13 October 2009

சிறுகதை குறித்தான எஸ்.ராவின் பார்வை - பகிர்வு.

சமீபத்தில் மரத்தடி.காமின் பக்கங்களை புரட்டியபோது படித்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரை. இதோ பகிர்வுக்காக:

மரத்தடி சிறுகதைப் போட்டிக்காக அனுப்பியிருந்த 34 கதைகளையும் நான்கு இரவுகளில் வாசித்து முடித்தேன். ஒரு எழுத்தாளனாகயில்லாமல் தமிழ்ச்சிறுகதையின் தொடர்ந்த வாசகன் என்ற அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு அந்தக்கதைகளிலிருந்து சிறந்த கதைகளை தேர்வு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

தேர்வு செய்வது மிகுந்த ஏமாற்றம் தருவதாகவேயிருந்தது. வாரஇதழ்களும் பாக்கெட் நாவல்களும் தான் தமிழ்சிறுகதையை இவர்களுக்கு அறிமுகமாக்கியிருக்கிறதோ என்று சற்றே வருத்தமாகவுமிருந்தது.

பாரதியில் துவங்கி புதுமைபித்தன், கு. அழகர்சாமி பிச்சமூர்த்தி, குபரா, கரிச்சான் குஞ்சு, பி.எஸ்.ராமையா, மெளனி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, ஆ.மாதவன், வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்ரன், லா.ச.ரா, ஆதவன், ஜி. நாகராஜன், கி. ராஜநாராயணன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, அம்பை, பூமணி, பிரபஞ்சன், ராஜேந்திரசோழன், நாஞ்சில் நாடன், சுஜாதா, கிருஷ்ணன் நம்பி, நகுலன், கோணங்கி, ஜெயமோகன், என தமிழில் தான் எத்தனைவிதமான சிறந்த சிறுகதையாசிரியர்கள்.

ஒவ்வொருவரும் தனக்கெனத் தனியான கதை சொல்லும் முறையும், கதைக்களனும். மொழியும், வாழ்வைப்பற்றிய நுண்மையான பார்வையும் கொண்டவர்கள். உலகச்சிறுகதைகளுக்கு இணையாக தமிழிலும் எழுதமுடியும் இவர்களது பல கதைகள் நிருபீத்து காட்டியிருக்கிறது.

நவீனத்துவம், உளவியல்தன்மை, இருத்தலியம், மேஜிகல் ரியலிசம். பின்நவீனத்துவம் என எந்தவகையான இலக்கிய வகைப்பாட்டிற்கும் தமிழில் சிறந்த சிறுகதைகளை உதாரணமாகக் காட்டமுடியும்.

புதுமைபித்தனின் கதாபாத்திரங்களும், மெளனியின் கவித்துவ மொழியும், சுந்தரராமசாமியின் நுட்பமான வாழ்வனுபவமும், அசோகமித்ரனின் பகடி கலந்த மத்தியதரவர்க்க வாழ்வு பற்றிய மதிப்பீடுகளும், ஜி.நாகராஜனின் வேசிகளின் இருள் உலகமும், அம்பையின் பெண்மொழியும், கி.ராஜநாராயணனின் கரிசல்வாழ்வும், வண்ணதாசனின் நுட்பமானசித்தரிப்பும் வண்ணநிலவனின் காருண்யமற்ற வாழ்வின்வெளிப்பாடுகளும், ஜெயகாந்தனின் உரத்த சிந்தனையும் தமிழ் சிறுகதையுலகில் தனியான போக்குகளை இன்றுவரை உருவாக்கி வந்திருக்கிறது.

இந்தக் கதையுலகிற்கு எள்ளவும் தொடர்பின்றி வணிகஇதழ்கள் பாவனையான, செயற்கையான மொழியில் எழுதப்பட்ட அசட்டுதனங்களையும், அபத்தத்தையும் கதைகளாக நிரப்பிக்கொண்டு ஒருபக்க கதை, அரைநொடிகதை என சிறுகதையின் மலிந்த வடிவங்களை வெகுமக்களுக்கு தொடர்ந்து திணிந்துக் கொண்டேயிருக்கிறது.

சிறுகதை பற்றி பெரும்பாலோரும் அவர்களுக்குத் தெரிந்த அனுபவம் ஒன்றை சுவாரஸ்யமாக எழுதுவது என்று தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் அந்த அனுபவம் தனக்கோ, அருகாமையில் எங்காவது கேட்டோ பார்த்தாக இருக்கலாம் அதை சுவராஸ்யப்படுத்துவது தான் சிறுகதை என்று நம்பிவந்திருக்கிறார்கள். அது நிஜமில்லை.

