06 January 2010

காணாமல் போன செட்டியார்

புத்தருக்கு போதிமரம் போல செட்டியாருக்கு பஜனை கோவில் கருங்கல் படியே பிரதானம். உண்ண மாத்திரம் தான் வீட்டுக்கு வருவது போல தெரியும், மத்தபடி மீதி நேரமெல்லாம் அவரின் வாழ்க்கை எதிரே இருக்கும் பஜனை கோவில் கருங்கல் படியில் தான் ஒண்டிக்கொண்டிருந்தது. தன் ஒத்தை நாடி சரீரத்தை சரியாய் உள்வாங்கிக்கொண்ட அந்தக் நீள கருங்கல் இருந்தது அவருக்கு தன் வீட்டை விடவும் மிகவும் வசதியாய் போனது. படி என்றால் அப்படியே இழைத்து இழைத்தெல்லாம் செதுக்கி தெப்பக்குளம் படிகள் போல அடுக்கி வைத்தாற் போல ஒரே வரிசையாகவோ, இல்லை நம் வீட்டு வாசற்படி போலவோ இருக்காது. ச்சும்மா எங்கேயோ கிடந்த கல்லை ரோட்டோரமா நகர்த்தி விட்டாற் போல, ஒன்னுக்கு கீழ ஒன்னா கரடு முரடா மூணு நீள கருங்கல் இருக்கும்.

செட்டியார் போலவே வீட்டில் வெற்று நாட்டாமை செய்துகொண்டு இருக்கும் மீதி மூன்று பேருக்கும் அந்த கருங்கற்கள் தான் நிரந்தர இருப்பிடம். நான்கில் ஒன்று வலிப்பின் காரணமாக கல்யாணமாகா பிரம்மச்சாரி, மீதியிரண்டும் வீட்டில் மருமகள் பிடுங்கல் தாங்காமல் இங்கே உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பவர்கள், இதில் நமது செட்டியாருக்கு மட்டுமே ஐந்து பிள்ளைகளை கரையேற்றும் ஆகப் பெரும் பொறுப்பு இருந்தது. ஆனால் அவரோ அதை மிகச் சுலபமாக செட்டியாரம்மாள் தலையில் இறக்கிவைத்து விட்டு, மதியான நேரத்தில் கருங்கல் மீதமர்ந்து தாயபாஸ் ஆடிக்கொண்டிருந்தார். சாயங்காலம் டீக்கடை, எட்டு, எட்டரைக்கு சாப்பாடு, ஒம்பது மணிக்கு பஜனை கோவில் கருங்கல் என்று செவ்வனே பொழுதோட்டிக்கொண்டிருந்தார்.

இப்போது காலையில் என்ன செய்வார் என்று கேள்வி வருகிறதா? காலை மூன்று மணிக்கே செட்டியாரம்மாள் எழுந்து கொத்தவால் சாவடிக்கு காய்கறி வாங்க புறப்பட்டுவிடுவார். காய்கறி வாங்கிக்கொண்டு அப்படியே பஜாரில் இருக்கும் கடையில் அமர்ந்து வியாபாரம் முடித்துப் பின் இரண்டு, மூன்று மணிக்குதான் வீடு திரும்புவார்கள்.

அவர் தம் புத்திர சிகாமணிகளான மூத்தவள் உமாவை எழுப்பி பாத்திரம் தேய்த்து, வீட்டை பெருக்கி வைக்கச் செய்வது, இரண்டாமவன் மூர்த்தி தண்ணீர் பிடிக்க சொல்வது, நான்காவது மஞ்சுளாவுக்கு ஐந்தாவதும் கடைக்குட்டியுமான சுரேஷை பார்த்துக்கொள்ளும் வேலை, மூன்றாவது பையன் தேவாவுக்கு டீக்கடைக்கும், இட்லி கடைக்கும் போய் வரும் வேலை. இட்லி கடை ஆயாவுக்கு முதல் போணி ஆவதே செட்டியார் குடும்பத்தாரால் தான். வீட்டு வேலைகளெல்லாம் முடிந்த பின்னர் ஒவ்வொன்றையும் கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு பத்திவிடும் மேய்ப்பன் வேலையை மட்டுமே செட்டியார் செவ்வனே செய்து வந்தார். கவனிக்கவும் “நல்” மேய்ப்பரில்லை.

