30 October 2009

பாவனைகளும், வார்த்தையும் - 2

வார்த்தை

குண்டிக்கு நேரே கிழியாத ரெண்டு ட்ரவுசரும், எல்லாப் பொத்தான்களும் இருக்கும் ஒரு சட்டையையும் எடுத்து மடித்து, மடிப்பு கலையாமலிருக்க ட்ரங்கு பெட்டியின் அடியி......... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சோலையப்பன் என்ற எட்டாம்வகுப்பு சிறுவன் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாவதே கதை.

பள்ளியில் கன்னியாகுமரி, சுசீந்திரம் என இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சோலையப்பனும் தன் பெயரை கொடுத்து, 10 ரூபாய் முன்பணமும் தந்துவிடுகிறான். ஆறுநாட்களாக பள்ளியிலும், வீட்டிலும் இதே பேச்சாகவும் ஏற்பாடாகவும் இருக்கிறது. ட்ரைவர் மாமா வீட்டிலிருந்து துணிகளும் இன்னபிறவும் எடுத்துச் செல்ல பையை வாங்கிவருகிறான். அவர்கள் வீட்டில் நல்ல ஏர் பேக் இருந்தாலும், கேட்டுப்பார்த்து அதைத் தராமல், ரொம்பவும் பழசாகிப்போன தூசி மண்டிய பேகையே தருகிறார்கள். கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தோடு வாங்கி வந்த பேகையே தேங்காயெண்ணெய் போட்டு துடைத்து வைக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தரும் அண்ணனிடம் இருக்கும் கூலிங்கிளாஸை கேட்கிறான். அவரும் சோலையின் தொடர் நச்சரிப்பைத் தாள முடியாமல் நீ போற அன்னைக்கு காலைல வந்து வாங்கிக்கடா என்கிறார்.

கூட வரும் பையனோடு பவுடர், முகக்கண்ணாடி இத்யாதிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தாயிற்று. பேப்பரில் பல்பொடியை கொட்டி மடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு நாள் கட்டுச்சோற்றுக்கு பேப்பரும், இலையை அவனின் அய்யா வாங்கிவருவதாக சொல்லிவிட்டார். கட்டுச்சோற்றை நினைத்தால் சோலைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடுகிறது. அய்யாவின் துண்டை வாங்கி துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்றால், எழுந்தால், நடந்தால் என வகுப்பு சிறுவர்கள் அனைவருக்கும் சுற்றுலா ஞாபகந்தான். ஆசிரியரிடம் கன்னியாகுமரில என்ன சார் இருக்கும். அவரும் கடல்,விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் இருக்கும் எனவும், காந்தி ஜெயந்தி அன்னிக்கு மட்டும் மண்டபத்து மேல் சூரிய ஒளி விழும் என்கிறார். சிறுவர்கள் அனைவரும், அது எப்படி சார்! அன்னிக்கு மட்டும் விழும் என கேட்க,

அது அப்படித்தாம்லே மூதி,, பாடத்தை கவனிங்க, மீதிய நாளைக்கி சொல்றேன் எனப் போய்விடுகிறார். சுற்றுலா செல்லும் நாளன்று இரவே கட்டுச்சோறும், உடைமைகள் சகிதம் பள்ளியில் வந்து தங்கிவிடவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புறப்படும் சுற்றுலா பேருந்தில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதாக ஏற்பாடு. சுற்றுலா புறப்படுவதற்கான நாளும் வந்தது. காலையில் என்றுமில்லாத உற்சாகத்தையும், கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை. கொஞ்ச நேரம் கழித்து, பேர் கொடுத்து முன் பணம் கட்டின பசங்களெல்லாம் மீதி காசை கொடுங்க. இல்லனா ராவுக்கு பள்ளிக்கு வரவேணாம் என்று நான்கைந்து பெயர்களை உரகக் சொல்ல,சோலையின் பெயரும் இருக்கிறது. மீதி பணம் வாங்கி வர சோலை வீடு நோக்கி ஓடுகிறான்.

