான உருவம். உயரத்திற்கு ஏற்ற உடம்பு. எப்போதுமிருக்கும் தாடி. மூர்த்தி தன் முப்பத்தெட்டு வயது வரைக்கும் வேலைக்குப் போனதில்லை, குழந்தைகளை கொஞ்சியதில்லை. யாரோடும் சுமுக உறவு பாராட்டியதில்லை.நண்பர்களென்று யாருமில்லை. சும்மாவே பொழுதோட்டினாலும் புறம் பேசியதில்லை.வீட்டிலோ இல்லை சுற்றுவட்டாரத்திலோ எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் அண்டியதில்லை.

தட்டு நிறைய சோறு போட்டு திங்கத்தெரியும். கால் பரப்பி தூங்கத் தெரியும். கோபம் வந்தால் கல்லும், பாட்டிலும் வீசி எதிரே இருப்பவர் மண்டையை உடைக்கத்தெரியும். ஏண்டா இப்புடி செய்யுற? என்று வேதனையுடன் கேட்கும் தன் அம்மாவை எல்லா உன்னாலதாண்டி, என்னை ஏன் இப்புடி பெத்த? என்று கேள்வி கேட்டுக்கொண்டே எட்டி உதைக்கத்தெரியும்.

இதையும் தவிர்த்து மூர்த்திக்கு தாயபாஸ் ஆடத் தெரியும். ஆனால் மூர்த்தியோடு தாயபாஸ் ஆட எதிராளிக்கு எப்போதும் கொஞ்சம் மனக்கிலேசம் இருக்கும். இந்த வலிக்காரனுக்கு எப்ப கோவம் வரும்னு யாருக்குத் தெரியும். தொடர்ந்து தோத்துப்போயிட்டான்னா அப்புறம் ஆட்டத்த கலைச்சிட்டு கல்லெறிஞ்சுட்டுன்னு போயிடுவானே என்ற எண்ணமிருந்தாலும் சும்மா போற பொழுதை இப்படி தாயபாஸையாவது ஆடி போக்க வைக்கலாமே என்று ஜோடி போட்டு ஆடுவதுண்டு. காசு வெச்சி ஆடலாமா? ம், அதிகபட்சம் அஞ்சு ரூபா வரைக்கும் ஆடுவார்கள். அதுக்கும் மேல போச்சுன்னா யாராவது ஒருத்தருக்கு அன்னிக்கு பீடி, டீ செலவுக்கு காசு பத்தாது.

அமாவாசை இல்லாமல் தீபாவளி, பொங்கல் வந்தால் மூர்த்தி ஆளே வேறு மாதிரியிருக்கும். சவரமெல்லாம் செய்து கொண்டு, அம்மா வாங்கித்தரும் புதுவேட்டி, சட்டை போட்டுக்கொண்டு தெருவில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருக்கும். மூர்த்திக்கு தினமும் குளிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் இழுப்பு வந்து எங்காவது தெருவில் விழுந்து மண்ணும், சேறும் ஆகிவிட்டால் அதற்கு மறுநாள் வெந்நீர் வைத்து கட்டாயம் குளித்துவிடும்.

அமாவாசை, பவுர்ணமி வரும் போது மட்டும் குள்ளம்மா கிழவி மூர்த்தியை எங்கேயும் போகவிடாது. எங்கயாவது போயி வலி வந்து விழுந்துட்டான்னா மாடு மாறி இருக்குற அவன யாரு இழுத்தாரது? என்று புலம்பிக்கொண்டே டேய், வீட்ட விட்டு எங்கயும் போகாதடா என்று சொல்லிவிட்டு பால் எடுக்க போய்விடும். இது மாதிரி தினங்களில் எப்போதும் மூர்க்கமாய் இருக்கும் மூர்த்தியைப் பார்க்க பாவமாய் இருக்கும். சோர்ந்து போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும். சிலசமயம் அப்படி உட்கார்ந்த நிலையிலேயே காக்கா வலிப்பு வந்து இழுக்க ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி சமயங்களில் யாரும் அது கிட்டப்போக முடியாது. மூர்த்தி படுக்கும் இடத்தின் தலைமாட்டில் ஒரு கல் இயந்திரம் வேறு இருக்கும். கொஞ்சம் விட்டால் இழுத்து இழுத்துக்கொண்டு போய் அந்தக்கல்லில் தலை இடிக்க ஆரம்பித்துவிடும். ஆக்ரோஷமாய் முகம் கோணி, வாயில் நுரை தள்ள, கையையும், காலையும் இழுத்து இழுத்து எங்கேயாவது தேய்த்து முட்டிக்காலில் ரத்தம் வரும். மூர்த்தியின் கை, கால், தாடை, முகங்களில் எப்போதுமே ரத்தம் வந்து காய்ந்த புண்களின் பக்குகள் இருந்து கொண்டே இருக்கும். இது மாதிரி மூர்த்திக்கு வலிப்பு வரும் நேரத்தில் வாசலில் இருக்கும் பெண்கள் யாராச்சும் பார்த்தால் மூர்த்தியின் அண்ணன் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட, தெருவில் போகும் ஆண்கள் யாராச்சையும் உதவிக்கு கூப்பிட்டு கையையும் காலையும் மாத்திரம் அழுத்திப் பிடிக்க சொல்லுவார்கள்.