புத்திர சிகாமணிகள் நான்காய் இருக்கும் வரை எந்தப்பிரச்சினையுமில்லை. மழைக்காலம் வந்ததால் செட்டியாரின் கருங்கல் மெத்தைக்கும் பங்கம் வந்தது, மெத்தை அடித்துக்கொண்டெல்லாம் போகவில்லை, ஓங்கி அடிக்கும் மழைச்சாரலில் செட்டியார் எங்கே அடித்துக்கொண்டு போய்விடுவாரோ என்று பயந்து வீட்டுக்குள் ஒண்ட, விளைவு ஐந்தாவது நான்காம் மாதத்தில் பால்குடி நிறுத்தியதால் சதாசர்வகாலமும் கை சூப்பிக்கொண்டிருந்தது. இப்போது இந்தக் கடைக்குட்டியை மேய்ப்பதுதான் பெரிய த்ராபையாய் இருந்தது செட்டியாருக்கு.

குடித்தன வாசலே காலியாயிருக்கும் ஒரு பத்துமணிக்காய் மூக்கொழுகிக்கொண்டிருக்கும் பிள்ளையைத்தூக்கிக்கொண்டு பஜாருக்குப் போவார். பிள்ளையை செட்டியாரம்மாவிடம் கொடுத்துவிட்டு அவர் வியாபாரம் செய்வார் என்று கனவிலும் நினையாதீர்கள். பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டும், பக்கத்து டீக்கடையிலிருந்து பால் வாங்கிக்கொடுத்துக்கொண்டும் கூடவே வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் பொறுப்பு செட்டியாரம்மாளையே சாரும். அங்கே போயும் நம்மாளுக்கு மேற்பார்வைதான். என்னா இது, இன்னும் இந்தக்காய் விக்கவே காணும், ஏன் இதைப்போயி வாங்கியாந்த. அந்தக்காய்தான் போனவாரமே மீந்துப்போச்சே அதையேன் இந்தவாரம் வாங்கியாந்து அழுக வைக்கிறே, எது விக்கிதோ அதப்பார்த்து வாங்கியாரத் தெரியாதா உனக்கு என்று சவுண்டு விடுவதன் மூலம் தான் குடும்பத்தலைவன் என்பதை பஜாரின் அக்கம்பக்கத்து கடையாட்களுக்கு நிரூபிப்பார். இரண்டு மணிவரை வேவா வெயிலில் உட்கார்ந்து கொண்டு காயை விற்றுவிட்டு, அந்தப் பெரிய கூடையை தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு செட்டியாரம்மாள் பின்னால் வர, கடைக்குட்டியைத் தூக்கிக்கொண்டு செட்டியார் சிட்டாட்டம் வீடுவந்து பூட்டைத் திறப்பார். அதோடு அவரின் அன்றைய கடமைகள் முடிந்தது.

அப்படியேத் திரும்பி எதிரே இருக்கும் பஜனைகோவிலுக்கு போனாரென்றால் களை கட்டத்தொடங்கும் தாயபாஸ். இங்கே செட்டியாரம்மாள் அடுப்போடு புஸ், புஸ் ஸென்றும், லொக்,லொக்கென்றும் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அன்னலட்சுமி அவதாரம் எடுக்கத்தொடங்கியிருப்பார்கள். ஊத ஆரம்பித்து அரைமணி நேரம் கூட போயிருக்காது, தாயபாஸில் நான்கு நடுக்கட்டங்களிலும் காயை கட்டிவிட்டு, த்தோ சாப்பாட்டுக்கு போய்ட்டு வந்துடறேன் என்றபடி தன் தலைக்கு பங்கம் வராதபடி ஒரு ஆளை நியமித்துவிட்டு வருவார். அந்த காய் வேவாத சாம்பார வெக்க எவ்ளோ நேரம், ஆன வரைக்கும் போதும், போடு என்றபடியே அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு தலை வெட்ட புறப்பட்டுவிடுவார். அடுத்தாற் போல ஆளுக்கொன்றாய் ஓடிவரும் ஸ்கூல் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு, தானும் சாப்பிட்டு, துணி துவைத்து, செட்டியாரின் வேட்டிகளுக்கு நீலம் போட்டு, செட்டியாரம்மாள் குளித்து முடிக்கும்போது மணி ஏழைத்தொட்டு இருக்கும். இதற்கிடையில் ஒரு தோப்பு, ரெண்டு ஜெயிப்பு (எல்லாம் தாயபாஸில் தான்)எனப் பார்த்துவிட்டு டீக்கடைக்கு அரசியல் நியாயம் பேசப் போய்விடுவார்.எல்லாத்தையும் ஒரு சேர முடித்துவிட்டு வெறுந்தரையில் தன் சேலையை விரித்து தலைக்கு கையை அண்டக்கொடுத்தவாறே ஏய், உமா தம்பிய பார்த்துக்கோ..... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அலுப்பில் குறட்டை விட ஆரம்பித்துவிடுவார். அதற்குப்பிறகு அந்த வீட்டின் மீது இடியே விழுந்தாலும் உமா தான் தாங்க வேண்டும்.