நல்ல கதை அனுபவத்தை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அனுபவத்தை ஆராய்ச்சி செய்கிறது. அனுபவத்தின் முன்னும் பின்னுமான உலகை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அனுபவத்திற்குள்ளாகும் மனிதனின் கலாச்சாரம், பின்புலம், காலம், தேசம், நிலப்பகுதி யாவும் கவனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கதை எந்த மனிதனைப்பற்றி பேசுகிறதோ அவனது மொழியும் மனவுலகமும் முக்கியமானதாகப் படுகின்றது.

எனது பதினாறாம் வயதில் மாக்சிம் கோர்க்கியின் வான்கா என்ற கதையைப் படித்துவிட்டு இரவு சாப்பிட முடியாமல் படுக்கையில் படுத்தபடி உறங்கமுடியாமல் எதற்கு அழுகிறேன் என்று தெரியாமல் அழுது கொண்டிருந்திருக்கிறேன். கார்க்கி யார் என்று தெரியாது. ருஷ்யா எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாது. ஆனால் வான்காவைப் போல சிறுவயதிலே வீட்டைப் பிரிந்து வேலைக்கு போய்விட்ட சிறுவர்களை எனக்குத் தெரியும், அவர்கள் வேதனையை கார்க்கி ஒரு சிறுவனின் தீராதஆசையை போல விவரிக்கிறார். கதையில் உரத்த குரலில் இல்லை, வேதனைகள் பட்டியலிடவில்லை. பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திவிடுகிறார். ஆந்தோன் செகாவின் ஆறாவது வார்டு கதையைப் படிக்காத எவரோடும் நாங்கள் இலக்கியம் பேச தயாராகயில்லை என்று கோவில்பட்டியிலிருந்த தேவதச்சன் கெளரிசங்கர் போன்ற இலக்கியகுழுவினர் 1980களில் சொல்வார்கள். அதற்காகவே படிக்கத் துவங்கி இன்றுவரை மனதிலிருந்து அகலாத ஆறாவது வார்டை சில வார்த்தைகள் எழுதி எப்படிப் புரியவைப்பது.

வண்ணநிலவனின் எஸ்தர் கதையை முதன் முதலாக படித்து முடித்த போது வாழ்வின் கசப்பு நாக்கிலேறியதையும் புறக்கணிப்பின் துக்கம் உடலை நடுங்கச் செய்ததையும் எப்படி மறக்கமுடியும். இதைவிடச் சிறந்த கதையை இனிமேல் யாராவது எழுதிவிட முடியுமா என்று ஏற்பட்ட எண்ணம் எத்தனை நிஜமானது.
புதுமைபித்தனின் செல்லம்மாள், சுந்தர ராமசாமியின் வாழ்வும் வசந்தமும், கு.அழகரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், இரண்டு சகோரதர்கள், அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள், ராஜேந்திர சோழனின் வானம்வெளி வாங்கி, அசோகமித்ரனின் புலிக்கலைஞன், லா.ச.ராவின் பச்சைகனவு, கு.ப.ராவின் சிறிது வெளிச்சம், கி.ராஜநாராயணின் பப்புதாத்தா, ஜெயகாந்தனின் தேவன்வருவாரா?, வண்ணதாசனின் நிலை. ஆ.மாதவனின் நாயனகாரர்கள். கோணங்கியின் மதினிமார்கள் கதை, பா.ஜெயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள், ந.முத்துசாமியின் புஞ்சை என்ற கிராமத்தின் பகல்பொழுது என சிறந்த கதைகளின் நீண்ட பட்டியல் வாசிப்பதற்காக எப்போதும் காத்திருக்கிறது.

இந்த கதைகள் தான் சிறுகதையைப் பற்றிய புரிதலை எனக்குள்ளாக உருவாக்கின. இவர்களிடமிருந்து தான் தமிழ்மனதின் நுட்பங்களை புரிந்து கொண்டேன். நல்ல சிறுகதைக்கென தனியான இலக்கணங்கள் எதுவுமில்லை.ஆனால் அதை கண்டுகொள்வதற்கு சில வழிகளிருக்கின்றன.

1) சிறுகதை தனக்கென தனித்துவமான கதைசொல்லும் முறையை கொண்டிருக்க வேண்டும். சிறந்த உதாரணம். புதுமைபித்தனின் மகாமசானம். மெளனியின் அழியாசுடர்

2) கதையின் மொழி மிகுந்த நுட்பமாகவும், சரளமாகவும், சுருக்கமாகவும் அதே நேரம் புதிதாகவுமிருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம். லா.சராவின் கதைமொழி, அசோகமித்ரனின் உரையாடல்கள், சுஜாதாவின் விவரணைகள், வண்ணதாசனின் நுட்பமாக சித்தரிப்பு, வண்ணநிலவனின் தனித்துவமான மொழிதல்