அந்தமாதிரி சமயத்தில் குள்ளம்மா கிழவி இருந்தால் அதன் நிலை ரொம்பப் பரிதாபமாக இருக்கும். அய்யோ, மண்டையப் போட்டு இடிச்சிக்கிறானே, கை முட்டிய தேச்சிக்கிட்டானே என்று ஏ வீரம்மா, சாந்தி கொஞ்சம் வாங்கடி, வந்து கொஞ்சம் புடிங்கடி என்று தன் மருமகளையும், பேத்தியையும் கூப்பிடும்., மூர்த்திக்கு இழுப்பு வந்து அடங்கி புஸ், புஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும். ஏற்கனவே வாயில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நுரைமுட்டைகள் புஸ், புஸ்செல்லில் உடைந்து ஜொள்ளாய் வடியும். அப்போதுதான் கூப்ட்டியா அத்த என்று வீரம்மாளின் குரல் மாத்திரம் வெளியே வரும். தப்பிப்பதற்கு நேரக்கணக்கு வைத்திருப்பார்கள் போல.

சில சமயம் கிழவி மாத்திரம் கத்திக்கொண்டே காலை மட்டும் அமுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும். அதுக்கே கிழவிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும். வலிப்பு வரும் நேரத்தில் பல சமயம் மூர்த்தி தன்னை மறந்து மூத்திரம் வேறு பெய்து போட்டிருந்த துணியெல்லாம் தொப்பையாய் ஆகிவிடும். வாயில் வடியும் ஜொள் வேறு கழுத்தெல்லாம் வழிந்து வாந்தி எடுத்தா மாதிரி இருக்கும். வலி நின்ற பிறகு கிட்டப்போகவே வீச்சமடிக்கும். அதனைக்கடந்து போகும் அனைவருமே ப்ச்... என்று மூக்கைப்பிடித்துக்கொண்டு போவார்கள். மூர்த்தியே மயக்கம் தெளிந்து வேறு துணி மாற்றினால் தான் உண்டு.

கிழவிக்கு மூர்த்தியைத் தவிர இரண்டு மூத்தபிள்ளைகள் உண்டு. அவர்கள் இருவருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அதே வாசலில்தான் இருந்தார்கள். பின்னே அவர்களுக்கெல்லாம் அது சொந்த வீடாயிற்றே, வேறு எங்கு போவார்கள்? இருவருமே தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றே இருந்தார்கள். குடிகாரர்களான அவர்களின் குடும்பத்தையே பெரும்பாலும் அவர்களின் மனைவிகள் தான் நடத்தினார்கள், இதில் அண்ணன்களாகவே இருந்தாலும் வலி’யின் வலிகளை அவர்கள் எங்கு பங்கு போடுவது?