ஒன்பது மணிக்கு செட்டியார் வந்து தன் வயிறை ரொப்பி உங்கம்மாவ எழுப்பி சாப்பிட சொல்லும்மா என்றபடியே வேட்டியின் ஒரு முனையால் வாயைத்துடைத்துக்கொண்டு, பாய் தலைகாணி சகிதம் பஜனை கோவில் கருங்கல்லில் கட்டையை சாய்க்கக்கிளம்பிவிடுவார் இதற்குப்பிறகு எம்பெருமான் செட்டியார் துயிலெழ காலை மணி ஐந்து அடிக்கவேண்டும்.

முன் தூங்கி முன்பதற்கு முன்பே எழுந்த செட்டியாரம்மாவோ மறுநாள் காலை சிற்றுண்டிக்கான செலவை மாடத்தில் வைத்துவிட்டு, மூலைக்கொன்றாய் தூங்கும் பிள்ளைகளைத் தாண்டி தாண்டி கொத்தவால் சாவடிக்கு புறப்பட்டுவிடுவார். நாய் குரைத்து முடித்து உறங்கத் துவங்கியிருக்கும் நிசியில் அந்த ஒத்தை பொம்பிளை கூடையை நகர்த்திக்கொண்டு கொத்தவால் சாவடிக்கு பத்திரமாய் போய் வருவது குடியிருக்கும் வாசலில் இருக்கும் அனைத்துப்பெண்களுக்கும் இன்ஷ்பிரேஷனாய் சொல்லிக்கொள்ள வாய்த்தது. .
இதை சொல்லி சொல்லியே செட்டியாரம்மாவுக்கு குளுக்கோஸ் ஏற்றி அவரிடம் இருக்கும் மீந்த காய்கறிகளை சும்மாவோ இல்லை ரெண்டு ரூபாய்க்கோ வாங்கிப்போய் தன் வீட்டில் குழம்பு வைத்துவிடுவார்கள்.

இப்படி செட்டியாரம்மா காய்கறிகளை விற்க, செட்டியார் காய்களை வெட்ட (மறந்துவிடாதீர்கள் தாயபாஸ்) என ஊர்ந்துகொண்டிந்த அவர்களின் வாழ்க்கை மேல் மாநகராட்சி பஸ்ஸை விட்டது. வேறொன்றுமில்லை, சில பேருந்துகளை அந்தப்பக்கம் வரச்செய்ய ஏதுவாய் பஜார் ரோட்டை அகலப்படுத்தும் பணி துவங்கியது. நடைபாதைக் கடைகள், அதற்குக்கீழே காய்கறி விற்பவர்கள் என அனைவருக்கும் வேறு இடம் காட்டி அங்கு போய் கடை விரிக்கச்சொல்லிவிட்டது. சமயம் பார்த்து செட்டியாரம்மா தன் தம்பி கல்யாணத்துக்கு செட்டியாரிடம் இரண்டு நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு போயிருந்தார். அம்மா வீட்டுக்கு போனவுடன் அது நான்கு நாட்களாக நீட்டிக்கப்பட்டது.


