20 October 2009

வலி சுமந்த வாழ்வினள்

கடந்த வாரம் முழுவதும் மகப்பேறு மருத்துவமனை வாசம். மருத்துவமனை என்றாலே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பவர்களையும் அந்தப் பரபரப்பு தொற்றி அவர்களின் பின்னுக்கு போன நினைவலைகளையும் இழுத்து வர செய்துவிடுகிறது.

அக்கா பெண்ணின் முதல் பிரசவத்தில் ஏகப்பட்ட மன + பண உளைச்சல்களிலிருந்து இன்னும் சரி வர மீளாத நிலையில் இரண்டாவது பிரசவம். கடவுளையும் உடன் சில மனிதர்களையும் தவிர துணைக்கு யாரையும் அழைக்கவில்லை. எங்களின் பிரார்த்தனைகள் வீணாகவில்லை, சுகப் பிரசவத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, ப்பாடா என்று மூச்சு விட முடிந்தது.

அனேகரின் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக இரண்டாவது, மூன்றாவது என தொடர்ச்சியாக பெண்ணாகவே பிறக்க சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் சலிப்பை காண நேர்ந்தது. மொத ரெண்டும் பொண்ணும்மா, மூணாவதாவது புள்ளையா இருக்கும்னு பார்த்தோம்..., ரெண்டாவது சிசேரியன், வலியோட வலியா ஒரு புள்ளையா பொறந்திடுச்சின்னா நல்லா இருக்கும், கடவுள் என்ன வெச்சிருக்காரோ என வழி நெடுகிலும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கம் ப்ரார்த்தனைகளினூடே வார்த்தைகளில் தொனித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் பத்தில் ஒன்றுதான் ஆண் குழந்தையாக இருந்தது!!!

தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் அம்மாவின் சலிப்பான வார்த்தகளை தாங்க முடியாமல் சக பெண்மணி ஒருவர், ஏம்மா, பொண்ணா இருந்து நம்மளே பொண்ணு வேணாம்னு சொன்னா எப்படிம்மா, இதெல்லாம் நம்ம கைய்யிலியா இருக்குது என்ற வார்த்தைகளுக்கு, அந்தப் பெண்ணின் அம்மா , நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள் அந்த வார்டை விட்டு வெளியேறிய பின்னும் இன்னும் இம்சித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.

பெருத்த வயிற்றை சாய்த்துக்கொண்டு அரை மணிக்கொரு தரம் பாத்ரூமுக்கும், பெட்டுக்குமாக மனைவி பிரசவ வேதனையில் அலைய நேர, அதனை பார்க்க நேரிடும் கணவன்மார்களின் முக வேதனையை நன்றாக உணர முடிகிறது. ப்ரார்த்தனைகளுக்கு வளர்த்து வைத்த தாடியில் புதைந்திருக்கும் முகத்தை மீறி கண்ணில் வலி தெரிகிறது. பார்க்க வரும் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து சிரிக்க நேர்ந்தாலும் அந்த சிரிப்பு வெறுமையாக இருப்பதை எதிர் இருப்பவர்களால் நன்றாக உணர முடியும் என்றே நினைக்கிறேன். பயப்படாதப்பா, ஒன்னும் பிரச்சினையிருக்காது என்று தோளை தட்டுகிறார்கள்.

லேபர் வார்டு கதவை திறந்து கொண்டு புழு, பூச்சி வந்தால் கூட உள்ளே இருப்பவளை குறித்தான விசாரணை நடக்கின்றது. நொடி, நிமிடம், மணி நேரம், பகல், இரவு என தொடர்ச்சியாக நீள நீள, இரு சார்பிலும் வேதனையை அனுபவித்தபின் உலகிற்கு வந்தடைந்து சில நிமிடத்துளிகளே ஆன ரோஜாப்பூவை துணியில் சுற்றி சம்பந்தபட்டவர்களின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள்.
குடும்பமே பதட்டமும், ஆவலுமாய் ஓடி வந்து அத்தனை மணி நேர வேதனையும் வாய் முழுக்க பல்லாய், சிரிப்பாய் வெளிப்படுத்தி குழந்தையைப் பார்த்தபின் பெருமூச்சு விட்டு பெரிய உயிரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுகிறது.