ஒரே வாசலில் இருந்தாலும் மூர்த்திக்கு தன் அண்ணன்கள், அண்ணிகள், அவர்களின் பிள்ளைகள் என யாரோடும் ஒட்டுதல் இல்லை. எந்த நிலையிலும் அவர்கள் வீட்டில் சாப்பிடாது. தன் பாகத்தில் இருக்கும் ஒரு வீட்டின் வாடகையும், பணக்கார வீடுகளில் ஆவின் பால் போடுவது, முறவாசல் செய்வது என்பது போன்ற கிழவியின் சொற்ப சம்பாத்தியத்தில் தான் இருவரின் ஜீவனமும். மூர்த்திக்கு பீடி குடிக்கும் பழக்கமுண்டு. அதற்கும் கிழவிதான் வழிவகைகள் செய்தாக வேண்டும். தன் அண்ணன் பிள்ளைகளிலேயே மூர்த்திக்கு தன் இரண்டாவது அண்ணனின் மகளான அன்பரசியைத் தான் பிடிக்கும். அன்பு, அன்பு என்று கொஞ்சம் வாஞ்சையோடு இருப்பது அந்தப் பெண்ணோடு மட்டும்தான். அன்புவும் ஸ்கூல் விட்டு வந்தால், சித்தப்பா சாப்ட்டியா என்று கேட்கும். காரணப்பெயரே தன் பெயராய் நிலைத்துவிட்ட துரதிர்ஷ்டத்தில் அன்பு, தன்னை சித்தப்பா என்று கூப்பிடுவது மூர்த்திக்கு ஒரு ஆறுதல் போல. மூத்த அண்ணன் பிள்ளைகள் கூட, கிழவி வீட்டுக்குள் நுழையும் முன் ஆயா, வலி’ இருக்குதா என்று கேட்டுவிட்டுதான் பின் நுழைவார்கள். அச்சமயம் மூர்த்தி வீட்டுக்குள் இருந்தால் தீர்ந்தது, ஏய். ங்க்....... ஏன் சித்தப்பா ந்னு கூப்ட்டா கொறஞ்சிடுவியா என்று கெட்ட வார்த்தை வசவோடு ஆக்ரோஷமாய் குரல் வந்து வெளியே விழும். பிள்ளைகள் ஒரே ஓட்டம்தான்.

சொந்த அண்ணன்களோடோ, இல்லை வாசலில் இருக்கும் மற்ற சித்தப்ப, பெரியப்ப மக்களோடு ஏதாவது பங்காளி சண்டைவிட்டால் அவ்வளவுதான். வாய் பேச்சு வாயோடு இருக்கும் போதே மூர்த்தி எங்கேயாவது பெரிய கல்லாய் பொறுக்கி குறி பார்த்து வீசி எதிராளி மண்டையைப் பதம்பார்த்து விடும். கல் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாட்டில்கள். சில சமயம் வீட்டிலிருக்கும் எண்ணெய் பாட்டில்கள் கூட பறக்கும். மண்டை உடைந்தவர்கள் போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்ய, மூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டு வரும். இப்படி அடிக்கடி நேர்ந்ததால், குறிப்பிட்ட இந்த வீட்டு வாசலில் சண்டையென்று புகார் கொடுக்கப்போனால், அந்தப்பக்கமிருந்து ஏதும் ஆக்‌ஷன், ரியாக்‌ஷனே இருக்காது. தெருவில் மத்த பிரச்சினைகள் ஏதாவது இருக்கும் போது ஏரியா போலீஸ்காரர்கள் உள்ளே வந்தால், தன் குத்துக்கால் ஆசனத்திலிருந்து எழுந்து மூர்த்தி சினேகமாய் வணக்கம் சார் வைக்கும். அவர்களும் இப்பல்லாம் சண்ட போடறதில்லல்ல என்று அன்பாய் விசாரித்துவிட்டுப்போவார்கள்.

கோவில்,குளம், அண்டை அசலார் கல்யாணம், சினிமா, அது இது என்று இன்ன பிற விசேஷங்கள் எதற்கும் போவாத மூர்த்தி வீட்டை விட்டு போன இன்னொரு இடம் போலீஸ் ஸ்டேஷன். அதற்குப்பிறகு இன்னொரு இடத்துக்குப் போய் இன்னொரு இடத்துக்கு போனது, அது பின்னர் வரும்.

இப்படி தினமும் தாயபாஸ், மாதமானால் வந்துவிடும் காக்காவலி இழுப்புகள்,பங்காளி சண்டை இழுப்புகள் அதற்குப்பிறகு கிழவி ஏதாவது கேட்டால் அதை இழுத்துப்போட்டு அடிப்பது என்று இழுத்து இழுத்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த மூர்த்திக்கு திடீரென்று ஓரு ஆசை முளைவிட்டது. அது ஒன்னும் பெரிய வித்தியாசமான ஆசையெல்லாமில்லை. வழக்கமாய் பருவ வயது வரும் அனைவருக்கும் நடந்தேறக்கூடிய விசேஷம் தான். கல்யாணம்!