வீடு பூட்டிக்கிடக்கிறது, கதவை ஒரு எத்தி எத்திவிட்டு ஓட, சோலையின் அம்மா, இன்னார் வீட்டு வயலில் களை எடுக்கப்போயிருப்பதாக சொல்லிகிறார்கள். ம்மா, யம்மா என்று கூப்பிடும்போதே அழுகை வந்துவிடுகிறது, அவளும் களை எடுப்பதை விட்டுவிட்டு என்ன ராசா, ஏன் இப்படி ஓடியாந்த, ஏன் அழுவுற என்கிறாள். பள்ளிக்கூடத்துல மீதி காசு கட்டனும்மா என சொல்ல, உங்க அய்யா, நாயக்கரய்யா கிட்ட சொல்லி வாங்கியாரன்னு போயிருக்காருப்பா, சாயங்காலத்துக்குள்ள வாங்கியாந்துடுவாரு, நீ பள்ளிக்கோடத்துக்குப் போ ராசா என, ப்போ, காசு இல்லாம நான் போ மாட்டேன், எனக்கு இப்ப காசு வாங்கிக்கொடு என அடம் பிடிக்க, அவளோ களை எடுத்து முடித்துவிட்டு, நாயக்கர் வீட்டுக்கு செல்கிறார்கள். நாயக்கரம்மாவோ, அவ்வளோ காசெல்லாம் எங்கிட்ட இல்ல, அய்யா வரட்டும், அவுரு உங்கூட்டுக்காரர கூட்டிக்கிட்டு மூட்டைய ஏத்திக்கிட்டு டவுனுக்கு போயிருக்காரு என்று சொல்லி, அழுது கொண்டே இருக்கும் சோலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, மோர் குடிக்கிறியா என்கிறாள். வேகமாக வேண்டாம் என்கிறான்.

ஏமாற்றமடைந்த சோலையின் அம்மாவும் யார் யாரிடமோ காசு கேட்டுப்பார்க்கிறாள். எல்லோரும் கைவிரித்துவிட, நேரம் கூடிக்கொண்டே போகிறது, சோலை அழுது, அழுது தொண்டை கட்டி, விடுகிறது. இதற்குள் பள்ளி விட்டு வந்த சிறுவர்கள், என்னடா சோல, நீ வல்லியா என இன்னும் அழுகை அதிகமாகி கண், மூஞ்செல்லாம் வீங்கி விடுகிறது. அவனைப் பார்த்து சோலையின் அம்மாவும் அழுகிறாள். அவ்வளவு பெரிய தொகைக்கு தானெங்கேப் போவது, நாம விசாகத்திருவிழாவுக்கு திருச்செந்தூர் போவோம்ம்பா என்றெல்லாம் சமாதானப்படுத்துகிறாள். எதற்கும் மசியாமல், இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல், அழுது கொண்டே தூங்கிப்போகிறான் சோலை.

ஏற்கனவே பத்து ரூபா முன் பணம் தந்திருக்கு, இப்ப பத்து ரூபா வேணா வாங்கிக்கோ, மீதிய ரெண்டு நா கழிச்சு பார்க்கலாம் என்று நாயக்கரய்யா கை விரித்து விட, இன்னும் நாலைந்து பேரிடம் கேட்டுப்பார்த்து அங்கேயும் ஒன்றும் பெயராததில், பசி வாட்டி எடுத்தாலும் அன்றைய இரவு நாயக்கர் தெரு மடத்திலேயே தங்கிவிட்டார் சோலையின் அய்யா.

ஆறேழு நாளா, ஊருக்கு போற ஆசைல இருந்த புள்ள அழுதுகிட்டு இருந்தத பாத்தவங்க வந்து சொல்ல அந்த பரிதாப முகத்தைப் தன்னால் பார்க்கவும், அவனுக்கு சமாதானம் சொல்ல தன்னிடம் வார்த்தையேதும் இல்லாமல் போக, பசி பொருட்படுத்தாது அங்கேயே துண்டை விரித்து படுத்துவிட்டார் சோலையின் அய்யா.