மாதத்தில் வரும் அமாவாசை, கிருத்திகை, இன்னபிற பண்டிகை நாட்களில் எவ்வளவு முக்கியமான வீட்டு விசேஷமாக இருந்தாலும் செட்டியாரம்மாவை செட்டியார் அதற்கு அனுப்பமாட்டார். காரணம் அன்றுதான் காய்கறிகள் கொஞ்சம் கூட விற்று செட்டியாரும் தன் பங்குக்கு கொஞ்சம் கல்லா கட்டிக்கொள்ள முடியும். அதனாலேயே செட்டியாரம்மாவின் தம்பி கல்யாணம் பண்டிகை நாட்கள் பக்கம் வராதமாதிரி பார்த்துக்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் கார்ப்பரேஷன்காரன் வந்து ரோட்டை கலைப்பான் என்று செட்டியாருக்கு தெரியாத காரணத்தால் பர்மிஷன் அளித்து உடன் தானும் போய் கல்யாணவீட்டில் அமர்ந்துகொண்டார். திரும்பி இங்கு வந்து பஜார் ரோட்டுக்கு போனால், அங்கு ரோடே விரிச்சோ என்றாகி நியமிக்கப்பட்ட இடங்களை ஏற்கனவே மற்ற கடைக்காரர்கள் துண்டு போட்டுவிட்டார்கள். போனால் போகுதென்று செட்டியாரம்மாவுக்கு மூலையில் ஒரு இடம் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இதற்கு முன்னர் கடை வைத்திருந்த இடம் எல்லோர் பார்வையிலும் பட்டு நன்றாக வியாபாரமாகி நாலு காசு பார்க்கமுடிந்தது. இப்போது நிலைமை தலை கீழ், வாடிக்கையாளர்கள் இவ்வளவு தூரம் வர பால்மாறிக்கொண்டு முனைக்கடையிலேயே தன் கொள்முதலை முடித்துக்கொண்டது செட்டியாரம்மாவின் வியாபாரத்துக்கு மட்டுமல்ல செட்டியாரின் பாக்கெட்டு சில்லறைக்கும் வந்த இடி இப்படியே ஒரு மாதம் போகவில்லை, வியாபாரத்தில் வரும் வருமானம் போதவில்லையென்று செட்டியாரம்மாவை விட செட்டியார் மிகவும் கவலைப்பட்டார். கவலைப்பட்டதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் செட்டியாரம்மாதான் இதே மாதிரி இருந்தா ரெண்டு பொம்பளை பிள்ளைகளை கரை சேர்ப்பது எப்படி என்ற கவலையில் செட்டியாரை ஏதாவது வேலைக்கு போக சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான் செட்டியார் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு முடக்கடி செய்ய ஆரம்பித்துவிட்டார். பதிலுக்கு செட்டியாரம்மாவின் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் பஞ்சாயத்தை ஆரம்பித்து ஏழு பேர் கொண்ட குடும்பத்துக்கு,செட்டியாரும் ஒரு வேலைக்கு போயே ஆகவேண்டும் என்று தீர்ப்பளிக்க, மறுநாள் காலை கருங்கல் படுக்கை காலியாக இருந்தது.

அன்று காலை பிள்ளைகள் அப்பாவை காணாமல் வியாபாரத்துக்கு போயிருந்த அம்மாவிடம் போய் முறையிட, அனைவரும் ஆளுக்கொரு மூலையாய் தேடினார்கள். இரண்டு நாள் கழித்து செட்டியாரே தான் திருக்கழுக்குன்றத்தில் தன் உறவினர் ஒருவர் வீட்டிலிருப்பதாய் செய்தி அனுப்பினார். சகல மரியாதைகளோடு அவரை அங்கிருந்து கூட்டிவந்து, வீட்டில் யாரும் ஏதும் சொல்லாமல் வேளா வேளைக்கு கருங்கல் மேடைக்கு டீயும், சாப்பிட வா ப்பா என்று பிள்ளைகளை தூதனுப்பியும் செட்டியாரம்மாள் சௌகரியத்துக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்கள். செட்டியாரும் முகச்சவரமும், மடித்துவிட்ட நீளக் கை சட்டையுமாய் புதுப்பொலிவுடன் வளையவந்தார். இவர் இப்படி இருப்பது வேலைக்குப் போய் குடும்பத்தை பார்த்துக்கொண்டிருக்கும் மத்த ஆண்களுக்கு உறுத்தி, அவர்கள் கண் பட்டதன் திருஷ்டியோ என்னவோ செட்டியாரின் அமைதி வாழ்கைக்கு மீண்டும் பங்கம் வந்தது. இந்த முறை இதற்குக்காரணம் மாநகராட்சி அல்ல, மூத்த பெண் உமா.