என் வயிசோட சின்னதா இருக்கறதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிது இல்ல, அவ்ளோ ஏன் உன் பேத்திக்குக்கூட கல்யாணமாயிடுச்சு இல்ல எனுக்கு கல்யாணம் பண்ணிவை. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனவன் பாகம் பிரிச்சிக்கிட்டு ஆளுக்கொரு வீட்டுல வாழறான் இல்ல, எனக்கும் கல்யாணம் பண்ணி வை. கிழவிக்கு இருக்கிற வலி’யெல்லாம் போதாதென்று இதுப் புதுத் தலைவலியாய் போய்விட்டது.

டேய், வேலைக்கும் போவல, பத்தாதைக்கு உடம்புல இந்த இது வேற, யாருடா பொண்ணு குடுப்பா. ஏண்டா இப்புடி பண்ற, ஏதோ வெந்த சோத்த தின்னுட்டு விதிய ஓட்டிட்டு போடா.

ஏன், நான் வேலைக்கி போவமாட்டனா, நானும் பால் எடுக்கறேன், நீ மொறவாசல் செய்யிற வீட்டு அய்யாங்க கிட்ட சொல்லி எனுக்கு ஏதாச்சும் வேலை வாங்கி குடு. செய்யிறேன். அப்றம் ஒரு வீட்ட எழுதிக்குடு. நானும் அவுனுங்க மாதிரி குடும்பம் நடத்தறேன். அவுனுங்க மத்துறம் தான் ஒண்டி சம்பாரிச்சா குடும்பம் நடத்துறானுங்க?

எல்லாஞ்சரிடா, உனுக்கு யாருடா பொண்ணக் குடுப்பானுங்க, மாசத்துல பத்து நாளு அது, இதுன்னு மயக்கமெடுத்து படுத்துக்கிரியடா? எல்லாருக்கும் உன் நெலமை தெரியும். நான் யாரப் போயி பொண்ணக் கேப்பேன், இன்னும் அவ பாவத்த வேற கொட்டிக்கனுமா? என்று கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.

அவ்வப்போது சின்ன, சின்னதாய் இருந்து கடைசியில் கிழவிக்கே வேட்டு வைத்துவிட அண்ணன்கள் தலையிட்டு பெரிய ரசபாசமானதில் கிழவி பெரிய பிள்ளை வீட்டோடு தங்கிவிட்டது. ஆனாலும் அவுனுக்கு கொஞ்சோண்டு சோறு போட்டுருங்கடா என்று புலம்பிக்கொண்டிருக்கும்.

கிழவியால் வந்த வரும்படி நின்றதால், கிழவி நிறுத்திய பால் எடுக்கும் வேலைக்கு வாரிசுதாரராக மூர்த்தி செல்ல வேண்டியதாக போயிற்று. அப்படி செல்லும் வீடுகளில் கிழவியின் பழக்க தோஷத்தில் யாரச்சும் சாப்பிட கொடுத்தார்கள். இப்படியாக கொஞ்சநாள் ஓடிற்று.

என்னதான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாத்திரைகளை விழுங்கினாலும் மூர்த்திக்கு மாதத்தில் பாதி நாட்களை வலியோடுதான் கடத்தவேண்டியிருந்தது. அப்படியும் இப்படியுமாய் போய், கிழவியின் உடல்நிலையும் மூர்த்தியை கைவிட வேண்டியதாகப் போய்விட மூர்த்திக்கு குடி பழக்கம் தொத்திக்கொண்டது. கையில் காசு இருந்தால் தானே வாங்கி குடிப்பது, இல்லையென்றால் தன்னொத்த தன் சித்தப்ப, பெரியப்ப மக்களிடம் வலியப்போய் டேய், காசு இருந்தா குடுங்கடா என்று இரந்து குடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. குடிப்பழக்கம் மூர்த்தியின் வைராக்கியத்தை குறைத்துவிட்டது.