அதுவரை வலியில் துடித்த பின், பூவாய் குழந்தையைப் பார்த்தபின் அதற்கு உணவு தர விழைகிறாள். பின் தனக்கும். துடிதுடித்தடங்கிய வலியில் வயிற்று தசைகள் சுருங்கி பசிக்கு அலையும் போலும். நார்மல் டெலிவரியாகி நான்கு மணி நேரமான பெண்ணுக்கு இட்லி, இடியாப்பம் இப்படி எதுனா கொடுங்க என்று ஆஸ்பத்திரி ஆயா கட்டளை விடுத்துப் போக, அந்தப் பெண்ணுக்கு ஹோட்டலிலிருந்து இட்லியும், சாம்பாரும் வரவழைத்து தரப்பட்டது.
பத்து நாள் சாப்பாட்டையே கண்ணில் பார்க்காத மாதிரி, பறந்தலைந்து கொண்டு அந்தப் பெண்ணும் இட்லியும், சாம்பாரும் குழைத்து இட்லிகளை உள்ளிறக்க, எங்கிருந்தோ ஒடி வந்த அந்தப் பெண்ணின் அம்மா, எம்மா, எம்மா இப்டி சாம்பார ஜாஸ்தியா தொட்டுக்கிட்டு சாப்பிடாதடா, வயிறு உள்ள புண்ணா தான் இருக்கும், பட்டதும் படாமா சாப்பிடும்மா, இனிமே இப்படி பாத்து பாத்துதான் சாப்பிடனும்மா என்று அனுபவமும் அனுசரனையுமாக வார்த்தைகளை விட (இதே அம்மாதான் அந்தப் பெண்ணுக்கு பார்த்து பார்த்து சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து அழகு பார்த்திருக்கக் கூடும்!), பாவம் அந்தப் பெண் கண்ணில் ஏக்கத்துடனே சாம்பாரைப் பார்த்துக்கொண்டு மீதி இட்லியை எப்படியோ உள்ளிறக்கினாள்.

ஒரு உயிரைத் தருவித்தவுடன் சாப்பாட்டில் ஆரம்பிக்கும் சமரசம் தான், அவள் வாழ்வு முழுதும் தொடர்ச்சியாக சமரசங்களுக்கு உட்பட வைக்கிறதோ? பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்.

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?

41 comments:

வனம் said...

வணக்கம்

\\நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள்\\

ரோம்ப நல்லா இருக்கு
இது நம்ம இந்திய தமிழ் கலாச்சார சிந்தணைப்போல

இதே பதிலைத்தான் பெண் சிசு கொலைக்கும் சொன்னார்கள்.
அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் நாம் நல்லா இருக்கனும். யாராவது பெண் பெற்று வளர்த்தால் தானே நாம் கல்யாணம் காட்சி, சுகம் எல்லாம் அனுபவிக்க முடியும்.

பையனுக்கு ஏங்கும் ஆசையை சமுதாய நிலையாக கொள்வது தவறில்லையா ?

இராஜராஜன்

சென்ஷி said...

//உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?//


:-(

pudugaithendral said...

என்னன்னு சொல்ல,

உங்க பதிவை படிச்சதும் ஒரு கலவையான உணர்வு.

எதற்கு விடைதான் இல்லை.

துளசி கோபால் said...

மனசைப் பிசையுறமாதிரி எப்படித்தான் எழுதறீங்களோ!!!!

அதுவும் உங்களை அன்னிக்குப் பார்த்தபிறகு (வேறமாதிரி உருவம் என் மனசுலே இருந்துச்சு) இப்படி ஒரு எழுத்தை உங்களோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே அற்புதமா இருக்கு அமித்து அம்மா.

உங்களுக்கு என் மனம்திறந்த இனிய பாராட்டுகள்.

ஈரோடு கதிர் said...

//ஒரு உயிரைத் தருவித்தவுடன் சாப்பாட்டில் ஆரம்பிக்கும் சமரசம் தான்//

ஆஹா... ஒரு வாழ்க்கை தத்துவத்தையே அப்பட்டமாக காட்டிய வரிகள்

அருமையான இடுகை

Jayashree said...

Boy!!( Sorry don't mistake my expression:)) ) That was a beautiful piece!! Unfortunately that is a truth and a reality in our culture. It need n't have to be this way . This would change Only when we really accept gender equality

பின்னோக்கி said...

3 ஆண் பிள்ளைக்கு அடுத்து, நாலாவதாக நான் பிறந்த போது அலுத்து சொன்ன என் அம்மா “இது பொண்ணாயிருக்கும்னு நினைச்சேன்”.

புதைந்து போன அம்மாவின் புதைந்திருந்த நினைவுகளை எடுத்து உலவ உதவிவிட்டீர்கள். நன்றி.

ராமலக்ஷ்மி said...