பெரியவளாகி உட்கார்ந்துவிட, சடங்குகளெல்லாம் முடிந்த பின்னர் மீண்டும் செட்டியாரம்மாவின் கவலை தலைதூக்க முணுமுணுப்பு தொடங்கியது. செட்டியாரும் தன் பங்குக்கு தாடி வளர்த்துக்கொண்டு தானும் கவலை கொள்வதாய் பாவ்லா காட்டினாலும் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் அவரை வேலைக்கு அனுப்ப செய்வதிலேயே குறியாய் இருந்தனர். மீண்டும் கருங்கல் படுக்கை காலியானது. இந்த முறை செட்டியாரம்மா தேடவுமில்லை, போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடவுமில்லை. போனவருக்கு வரத்தெரியும் என்று இருந்துவிட்டார்கள். அவரும் இவர்கள் தேடுவார்கள் என்று எதிர்பார்த்து, உறவினர் வீடு, அங்கே இங்கே என்று சுற்றி பத்துநாள் கழித்து வீடுவந்தார். மீண்டும் யுத்தம் தொடங்கியது.

செட்டியார் வீட்டில் முறைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்து பார்த்தார். ம்ஹூம் ஒன்றும் வேலைக்காகவில்லை. இந்த முறை தான் பீச்சில் விழுந்து சாகப்போவதாக மிரட்ட, அந்தத் தாக்குதலுக்கு மொத்தக்குடும்பமும் பணிந்தது. செட்டியாரம்மாவும் ஏதும் சொல்லத் தோன்றாமல், படித்துக் கொண்டிருந்த தேவாவையும், மூர்த்தியையும் படிப்பை நிறுத்திவிட்டு தச்சப்பட்டறைக்கு அனுப்பி வைத்தார். உமாவும் தன் பங்குக்கு வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தது. பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் செல்லாக்காசுக்கும் மதிப்பில்லாமல் போவதை உணர்ந்த செட்டியார் மீண்டும் காணாமல் போனார். பிள்ளைகளுக்கு கல்யாணமாகும் வரையாவது இந்த மனிதனின் இருப்பு தேவையென்று செட்டியாரம்மாவே தன் பங்குக்கு தேடி அவரை மீட்டுக்கொண்டு வந்தார். இப்படியாய் உமா கல்யாணம் வரை தன் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர்ந்தார்.


உமாவின் கல்யாணத்துக்கு நிறைய கடன் ஆனதை காரணம் காட்டியும், மாமனார் என்ற புது அந்தஸ்து பெற்றிருப்பதாலும், மாப்பிள்ளை வீட்டுக்கு வரப்போக இருக்கும் போது ஏதாவது சொல்லிக்கொள்ள தேவையென்றும் செட்டியார் குறைந்தபட்சம் செக்யூரிட்டி வேலைக்காவது போகவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டார். பகலெல்லாம் தாயபாஸ் ஆடினாலும், இரவு வாட்ச்மேன் வேலைக்காவது போவது நல்லது என்று செட்டியாரம்மாள் தன் முணுமுணுப்பை தொடங்க, மறுபடியும் கருங்கல் படுக்கை காலியானது.

எப்போதும் நடப்பதுதானே இப்போதும் என்றபடி செட்டியாரம்மாவும் அசட்டையாய் இருக்க இந்த முறை செட்டியாரம்மா கழுத்தில் பழுப்பேறி ஊசலாடிக்கொண்டிருந்த தாலிக்கயிறு கழற்றப்பட்டு, நெற்றியில் திருநீறு வைக்கவேண்டியதாய் போயிற்று. வேலைக்குப் போவதைக்காட்டிலும் சாவதே சாலச்சிறந்தது என்று செட்டியார் தன் உறவினர் வீட்டுக்குப்போய் தூக்கு மாட்டிக்கொண்டார்.