மூர்த்தி ஆக்ரோஷமாய் இருக்கும் தனது கலங்கலான மஞ்சள் நிற கண்களை இடுக்கிக்கொண்டு, இழுப்பு வந்தால் இருப்பதை விடவும் முகத்தை மிகப்பரிதாபமாக வைத்துக்கொண்டு தன் பெரிய உடலை ஒரு மாதிரி குறுக்கி, தாகமாய் இருப்பவன் குடிக்க ஏதாச்சும் இருந்தா ஊத்து தாயி என்பது போல கையை ஒரு மாதிரி மடக்கி, டேய் ஏதாவது குடுங்கடா என்று காசு எடுத்து கொடுக்கும் வரை அவர்களின் சட்டைப்பாக்கெட்டையே பார்த்துக்கொண்டிருக்கும். காசு கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள் ஏற்கனவே மூர்த்தியின் கைங்கரியத்தால் மண்டையில் தையல் போட்டிருப்பார்கள். இந்த நிலை கண்டபின்பும் காசு தராமல் இருப்பவன் எப்படியும் கல் நெஞ்சினனாகத்தான் இருப்பான். எப்படியா இருந்தாலும் தனக்கு அண்ணன் முறையா வந்துட்டானே என்று தன் மண்டைத்தையலை தடவிக்கொண்டே தந்துவிட்டுப்போவார்கள்.

குடிக்கு காசு கிடைக்கும் வரைதான் இந்த நிலை, குடித்த பின் இருக்கும் மூர்த்தியே தனி. அப்படியிருக்கும் மூர்த்தியைப் பார்க்கும் போது யாரும் அதுக்கு காக்காவலிப்பு வரும் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள். தண்ணியடித்த பின் மூர்த்திக்கு அதிகபட்ச வீராவேசம் வந்துவிடும். அப்படி வரும்போதெல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறியா, இல்லியா, இல்லனா அண்ணனுங்க பாகத்தையும் சேர்த்து எனக்கே எழுதி வை, எனக்குதான் ஒடம்புல குறை இருக்குல்ல, நான் இதையே வெச்சு கடைசி வரைக்கும் சாப்பிட்டுட்டு போறேன் என்று அண்ணன் வீட்டிலிருக்கும் கிழவியை வம்புக்கு இழுக்கும்.

ஏற்கனவே கிழவியை வீட்டோடு வைத்துக்கொண்டிருப்பது மருமகள் வீரம்மாவுக்கு உறுத்த, வலி’ வந்து அடிக்கடி சண்டை போடுது, வாசல்ல நின்னுக்கிட்டு அசிங்கசிங்கமா கத்துது என்று கணவனிடம் பிராது கொடுத்து கிழவியை மூர்த்தியோடே திருப்பி அனுப்பிவிட்டாள். கிழவியும் முக்கி, முனகிக்கொண்டு முடிந்தவரை ஆக்கி அரித்து தள்ளாத வயதில் உடைந்த காலை இழுத்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பித்தது.

மூர்த்தி நிலை பாவமா இல்லை கிழவி நிலை பாவமா என்று அகப்பட்ட நேரத்தில் ஆளாளுக்கு அவர்கள் கதையை அவலாக்கிக்கொண்டிருந்த போது, வேலைக்குப் போய் மதியானம் வந்த கிழவி வெயில் கிறுகிறுப்பில் உள்ளே போய் சோறு பொங்காமல் படுத்துவிட்டது. யாரிடமோ காசு வாங்கி முட்ட முட்ட குடித்த மிதப்பில் மூர்த்தி வீட்டுக்குள் புகுந்து சோறு இல்லையென்று டங்கு, டமாரென்று பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது. மீண்டும் வந்து கிழவியை, அண்ணன்களை, அண்ணியை, இன்னும் இருப்பவர்களை அனைவரையும் திட்டித்தீர்த்தது. வீட்டைத் தன் பேருக்கு எழுதி வைக்க சொல்லும் நியாய அநியாயங்களுக்கு எல்லோரையும் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டது. கடந்து செல்லும் எவரும் என்ன ஏது என்று கேட்கவில்லை.