கதை முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முன்னதான ஆயத்த துள்ளலும், ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையில் சோத்துக்கு இல்லாதது ஒரு பக்கமிருக்க, இப்படி ஆசைகளெல்லாம் நிராசையாகப் போன இன்னொரு வேதனையான கட்டம் தானே இதுவும்.. இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)

இந்தக் கதை ரொம்ப நேரம் தூக்கத்தை கெடுத்தது. பதினோராவது படிக்கும் போது பெங்களூர், மைசூர் போக ஏற்பாடு செய்து தலைக்கு 500 ரூபாயென்று சொல்ல, ஒரு மாச வீட்டு வாடகைய கொண்டு போய் அங்க எதுக்கு தண்டமழுவனும், நீ வீட்டுலயே இரு என்று சொல்லப்பட, உடனிருந்த தோழிகளெல்லாம் நான் வராத வருத்தத்தை சுமந்தபடியே பயணம் போய்வந்தார்கள். பின்னொரு நாள் ஆர்.ஆர்.பி தேர்வுக்காக பெங்களூருக்கு ட்ரெயினில் செல்கையில், அந்த ஏமாற்றத்தை சுமந்துகொண்டு சென்றேன்.

இப்படி நிராசையான ஆசைகளையெல்லாம் நினைவுபடுத்திய கதை, முழுத்தொகுதியும் படித்து முடித்து, முடிந்தால் மீதத்தையும் பகிர்கிறேன்.

21 comments:

தமயந்தி said...

வ‌ர்க்க‌பேத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துவ‌து பொருளாதார‌ம் ம‌ட்டுமே

தமயந்தி said...

வ‌ர்க்க‌பேத‌ங்க‌ளின் முத‌ல் அக் க‌ன்னா ப‌ண‌த்தில் தான் ஆர‌ம்பிக்கிற‌து இல்லையா சார‌தா?

Anonymous said...

சின்ன வயசில் பள்ளி டூர் போக வீட்டில் அனுமதியில்லை. அப்பா காலேஜில் டூர் போகும்போது மட்டுமே கூப்பிட்டுப்போவார். அந்த ஞாபகம் வந்துவிட்டது.

மாதேவி said...

ஆவலுடன் பிரயாணத்திற்கு தயாராகும் சோலையுடன் மகிழ்ந்த எனது மனமும் இறுதியில் சோலை போல் அழுதது.

காமராஜ் said...

தோழர் தமிழ்ச்செல்வனின் சிகரக்கதைகளில் ஒன்று. அது வெளிவந்த போது கூடிகூடிச் சிலாகித்த கதை.
வலை திரும்ப ஒரு சுற்று வரணும். அமித்தம்மாவின் அழகிய வார்த்தைகளில் படிக்க இன்னும் ஈர்ப்பாக இருக்கிறது.

அன்புடன் அருணா said...

/இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா/
கடந்த நிமிடம் வரை நினைவுக்கு வந்தது....பகிர்வுக்குப் பூங்கொத்து!

ஆயில்யன் said...

:((

எத்தனையோ மனக்கோட்டைகள் கட்டி வைத்துக்கொண்டு அதெல்லாம் நிறைவேறாமல் போகச்செய்யும் சூழ்நிலைகள் சிறுவயதில் அதிக ரணம் கொண்டு வரும் ஆனால் இது போன்ற அனுபவங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒவ்வொரு விதமாய் பரிணமிக்கிறது !

அ.மு.செய்யது said...

ஏதோ ஒரு ம‌ழை நாளில் சாலையில் அடிபட்டு இற‌ந்து கிட‌க்கும் ப‌றவையை பார்க்கும் போதெல்லாம் நிராத‌ர‌வாகிப் போன‌ ந‌ம் காத‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து.

