31 July 2009

அம்மா வீடு

மூன்று முடிச்சு என்ற வெகுமானத்தை ஏற்ற பின்பு வரும் மிகப்பெரிய குழப்பமே இனிமேல் அம்மா வீட்டை எங்க வீடு என்று சொல்வதா இல்லை என் வீடு என்று சொல்வதா இதுதான். மாமியார் வீட்டின் மனையை தொட்ட பின்னரே, அம்மா வீட்டுக்கு மூணுநாள் மறுவீட்டிற்காக கூட்டிகிட்டு போவாங்க என்று திருவாய் மலர்ந்து அம்மா வீட்டை அன்னிய வீட்டாக்கிவிடுவார்கள். நாமளும் நம்ம ஜனம் எப்படா கண்ணுல படும் அப்படின்னு தெருவாசப்படிக்கும் வீட்டுக்குமெல்லாம் நடக்க முடியாம (புதுப்பொண்ணு வெட்கந்தான் காரணம்) உள்ளுக்குள்ளேயே குமைஞ்சிகிட்டிருப்போம். திடிரென்று நம் / என் வீட்டு ஜனத்தில் நம்மை அழைத்துப்போக வருவார்கள். ஆஹா புனர்ஜென்மம் எடுத்தாற்போல படும். ஒரே ஓட்டந்தான், சந்தோஷந்தான் எல்லாம் அதிகபட்சம் மூன்று நாளைக்குத்தான். அப்புறம் ஆரம்பிக்கும் ஒரு கண்ணீர் கதை.

கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு உதறல் எடுக்கும், இனம்புரியாத ஏதோவொன்று சூழ்ந்துகொள்ளும். போயிட்டு வரேம்மா என்று சொல்லும்போதே கண்கள் குளம்கட்டி உதடுகள் மடங்கும்.போகும்போது அழக்கூடாதும்மா என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாம் சொல்லிக்கொண்டு, முற்றிலும் ஒரு புதிய பயணத்திற்காக அவரோடும், அவர் தம் மக்களோடும் அவரவர் வசதிக்கேற்ற வண்டியிலேறி போய்க்கொண்டிருப்போம். நாம் மட்டும் தான் போவோம், நம் நினைவுகளெல்லாம் பின்னாடி போகும், வேண்டுமட்டும் திரும்பி திரும்பி பார்த்து தலையில் ஏற்றப்பட்ட பூவின் சுமையோடு ஒரு கட்டத்தில் கழுத்தே சுளுக்கி கொள்(ல்)ளும். இனிமேல்தான் ஆரம்பிக்கும் இந்த அம்மா வீட்டு புராணம்.

எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டுல சட்.,நாக்கை கடித்துக்கொண்டு எங்க அம்மா வீட்டுல இப்படி செய்ய மாட்டாங்களே. அம்மா வீட்டுல இருக்குற கஞ்சி தண்ணிக்கூட இளநீர் கணக்கா இருக்கும்னு பில்டப் வேற. பிறிதொருமுறை அம்மா வீட்டுக்கு போகும் போது, அங்க போனா மறுபடியும் இந்த உங்க வீடு, எங்க வீடு ப்ரச்சினை. ஏங்க உங்க வீட்டுல செய்தாங்களே, எங்க வீட்டுல பாருங்க எப்படியிருக்குது இந்த பலகாரம் என்று சொல்லிக்கொண்டே (கூடுமானவரைக்கும் ஹஸ்கி வாய்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருப்போம். எந்த இடத்தில இந்த உங்க வீடு நம்ம வீடு ஆகும்னு நமக்கே தெரியாது. ஆரம்ப காலகட்டத்துல அம்மா வீட்டுக்கு போகும் போது உபசரிப்பின்போது நடக்கும் உரையாடல்களில் உச்சரிப்பின்போது மாமியார் வீடு அவுங்க வீடு என்பதாய்தான் இருக்கும். இப்படியே தான் அங்கேயும் எங்க வீடு எங்க வீடு என்றே தொடரும், அப்ப இது யார் வீடுன்னு யாரும் கேட்டால் வரும் தர்மசங்கடம் அது ஒரு தனி தினுசு.

சட்டுன்னு ஒருநாள் சரிம்மா, நான் கெளம்பறேம்மா எங்க வீட்டுக்கு என்று நாமே தெரியாமல் உச்சரித்துக்கொண்டிருப்போம். இந்த நுண்ணிய மாறுதல் அம்மா வீட்டிற்கும் புரிய ஆரம்பித்திருக்கும் போது அனேகமாய் அது நாமிருவர் நமக்கொருவரின் தொடக்க காலமாய் இருக்கும். இடைப்பட்ட காலங்கள் அன்பும் அனுசரனையும் அதீத அக்கறையும் என ஓட, இப்போது வந்திருக்கும் முதல் பிரசவம். இனிமே வரும் முதல் மூன்று மாத கால கட்டம்தான் பெண்களின் வாழ்வில் பொற்காலமாய் இருக்கும் அனேகமாய்.