\\நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள்\\

பெண்சிசுக் கொலை மன்னிக்க முடியாத ஒன்றுதான். சமீபத்தில் இரட்டையாகப் பிறந்த பெண் குழந்தைகளை தாயும், பாட்டியுமே கொன்று விட்டிருக்கிறார்கள் மதுரையில். அதற்குப் பின்னாலும் இப்படி பல வலி நிறைந்த இயலாமையுடனான காரணங்கள்: ’இரண்டு குழந்தைகளுமே குறையுடன் பிறந்தவை. சிகிச்சை செய்ய தங்களுக்கு வழி இல்லாததால்...’ :( !
---------------------
//லேபர் வார்டு கதவை திறந்து கொண்டு புழு, பூச்சி வந்தால் கூட உள்ளே இருப்பவளை குறித்தான விசாரணை நடக்கின்றது. //

அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். அத்தனை பேர் உணர்வும் இப்படித்தான்.
-----------------------
//தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?//

பதிலே இல்லாத இக்கேள்வியே ஒரு வலி.

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

Jackiesekar said...

நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள் அந்த வார்டை விட்டு வெளியேறிய பின்னும் இன்னும் இம்சித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.//

உண்மைதான் அமித்து அம்மா... உண்மைதான் என் வீட்டில் நான்தான் பெரியவன்.. ஆனால் எனக்கு பின் 4 பெண் பிள்ளைகள்...

ஒவ்வொறு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதறக்குள் போதும் போதும் என்றாகி விட்டது...

என் வீட்டில் பெரிய சொத் பத்து ஏதும் இல்லை.. வரதட்சனை இல்லாமல் யாரும் கல்யாணம் செய்து கொள்ள தயாராக இல்லாத போது என்ன செய்வது.. சொல்லுங்கள்...

Anonymous said...

மறுபடியும் ஒரு சிக்ஸர் உங்ககிட்ட இருந்து அமித்து அம்மா

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ் அமித்து அம்மா..சான்ஸே இல்லை

படிக்கும் போதே அறியாமல் கண்கள் கலங்குகின்றன.

கடைசி பாரா ’நச்’

Anonymous said...

மனதை தொட்ட பதிவு.

அம்பிகா said...

\\பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்//.
இந்த சமரசங்களுக்கு முற்றுபுள்ளியே கிடையாது. கணவன், குழந்தைகள், மருமகள், பேரன்,பேத்திகள்.....என அந்திமகாலம் வரை. விருப்புடன் பாதி, வழியின்றி மீதி. முழுவாழ்க்கையையும் ஒரே வரியில் அழகாக சொல்லிவிட்டீர்கள். அருமை

ஆயில்யன் said...

//பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்.///

ஏதோ தோன்றுகிறது
ஆனால் வெளிப்படுத்த இயலா வார்த்தைகளாய் மனதிலேயே....! :(

ஆயில்யன் said...

அழகா எழுதியிருக்கீங்க பாஸ்!
பிரசவ ஆஸ்பத்திரியில் தின நிகழ்வு உங்களின் எழுத்துக்களில் மனதை தொட்டுச்சென்றது!

Anonymous said...

எக்ஸலண்ட்.

Anonymous said...

ஆனா அந்த சமரசம் மாசமா இருக்கும்போதே ஆரம்பிச்சுடுதே. இதச் சாப்பிடாதே அதச் சாப்பிடுன்னு. மேலும் சாப்பாடு செஞ்சு போடுவதுன்னு ஒரு விழா (வளை காப்பு) வித விதமாச் செஞ்சு எல்லோரும் சாப்பிடுவாங்க ஆனா அந்தப் பொண்ணு பாவம் ஏக்கத்தோட பாத்திட்டிருக்கும்.

சமரசத்திற்கான காரணம் சார்ந்திருப்பதுதானோ?

அ.மு.செய்யது said...

மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!!!
நிறைய இடங்களில் கண் கலங்க வைத்து விட்டீர்கள் !!!!

பதிவு ஏற்படுத்திய தாக்கம் ஒருபுறமிருக்கட்டும்.தனியாக உங்கள் எழுத்தின் முதிர்ச்சியை பற்றி பேசினால் உங்களுக்கே சலித்து விடக்கூடும்.

எழுத்து நாளுக்கு நாள் மெருகேறி வரும் அதே வேளையில்,இந்த பதிவில் குறிப்பிடும்படியாக நான் நினைத்தது Perfection !!

உங்களின் தொடர் வாசகர்களுக்கு நிச்சயம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

நட்புடன் ஜமால் said...

சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க]]

அமித்து அம்மா டச் ...

ப்ரியமுடன் வசந்த் said...

பிறப்போட வலியை அப்பட்டமா உணர்த்திட்டீர்கள்...

- இரவீ - said...

அருமையான உணர்வு படைப்பு.

Yousufa said...

பெண்சிசுக் கொலைக்கு வறுமையை மீறி பச்சாதாபமும் ஒரு காரணம் என்பது உண்மை!

மனசை என்னவோ செய்கிறது உங்கள் எழுத்துக்கள்!!

பா.ராஜாராம் said...

கண்களையும் புலன்களையும் திறந்து வைத்துக்கொண்டே இருக்க தொடங்கியாச்சா...எழுத என்ன கிடைக்கும் என!..அருமையா வந்திருக்கு அமித்தம்மா.

//உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?//

நெகிழ்வு.

அமுதா said...

enna solvathenre theriyavillai amithu amma. simply superb (sorry innum tamil font install pannala). en friend-n appavum ponnunaa varuthapaduvaar... adhu romba kashdappadanume enru... hmm... pennin valihal theerum naal ennaalo??

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் பாட்டியம்மா. அருமையான வரிகள். அதுவும் அந்த கடைசி பாரா நச். நிறைய தோணுது அதை வெளிப்படுத்த தெரியலை அமித்து அம்மா

Unknown said...

ஹ்ம்ம்ம் :'((

காமராஜ் said...

//உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா? //

மிக மிக அற்புதமான பதிவு.
பிரசவ மருத்துவ பகுதிகளை பார்க்கிற உணர்வோடு
உன்னதமான தாய்மையும், வலி மிகுந்த கேள்விகளும்
முன்னிருத்தப்படுகிறது வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

நெகிழ வைத்து விட்டீர்கள் அமித்துமா.
 
பெண் குழந்தை என்றதுமே எல்லோரும் சற்று யோசிப்பதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.
 
பிறந்த அந்த புதுரோஜாவுக்கு என் பிரார்த்தனைகள்

velji said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நானும் ஆஸ்பத்திரியில் மெளனமாக நிற்கிறேன்.

ச.முத்துவேல் said...

அவதியோடு கணிணியில் உலர்ந்த கண்களால் படித்துக்கொண்டிருக்கையில் கண்களை ஈரமாக்கியதற்கு நன்றி.

ஒரு நிறைவான சிறுகதையைப் படித்ததுபோல் உணர்கிறேன்.மிக நன்றாக எழுதவருகிறது உங்களுக்கு என்பதற்கு இந்த அனுபவப் பதிவும் சான்று.

இதை எழுதுணம்னு தோனி எழுதியிருக்கிறதுதான் நல்ல ஃபார்ம்.

மாதவராஜ் said...

அமித்து அம்மா!
ஒரு விஷயத்தைச் சொல்வதில் எவ்வளவு தெளிவு இருக்கிறது உங்களுக்கு! வலி, சந்தோஷம் எல்லாம் அடங்கிய அருமையானப் பதிவு.

தமிழ் அமுதன் said...

என்ன சொல்ல ..?
உணர்ந்து படித்தேன் ..!

Deepa said...

கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்; பிரசவ வார்டையும், மகப்பேறு அனுபவங்களையும்!

உங்கள் அக்கா மகளுக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.

Thamira said...

பெருமூச்செறிவதை தவிர வேறென்ன செய்வதென தெரியவில்லை தோழி.

பெண்களின் சமரசங்கள் தீர்வற்றவை என்றுதான் தோன்றுகிறது. பாலின பாகுபாடாவது தீருமா? இன்னும் சில நூற்றாண்டுகளிலாவது? :-((

தேவன் மாயம் said...

சென்ஷி said...
//உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?//

எதிர்காலத்தில் நிச்சயம் வழியிருக்கும்!!

க.பாலாசி said...

//அனேகரின் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக இரண்டாவது, மூன்றாவது என தொடர்ச்சியாக பெண்ணாகவே பிறக்க சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் சலிப்பை காண நேர்ந்தது.//

அந்த நேரத்தில் இப்படித்தான் பலரின் முகம் இருக்கிறது.

நல்ல இடுகை...வழக்கமான உங்களின் எழுத்துநடையில்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

Karthik said...

raises many questions.. :((

அன்புடன் அருணா said...

படித்து முடிக்கும் முன் கணணில் நீர் வந்தது.அருமை.பூங்கொத்து!

இரசிகை said...

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?


vali.......:(

இரசிகை said...

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?


vali.......:(