சாகற மனுசன் என் வீட்டுல செத்திருந்தாலும் இவ்வளவு நாள் என் வீட்டுல ராஜா மாதிரி இருந்த குறைக்கு கவுரமா தூக்கிப்போட்டு இருக்கலாம், இப்படி இன்னொருத்தர் வீட்டுல போய் செத்து தொலைச்சி காலத்துக்கும் எனக்கு கெட்டப்பேரு வாங்கிக்கொடுத்துட்டு போயிட்டாரே, இருக்கும்போதும் என்னை நல்லா வெச்சுக்கலை, செத்தும் என்னை நல்லா வெச்சுக்கலை என்றபடியே மூன்று மணி இருட்டுக்கு துணையாய் இருக்கட்டும் என்று காற்றில் தன் வார்த்தைகளை பறக்கவிட்டு காய் கூடையை சுமக்கிறார் செட்டியாரம்மாள். இன்னமும்.......





குறிப்பு: ஒடு வேய்ந்த ஒற்றைச்சதுரத்தை வீடு என சொல்லி, அதற்கு மாதம் நானூறு வாடகை வசூலித்து இந்தப்பக்கம் பத்து, அந்தப்பக்கம் பத்து என்று அடுக்கப்பட்ட இருபது குடித்தனங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சொல்ல நூறு கதைகள் இருந்தன. பண்டிகைகளும், திருவிழாக்களும் வந்தபோது அந்த வீட்டில் குடியிருப்பதே பிறவிப்பயன். காணும் பொங்கலுக்கு சோறு கட்டிக்கொண்டு கூட்டமாய் பீச்சுக்கு போகும்போது பெரியவர்களும், குழந்தைகளுமாய் ஒரு ஊரே கிளம்பிப்போவது போல் இருக்கும். அப்படி ஒரு ஊரைப்போல இருந்த நீள வரிசை வீடுகள் நான்கு சகோதரர்களால் பாகம் பிரிக்கப்பட்டு, ஆளுக்கொரு பக்கம் மாடிவீடு எழுப்பிக்கொண்டார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு இன்னமும் அங்குதான் உலவிக்கொண்டு இருக்கிறது. அப்படி அங்கு வாழ்ந்த மனிதர்களில் நெஞ்சில் நின்ற சிலரின் வாழ்க்கைதான் இருபது குடித்தனக்கதைகள் என்ற பெயரில் பதியப்படுகிறது இங்கே. இருபது குடித்தனத்தில் எங்களின் எதிர்வீட்டில் குடியிருந்தவர்களின் கதைதான் இது.சாதத்தில் உப்பு போட்டு வடித்து, குழம்பில் குறை உப்பு போடும் பழக்கம் அவர்களுடையது. ஒரு முறை அவர்கள் வீட்டு குழம்பை எங்கள் வீட்டு சோற்றில் பிசைந்து சாப்பிட, அய்யய்ய செட்டியாரம்மா, நீங்க குழம்புல உப்பே போடல என்று சொல்ல,நாங்க சாதத்துல உப்பு சேர்ப்போம்டி என்று சிரித்துக்கொண்டே உப்பு இடாத செட்டியாரம்மாள் இன்னும் நெஞ்சில் நிற்கிறார்.


30 comments:

☀நான் ஆதவன்☀ said...

க்ரேட்!

சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரே மூச்சில் படித்து விட்டேன்.

சென்னையில் இதே போல் பலபேர் இருக்கும் குடித்தனங்களில் இருந்ததால் இதே செட்டியாரையும் செட்டியாராம்மாவையும் வெவ்வேறு வடிவங்களில் கண்டிருப்பதாலும், அவர்களுக்கு படிக்கும் போதே எளிதில் உருவம் கொடுத்து உலவவிட்டேன் :)

இன்னும் பத்தொன்பது கதைகளுக்காக வெயிட்டிங்

☀நான் ஆதவன்☀ said...

ஐந்தாவது பிள்ளைக்கான காரணம் நகைக்க வைத்தது :)

செட்டியாரம்மாவிற்கு குளுக்கோஸ் ஏற்றி இரண்டு ரூபாய் அல்லது இலவசமாக காய்கறி பெற்று வந்த உங்கள் திறமை மெச்சவேண்டியதே :) (அதான் கடைசியில் போட்டு உடைச்சுடீங்களே பாஸ்) :))

அமுதா said...