அனைத்து சிறுக‌தைக‌ளையும் ஒரே நேர‌த்தில் அல‌சாம‌ல்,ஆற‌ அம‌ர‌ ஒன்றொன்றாக‌ எடுத்து பார்த்து
சிலாகிக்கும் சுக‌மே அலாதி தான்.

உங்க‌ள் ப‌கிர்வு ர‌ச‌னைக்குரிய‌து.மீத‌மிருக்கும் க‌தைக‌ளுட‌னான‌ உங்க‌ள் பார்வைக்காக‌ காத்திருக்கிறோம்.

வெயிலோடு போய் ப‌ற்றி ஏன் இன்னும் சொல்ல‌வில்லை ??

கோமதி அரசு said...

சிறு வயதில் பள்ளியில் சுற்றுலா அறிவிக்கும் போது முதல் பேர் கொடுத்து விட்டு அம்மா அப்பாவிடம் கெஞ்சி,கொஞ்சி போய்விடுவேன்.
பள்ளி பருவத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் அந்த ஆனந்த அனுபவம் கிடைக்கவேண்டும்.

சோலை அப்பனுக்கு கிடைக்காது போனது
மிகவும் வருத்ததை கொடுத்தது.

கோமதி அரசு said...

//உற்சாகத்தையும்,கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை//

அந்த உற்சாகமும் கனவும் கலைந்து போனது மிகவும் வருத்தமாய் உள்ளது.

//ஆயத்த துள்ளலும்,ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப் படுகிறது.//

சோலையின் துள்ளல் முகமும்,
ஏமாற்றமும்,வேதனையும் நிறைந்த
முகமும், மனக்கண்ணில் வந்து
வேதனைப் படுத்துகிறது.

Rajalakshmi Pakkirisamy said...

//இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)//

Hmmm

Thamira said...

நீங்கள் எடுத்துச்சொல்வதே இவ்வளவு வீரியமாக இருக்கும்போது கதை எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதை உணரமுடிகிறது.

ஏமாற்றம் வேதனையை விடவும் வலி நிறைந்தது.

அமுதா said...

nanri... padikka vendum enra aavalai melum thoondukirathu ungal pathivu. siru vayathil marukkappatta sutrulaakkal ninaivil vandhana

Karthik said...

அந்தப் பையனின் கஷ்டம் ஒருவகைன்னா, பையன் முகத்தை பார்க்க முடியாதென்று தங்கிவிடும் தந்தையின் மனநிலை இன்னும் கஷ்டம் இல்ல? :(

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..

கதிரவன் said...

தமிழ்ச்செல்வனின் கதைகள் ஏற்படுத்தும் பாதிப்பு, பெரும்பாலும் மனதைவிட்டு எளிதில் அகலாதது

உங்க எழுத்து-நடை ரொம்ப நல்லா இருக்குதுங்க

தமிழ் அமுதன் said...

இதுபோன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு ..!

கதை அமித்து அம்மாவின் சொந்த படைப்பாக இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்க கூடும் ..!

பா.ராஜாராம் said...

இரண்டு பகிர்வையும் வாசித்துவிட்டேன் அமித்தம்மா.உங்களுக்கே உரித்தான இயல்பான நடையோட்டம்!அருமையான பகிர்வு.நன்றி அமித்தம்மா!

HVL said...

உங்கள் பதிவைப் படித்தபின்
'மிதமான காற்றும் இசைவான கடலும்' புத்தகத்தை தேடி படித்தேன்.
அருமையான புத்தகம்.
' பூ' (வெயிலோடு போய்.....)படத்தின் கதை இவருடையதா?என் மனதைத் தொட்ட கதை இது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமாம், வெயிலோடு போய் கதைதான் பூ என்ற படமாக எடுக்கப்பட்டது.
எனக்கும் இந்த கதையைப் படித்தவுடன் தான் தெரியவந்தது.
நன்றி.

Dr.Rudhran said...

well written

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ பாவம் சோலை :-(

இந்தப் பதிவை எப்படி நான் மிஸ் பண்ணினேன்னு தெரியலயே..