பின்னர் தன்னிரக்கம் தாளாமல் அக்கம் பக்கமிருப்பவர்களை நோக்கி எனுக்கு சோறு போடக் கூட யாருமே இல்லையென்று ஓவென்று அழுது தீர்த்தது. பின்பு வீட்டுக்குள் புகுந்து தடாலென்று கதவு சாத்தும் சத்தம். மீண்டும் பாத்திரங்கள் உருளும் சத்தம். உளறல் சத்தம் என்று இரவு போய் காலை வந்தது. வெளியே படுத்திருந்த கிழவியும் அப்படியே எழுந்து வேலைக்குப் போய்விட்டது. எல்லோரும் தத்தம் வேலைகளைப் பார்க்கப்போய்விட்டு சோற்றுக்கு வீடு வந்த மதிய நேரத்தில், அய்யோ, எந்தலையில மண்ண வாரிப்போட்டுட்டானே என்று கதவைத்திறந்த கிழவியின் பெருத்த ஓலக்குரல் கேட்க, வாய்க்கு போன சோறு வயிற்றுக்கு போகாமல் வாசலிலிருக்கும் அனைவரும் வெளியே ஓடிவந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போக மூர்த்தியின் தடித்த கழுத்திலிருந்த கிழவியின் பழைய புடவையை அறுக்கமாட்டாமல் அறுத்தார்களாம். வலி’ செத்துப்போச்சு, வலி’ மாட்டிக்கிச்சு என்று பேசிப்பேசி தீர்த்தார்கள்.

கடைசியாய் மூர்த்தியின் உடல் மார்ச்சுவரிக்குப்போய், மயானத்திற்குப்போனது. கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா என்று செத்துப்போன மூர்த்தியை வலி’ந்து வலி’ந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தது.

27 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம். அந்த தாய்மனதின் வலியை என்ன சொல்வது :(

Bee'morgan said...

அருமை அமித்தும்மா.. பாத்திரப்படைப்பு அபாரம்..

நட்புடன் ஜமால் said...

டப்சா - இது அதிகம் கேள்வி பட்டதில்லை இன்னும் புதுமையால்லாம் எங்கட ஊரில் இருக்கு.

------------------

“வலி” பேரே வலி.

நினைவுகளில் மீட்டியெடுத்து எழுத்து கோர்த்து எங்கள் உள்ளங்களில் வீணை மீட்டுறீங்க - கொஞ்சம் சோகமாகவே ...

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த நோவுக்காரனின் செயல்பாடுகளை வார்த்தைகளில் விளக்கிவிட்டீர்கள்...

எப்பொழுதும் அத்துனை செயல்பாடுகளையும் விட்டுப்போகாமல் விளக்க வேண்டியிருப்பதால் கதை பெரிதாகிவிடுகிறதா மேம்..

பெரியதாக இருந்தாலும் படிக்க ஆர்வம் குறைவதில்லை விவரிப்பு அப்படி...!

KarthigaVasudevan said...

அச்சச்சோ ...

இப்படியா முடியனும் வலியோட கதை?

:(((

கஷ்ட்டமா இருக்குப்பா.ஆனா அவனுக்கு அதான் விடுதலை,நிம்மதி.இப்படித் தான் நினைச்சுக்கனுமில்லை.

Deepa said...

நெஞ்சம் கனக்கிறது.
//ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா? //
இந்த வரியில் தொடங்கும் வலி கதை நெடுகவும் தொடர்கிறது.
:(

அ.மு.செய்யது said...

நல்ல படைப்பு.

வலிப்பு வரும் காட்சிகளை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகள் என் அண்ணனை இவ்வாறான கோலத்தில் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

நிறைய ஞாபகங்கள் வந்து விட்டன.

பா.ராஜாராம் said...

கண்ணெல்லாம் நெறைஞ்சுட்டது அமித்தம்மா.

வாசித்துக் கொண்டிருக்கிற உணர்வே இல்லை.பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.படம் படமாக விரிந்தது.ரொம்ப நல்லா வந்திருக்கு அமித்தம்மா இது.

Vidhoosh said...

நிச்சயம் இருபது குடித்தனக்காரர்களும் புத்தகமாவது உறுதிங்க...

அமித்தம்மா... கையை இப்படிக் கொடுங்க. கொஞ்சம் பிடிச்சுக்கறேன்.