/*அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு இன்னமும் அங்குதான் உலவிக்கொண்டு இருக்கிறது*/
அருமையாகச் சொன்னீர்கள். எங்கேனும் இதுபோல் ஒரு கதாபாத்திரத்தை ஒவ்வொருவரும் வாழ்வில் சந்தித்திருப்போம். உங்கள் எழுத்தால் கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்

Anonymous said...

அப்ப இது புனைவு இல்லையா?
இன்னும் நிறைய குடித்தனக்கதைகள் வருமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. நானும் ஒரு மூச்சுல படிச்சிட்டேன்.. :)
இருபது குடித்தனக்காரர்கள்.. ஆகா தொடரட்டும்..

S.A. நவாஸுதீன் said...

செட்டியாரம்மாள் மனதில் நிலைத்துவிட்டார். ரொம்ப அருமையா எழுதியிருக்கிங்க அமித்தம்மா. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.

Vidhoosh said...

ஒரே மூச்சில் படிச்சுட்டேன். ரொம்ப க்ளோஸ் ஆக கவனித்து, அப்படியே காட்சியை விரியும் எழுத்துக்கள். ரொம்ப அருமை அமித்து அம்மா. :)

-விதூஷ்

நிஜமா நல்லவன் said...

/ ☀நான் ஆதவன்☀ said...க்ரேட்!

சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரே மூச்சில் படித்து விட்டேன்./

எப்படி பாஸ்...உங்களால மட்டும் முடியுது.....நான் மூச்சு கடன் கேட்டிருக்கேன் பாஸ்....வந்த தான் படிக்க முடியும் போல:)

நிஜமா நல்லவன் said...

அமீத்து அம்மா....நீங்க எதிர் பார்க்கிற பின்னூட்டம் இன்னைக்கு போடலையே....இப்ப என்ன சொல்லுவீங்க?????

Unknown said...

இந்தச் செட்டியாரம்மா எங்க பாட்டியை ஞாபகப்படுத்துறாங்க அமித்து அம்மா. இதே காய்கறிக்கூடை, இதே மூணு மணி. இன்னும் ரெண்டு நாள்ல பாட்டிக்கு நினைவு நாள்.

very nice narration once again.

இருவது குடித்தனக்காரர்கள் கதை வரிசையிலே முன்னர் எழுதிய “மழையோடி விளையாடி மழையோடு உறவாடி”யும் வருமா?

நிஜமா நல்லவன் said...

பாஸ்...படிச்சி முடிச்சிட்டேன்...சொல்லுறதுக்கு எதுவும் வார்த்தையே வரலை....எல்லா வார்த்தையையும் நீங்களே கதைல கொட்டிட்டீங்க:)

நிஜமா நல்லவன் said...

/☀நான் ஆதவன்☀ said...

ஐந்தாவது பிள்ளைக்கான காரணம் நகைக்க வைத்தது :)

செட்டியாரம்மாவிற்கு குளுக்கோஸ் ஏற்றி இரண்டு ரூபாய் அல்லது இலவசமாக காய்கறி பெற்று வந்த உங்கள் திறமை மெச்சவேண்டியதே :) (அதான் கடைசியில் போட்டு உடைச்சுடீங்களே பாஸ்) :))/



இதே மாதிரி ஒரு கமெண்ட் நான் போடலாம்னு வந்தா நீங்க போட்டுட்டீங்களே பாஸ்:)

குடந்தை அன்புமணி said...

அக்கம் பக்கம் உற்றுப்பார்த்தால் ஆயிரம் கதைகள் இருக்கும் என்பார்கள். அது உங்கள் எழுத்து வடிவில் வெளிப்பட்டிருக்கிறது. மீதி கதைகளுக்காக காத்திருக்கிறோம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதில் நீங்கள் வல்லவர். சின்னச் சின்ன விடயங்களைக் கூட சுவாரசியமாய் வடித்திருப்பது அருமை..

- இரவீ - said...

நானும் ஒரு மூச்சுல படிச்சிட்டேன்.. :)

இன்னும் பத்தொன்பது கதைகளுக்காக வெயிட்டிங்

Deepa said...

அமித்து அம்மா!

ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நீளமே தெரியவில்லை.

அனுபவங்கள் இருந்தாலும் அவற்றை அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அணுகி அற்புதமாக எழுத்து வடிவம் தருவதென்பது மிகப்பெரிய கலை. அது உங்களுக்கு மிக இயல்பாகக் கைவருகிறது. க்ரேட் அமித்து அம்மா.