3) கதை எந்த அனுபவத்தைச் சொல்கிறதோ அந்த அனுபவத்திற்கு கொஞ்சமும் பரிச்சயப்படாத வாசகனுக்கும் அது புரியவேண்டும், அத்தோடு அவனைப் பாதிக்கவும் வேண்டும். இதற்கு ஜீ. நாகராஜனின் கதைகளை ஒரு மாதிரியாக சொல்லலாம்

4) கதையில் எது கற்பனை, எது யதார்த்தம் என்று பிரிக்கப்படமுடியாமலிருக்க வேண்டும். அதாவது கதை வாழ்வை பிரதிபலிக்க மட்டும் செய்யவில்லை மாறாக வாழ்வை விசாரிக்கிறது, அதை மறுஉருவாக்கம் செய்கிறது. ஆகவே கதையில் எது யதார்த்தம் என்பது வாசகனால் தான் கண்டறிப்பட வேண்டும். கதாசிரியன் அந்த வேலையைச் செய்வது கூடாது. அதற்கு மார்க்குவெஸ் கதைகளையும் ஜோர்ஜ் லு¡யி போர்ஹேகதைகளையும் சொல்லலாம். தமிழில் தற்போதைய பின்நவீனத்துவ கதைகள் சிலவற்றை சொல்லமுடியும்

5) கதாசிரியருக்கு என்று தனித்துவமான அகப்பார்வையிருக்க வேண்டும். அது வெறும் விமர்சனமாகமட்டுமின்றி எதைப்பற்றி கதை பேசுகிறதோ அது குறித்த ஆழ்ந்த ஈடுபாடாகவோ, அல்லது அதைப்பற்றிய அகதர்க்கமாகவோ இருக்கலாம். குரூரம். இயலாமை, கள்ளம், பேதமை என எந்த ஒரு உணர்ச்சயிலிருந்தும் அப்பார்வை உருவாக்கபட்டிருக்கலாம். கு.ப.ராவின் கதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்

6) எந்த ஒரு புதிய சிறுகதையும் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளின் தொடர்ச்சி என்பதால் ஒவ்வொரு கதைக்கும் அது சொல்லும் விஷயமும் மொழியும் நுட்பமும் அதற்கு முன்சொல்லப்படாததாகயிருக்கவேண்டும் என்ற கட்டயாமும், வெறும் நகலெடுப்பாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையும் தேவையானதாகயிருக்கிறது.

7) கதையை முதல்முறையாக வாசிக்கும் போது உருவாகும் மனக்கிளர்ச்சியும் சந்தோஷமும் அதை நு¡றாவது தடவை வாசிக்கும் போது கிடைப்பதாக கதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.


இந்த ஏழும் கூட வெறும் அவதானிப்பில் உருவானவை தான். கணித சூத்திரங்கள் போல இவை இறுதியானவை அல்ல. கதை எழுதுவது இத்தனை கடினமானதா என்ற யோசனை உருவாககூடும். அப்படியில்லை. ஒரு கதை எதைப் பற்றியதாகவுமிருக்கலாம், எத்தனை பக்கத்திற்குள்ளும் இருக்கலாம், கதையில் எத்தனை கதாபாத்திரங்கள் வேண்டுமானாலும் வரலாம், கதைக்குள்ளாக பகடி செய்யலாம், அதீத கற்பனை செய்யலாம், விஞ்ஞானத்தின் சாத்தியங்களை சொல்லலாம். அரசியலை தீவிரமாக விமர்சனம் செய்யலாம், ஒடுக்கபட்ட எந்த விஷயத்திற்கும் கதை எதிர்ப்பு குரலாக இருக்கலாம். கதை எழுதுவதற்கு இத்தனை சுதந்திரமிருக்கிறது .

கதையின் வாசகன் எழுத்தாளனை விடவும் நுட்பமானவன். அவன் உங்களை மட்டும் வாசிக்கவில்லை. அவனுக்கு கதை வாசிப்பில் தேர்ந்த பயிற்சியும் ருசியுமிருக்கிறது. அவனது விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் அவனால் போலியை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். கசடுகளை விலக்கிச் செல்ல முடியும். நல்ல வாசகனாக இருப்பது நல்ல கதையாசரியன் ஆவதற்கு மிகுந்த அவசியம்.

***
இந்த வழிமுறைகளின் வழியே போட்டிக்கதைகளை பரிசீலனை செய்த போது கதை எழுதுவதற்கான ஆர்வம் இருக்குமளவு பலருக்கும் நல்ல சிறுகதைகளின் பரிச்சயமும், சிறுகதை எழுதுவதற்கான பயிற்சியுமில்லை என்று தோன்றுகிறது. ஒன்றிரண்டு கதைகள் நல்ல துவக்கம் கொண்டிருந்த போதும் அதை வளர்த்தெடுக்க எழுத்தாளரால் முடியவில்லை. நான் வாசித்தவரை இப்போட்டியில் பங்கேற்ற பெண்கள் மிக நுட்பமாகவும் தங்கள் மனவுலகை எவ்விதமான தயக்கமுமின்றி வெளிப்படுத்துபவர்களாகவும்.தங்களின் தனித்துவத்தை நிருபீப்பதற்காக போராடுபவர்களாகவுமிருக்கிறார்கள். அவ்வகையில் இது சந்தோஷம் தருவதாகயிருந்தது.