--வித்யா

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல நடை. வட்டாரப் பேச்சு வழக்கம் போல் உங்களுக்குக் கை கூடியுள்ளது. ஆனால், கதைக்கரு கொஞ்சம் திடமாகவும், கதையின் நீளம் குறைவாகவும் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

எனக்கென்னவோ நீங்க சீக்கிரமே உங்க சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுடுவீங்கன்னு தோணுது. வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

வாசிக்க வாசிக்க கண்களில் நீர் தளும்புகிறது...

மாதவராஜ் said...

அமித்து அம்மா, இன்னுமொரு வலி நிறைந்த வாழ்க்கையை ,அதன் சாத்தியமானக் கூறுகளோடு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

அருமை.

அன்புடன் அருணா said...

அருமை அமித்தம்மா!

PPattian said...

கதை அருமைங்க. கடைசியில் வலி செத்தது நிம்மதிதான்.. வலிக்கும் மத்தவங்களுக்கும் கூட..

எப்பவுமே வலிப்பு வந்தா, உடனே சாவிக்கொத்தோ இல்லை ஏதாவது இரும்பு ஐட்டம் கொடுப்பாங்களே.. அது மிஸ்ஸிங்..

அம்பிகா said...

நல்லா இருக்கு அமித்தம்மா.
வலிப்பு வரும்போதான விவரிப்பு மனதில் வலியை உண்டாக்குகிறது.
\\Vidhoosh said...
நிச்சயம் இருபது குடித்தனக்காரர்களும் புத்தகமாவது உறுதிங்க...\\
:))

காமராஜ் said...

அமித்தம்மா,ரொம்ப வலிக்கிற சிறுகதை.சின்னவயசிலிருந்து பார்த்து பயந்த,பாவப்பட்ட,இரும்பு எடுத்துக்கொடுத்த மனிதர்கள் வந்துபோகிறார்கள்.பக்கத்து வீட்டுச்சித்தி சொல்லுகிற கதைமாதிரி இருக்கு அமித்தம்மா.அந்த மொழி.

Romeoboy said...

நடை அருமை .. ரொம்ப நீளம் .. கொஞ்சம் சுருக்கலாம்..

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேடம்...

Anonymous said...

இருபது குடித்தனக்காரங்க கதை ஒவ்வொண்ணும் அருமை.

"உழவன்" "Uzhavan" said...

பிறவியிலியே இதுபோன்ற நோய்கள்/குறைபாடுகள் கொண்டவர்களின் வாழ்வு மிகக் கொடுமையானதுதான் :-(

ச.முத்துவேல் said...

/கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது./

இறுக்கம் தளர்ந்து டக்குன்னு வாய் விட்டு சிரிக்கவைத்தது இவ்வரிகள்.அதேஅளவுக்கு அழவைத்த வரிகள்

/கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா/

முக்கியமான கதை இது.மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.

ஹுஸைனம்மா said...

கதை வழக்கம்போல நல்லாருந்துது.

ஆனா வலிப்பை இவ்வளவு விவரித்திருக்க வேண்டாம். அனுபவித்தவர்களை/ பார்த்தவர்களை மனம் நோகச் செய்யும்.

அமுதா said...

எப்பொழுதும் போல் அருமையாக எழுதி உள்ளீர்கள். படித்து முடித்ததும் மனதில் ஒரு வலி

நிஜமா நல்லவன் said...

வழக்கம் போல நல்லாவே எழுதி இருக்கீங்க!

☀நான் ஆதவன்☀ said...

ஒன்னும் சொல்றதிகில்ல பாஸ். பதிவின் நீளம் எவ்வளவாக இருந்தாலும் படிக்க தூண்டுகிறது உங்கள நடை.

ஒருவகை விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை இதை விட எளிமையாக பதிவுலகில் படித்ததில்லை.

வாழ்த்துகள் பாஸ்

Thamira said...

மனிதர்களை கூர்ந்து உள்வாங்கும் குணம் வாய்த்திருக்கிறது உங்களுக்கு. காரெக்டர்களை உயிரோட்டமாக படைக்கிறீர்கள். காட்சிகளின் விவரணை முழுமையாக வீரியமாக இருக்கிறது. ஒரு பெரும் வலியை அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறீர்கள்.

சென்ஷி said...

மூச்சுவிடத் தோன்றவில்லை அமித்து அம்மா.. உங்கள் எழுத்தோட்டத்தில் வலியின் உருவம் கண்கள் முன் நடமாடிச் சென்றுக் கொண்டிருக்கிறது..