ப்ளீஸ்! இன்னும் பத்தொன்பது அல்ல, பத்தொன்பதாயிரம் கதைகளுக்காகக் காத்திருக்கிறேன்!

ஹுஸைனம்மா said...

எல்லாருமே சந்தித்திருப்போம் இந்த மாதிரி காரெக்டரை. ஆனா இந்த மாதிரி அழகா எழுதறது நீங்கதான்.

நட்புடன் ஜமால் said...

அப்படியேத் திரும்பி எதிரே இருக்கும் பஜனைகோவிலுக்கு போனாரென்றால் களை கட்டத்தொடங்கும் தாயபாஸ். இங்கே செட்டியாரம்மாள் அடுப்போடு புஸ், புஸ் ஸென்றும், லொக்,லொக்கென்றும் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அன்னலட்சுமி அவதாரம் எடுக்கத்தொடங்கியிருப்பார்கள்.]]

இரசிக்கும் எழுத்தோட்டம் ...

இன்னும் 10ஒன்பதா சரி வெயிட்டிங்ஸ்

மாதவராஜ் said...

உங்களிடமிருந்து இன்னும் நிறைய வெளிப்படுவதற்கான சாத்தியங்களை உணரமுடிகிறது. அனுபவங்களை இப்படி அர்த்தங்களுடனும், உணர்வுபூர்வமாகவும் எழுத்தில் கொண்டு வரத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள் அமித்து அம்மா.... காத்திருக்கிறேன்.

நல்ல கதை சொல்லி நீங்கள்!

அம்பிகா said...

பஜனைக் கோயில் கருங்கல் படி, செட்டியார், செட்டியாரம்மா என கண்முன்னே காட்சிகள் விரிகின்றன.
கதை சொல்லும் நேர்த்தி பிரமிக்கவைக்கிறது.

சந்தனமுல்லை said...

/அம்பிகா said...

பஜனைக் கோயில் கருங்கல் படி, செட்டியார், செட்டியாரம்மா என கண்முன்னே காட்சிகள் விரிகின்றன.
கதை சொல்லும் நேர்த்தி பிரமிக்கவைக்கிறது.
/

வழிமொழிகிறேன்.

Thamira said...

சிறப்பானதொரு கதை. முடிவில் கச்சிதம்.

துவக்கத்தில் சிறிது தொய்வை உணரமுடிந்தது. இதை வேறொரு ட்ரீட்மென்டில் சீரியஸாக சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என தோன்றியது. இன்னும் கதைகளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

தமிழ் அமுதன் said...

///இன்னும் பத்தொன்பது கதைகளுக்காக வெயிட்டிங்...///
repeettu
உங்களால் மட்டுமே இதுபோன்று காட்சிகளை கண்முன்னே நிறுத்த முடியும் ..!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பும், நன்றியும்.

பா.ராஜாராம் said...

பயங்கர ஆப்சர்வேசன் அமித்தம்மா உங்களுக்கு!

அதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம்.

அப்படியே மாது சொல்வதை வழி மொழிகிறேன்.தொடருங்கள் அமித்தம்மா..

Karthik said...

ரொம்ப நல்லாருக்கு. :)

"உழவன்" "Uzhavan" said...

அனுபவத்தை எழுத்தாக மாற்றுவதெப்படி என்பதை உங்களிடமிருந்துதான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். இப்பதிவு ஒரு குறும்படம் பார்த்ததுபோல் இருந்தது.

CS. Mohan Kumar said...

தங்கள் சிறு கதை உள்ள புத்தகம் இன்று book fair-ல் வாங்கினேன். கதை அருமை. வாழ்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

பாவம் செட்டியாரம்மா..
அருமையான எழுத்து அமித்து அம்மா.அந்த இருபது குடித்தனத்துக்கே கொண்டு போய்ட்டீங்க.

தினேஷ் ராம் said...

கடைசியில செட்டியார் கதை இப்படியா முடியனும்?

செட்டியார் இல்லாம கருங்கல் படுக்கைக்கு ரொம்ப 'போர்' அடிக்கும் என நினைக்கிறேன். ஆயுட்கால பந்தம் இல்லையா!!