வழக்கமான ராணி,வாரமலர் கதைகள் பாதிக்கும் மேலாக போட்டியில் கலந்து கொண்டிருந்தன. அவைகளை விலக்கிவிடுவதற்கு தான் நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது.

போட்டிகதைகளில் எனக்கு மூன்று கதைகள் முதல் வாசிப்பில் பிடித்திருந்தன. அக்கதைகள் இப்போதுள்ள வடிவத்தை விடவும் இன்னமும் கச்சிதமாகவும் குறைவான பக்கங்கள், விவரணைகளுக்குள் எழுதப்பட்டிருக்கலாம். மொழியில் குறிப்பாக வார்த்தைகளிலும் வாக்கிய அமைப்பிலும் இக்கதைகள் அதிக கவனம் எடுத்திருந்தால் முக்கியமான கதைகளாக உருமாறியிருக்க கூடும். இரண்டாம் மூன்றாம் வாசிப்பில் அக்கதைகள் முந்தைய வாசிப்பை போலவே விருப்பமானதாகவேயிருந்தன.

மூன்று கதைகளும் வாழ்பனுவத்தின் மீது எழுதப்பட்டிருப்பதால் அதன் நம்பகத்தன்மை அக்கதையை வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது. அதுவே அக்கதைகளுக்கு போதாமையும் உருவாக்கியிருக்கிறது. கதைகளின் தலைப்புகளுக்கு எந்த சிறுகதையாசிரியரும் சிறிதும் சிரமப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. சிறுகதைகளை எழுதுவதற்கு ஆகும் காலமளவு, அதற்கான தலைப்பை தேர்வுச் செய்யும் காலம் தேவைப்படுகிறது என்று மார்க்வெஸ் சொல்கிறார். எனக்கு அது பலமுறை அனுபவத்திலும் நடந்திருக்கிறது.

நன்றி: மரத்தடி.காம்

16 comments:

Bee'morgan said...

நல்லதொரு பகிர்வு.. :) நன்றி

நட்புடன் ஜமால் said...

ஏழாக சொல்லிவிட்டு அதையும் அவதானிப்பாக இருக்கலாமுன்னு சொல்லிட்டார் ...

ஒரு கதையை எப்படி எழுது வேண்டும் என்று விளங்குமா என்று தெரியவில்லை, ஆனால் இதை படித்த பின் ஒரு கதையை எப்படி படிக்க வேண்டும் என்று விளங்குகிறது ...

மிக்க நன்றி சகோ பகிர்தலுக்கு ...

ரவி said...

நன்றி !!!

Karthik said...

நன்றி..:)

படிக்க வேண்டியது எவ்ளோ இருக்கு!!!

"உழவன்" "Uzhavan" said...

இனிமேல் நான் கதை எழுதப் போவதில்லை :-)
அமித்துமா..மிகவும் உப்யோகமான இடுகை. மேலுமொரு சிறுகதைப்பட்டறைக்குச் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது.
 
சிறுகதைகளை எழுதுவதற்கு ஆகும் காலமளவு, அதற்கான தலைப்பை தேர்வுச் செய்யும் காலம் தேவைப்படுகிறது என்று மார்க்வெஸ் சொல்கிறார். எனக்கு அது பலமுறை அனுபவத்திலும் நடந்திருக்கிறது//
 
உண்மைதான்.
 
பகிர்வுக்கு நன்றி

சென்ஷி said...

அருமையான கட்டுரை.... பகிர்விற்கு நன்றி அமித்து அம்மா!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி.

அ.மு.செய்யது said...

பகிர்விற்கு நன்றி அமித்து அம்மா!

இதையெல்லாம் மனதில் இறுத்தி கொண்டால் கதையெழுத முடியுன்றீங்க ???

:((((((((((

காமராஜ் said...

அருமையான உபயோகமான பகிர்வு அமித்தம்மா.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி அமித்து அம்மா, ஆனால் கதையை எப்படி எழுதவேண்டும் என்ற நாசூக்குகள் இன்னும் எனக்கு விளங்காமலே இருக்கு.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு அமித்தம்மா.நன்றி.

யாத்ரா said...

பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

உபயோகமான பதிவு. நீங்கள் உங்களுடைய முயற்சியில் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

Thamira said...

இன்னிக்கு ஒரு கதை எழுதலாம்னு இருந்தேன். வட போச்சே.!

இரசிகை said...

nalla pakirvu........