பிறந்து வளர்ந்து பிறகு வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட நாற்று அறுவடையாகி தாய் வீட்டுக்கு மூன்று மாத கால அவகாசம் (5.7 என்று நீட்டிக்கலாம், க்கலாம், லாம், ம்) என்ற இடைவெளியோடு அம்மா வீட்டுக்கு வரும். வேலையே செய்யாமல் வேளாவேளைக்கு சாப்பாடும், குழந்தை ஒன்றே ஆகப்பெரிய குறிக்கோளாய் இருக்கும் இந்தக்காலம், அம்மாக்களெல்லாம் நம்ம குழந்தை(யும்) அம்மாவாயிடுச்சே என்று வியந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அம்மா, அம்மா அப்புடி ஏடாகூடமா குழந்தைய தூக்காதம்மா. ம், ஆமாண்டி, நாங்கல்லாம் ஏது புள்ளை பெத்தது, நீ தான் ஊருல இல்லாத அதிசயமா புள்ள பெத்து வெச்சிருக்க என்று கொஞ்சமாவது வாய்ப்பேச்சு நீளும். பிள்ளைப்பேறு காலத்தில் அம்மாக்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாய்ப்பேச்சாவது (செல்ல சண்டைகள்) இல்லாமல் அம்மா வீட்டின் இந்த மூன்று மாத கால கட்டம் முடிவுறாது. இப்படியும் அப்படியுமாய் மூன்று மாதமுடிந்து இப்போது மீண்டும் அழுகை + அட்வைஸ் சீசன். புள்ளைய இப்படி பாத்துக்கோ, அப்படி பாத்துக்கோ என்றபடி. இனி மகளுக்கும், பேரக்குழந்தைக்கும் சேர்ந்து அன்பு போன் வழியே வழியும்.

நாட்கள் செல்ல செல்ல அம்மா வீட்டின் நினைவுகள் அடி மனதில் தங்கிக்கொண்டே அவ்வபோது அவாக்கள் வெளியே தலைநீட்டும், குழந்தையின் உடல்நலம் அது இதுவென காரணங்கள் வளர்ந்து பிரிவொன்றும் சேர்ந்தே வளரும். என்னதான் அவங்க வந்துட்டு போயிட்டு இருந்தாலும், அங்க போய் டேரா அடிக்கிற அந்த ஒரு அனுபவம் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.

ஏதாவதொரு விசேஷ நாட்களில் மீண்டும் உரையாடல்கள் துவங்கும், என் மச்சினர், என் நாத்தனார், எங்க வீட்டுல இந்த விசேஷம் என்று என், உன் பின் நம்மாகி இருக்கும் நம் மாமியார் வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு அழைப்பு போகும். இனி அம்மாவும் நம் வீட்டு விருந்தாளிகளில் ஒருவளாய் போயிருப்பாள். அம்மா வீட்டு மக்களுமே !!!!!!!!!


ஏனோ இந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது, கடைசிக் கடைசியாக இருக்கும் எனது பெரிய சொத்தான எல்லா புத்தகங்களையும் ரெண்டு ட்ராவல் பேக் முழுதும் நிரப்பி, கணவரோடும், அவர் தம் மக்களோடும் மாமனார் வீடு வர, வீட்டுக்குள் வந்து விட்டுவிட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு, இனிமே அது உங்க வீட்டு பொண்ணும்மா, அதுக்கு கொஞ்சம் முன்கோபம் வரும் அவ்ளோதான், ஏதாவது சொன்னா உங்க வீட்டு பொண்ணா நெனச்சுக்கோங்க என்று என் மாமியார், மாமனாரைப் பார்த்து கை கூப்பிய மாமாவின் நிழல் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. என்னை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு போனபின்னர், அந்த ஒரு பொண்ணு இந்த வீட்டுல இல்ல, என்னமோ வீடே விரிச்சோன்னு இருக்கு என்று சொன்னாயாம் நீ என் அப்பாவுமாய் இருந்திருக்கிறாய் மாமா, உன் நினைவுகளின் நிழலில் ஒண்டிக்கொண்டே என் காலம் 7 மாதம் முடிவுற்றுவிட்டது. மீத காலங்களும் அவ்வாறே.

பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????

37 comments:

நட்புடன் ஜமால் said...

அம்மா வீடு
---- --

எவ்வளவு சுருக்கமா மொத்த பதிவின் தாக்கத்தையும், தலைப்பில் வைத்துவிட்டீர்கள்.

பரவலாக பெண்கள் அதிகம் கஷ்ட்டத்திற்கு உள்ளாகும் அல்லது உட்படுத்தப்படும் விடயம் இது.

கடைசி வரியில் எதார்த்ததை சொல்லியிருக்கீங்க.

பதிவுக்குள் பயணித்து கொண்டிருக்கையில் வைரமுத்து ஏனோ ஏ.ஆரின் இசையில் கூடவே அவரின் வரிகளை அனுப்புகின்றார் ...

எம்பூட்டு தான் சொன்னாலும், வலி இருந்தது உண்மைதான் என்றாலும், விரைவில் அவங்க வீடு எங்க வீடா மாறுவது பெண்கள் நாவில் தான்.

சந்தனமுல்லை said...

/எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டுல சட்.,நாக்கை கடித்துக்கொண்டு எங்க அம்மா வீட்டுல இப்படி செய்ய மாட்டாங்களே. அம்மா வீட்டுல இருக்குற கஞ்சி தண்ணிக்கூட இளநீர் கணக்கா இருக்கும்னு பில்டப் வேற.//

:-)))) ரொம்பவே ஓவர்..அதுவும் ரெண்டு ஸ்டாப்பிங் தூரத்துலே இருந்துக்கிட்டு!! அவ்வ்வ்வ்!


நல்லா இருந்துச்சு அமித்து அம்மா..ஆனா கடைசியிலே :((

Unknown said...

அமித்தும்மா பொறந்த வீடா, புகுந்த வீடான்னு கேள்வியை எழுப்பி, அழகான பதிலும் தந்திருக்கீங்க. இடைப்பட்ட மாற்றங்கள் நம் வாழ்வில் முக்கியமான திருப்பமாக இருப்பினும், பெண்களாகிய நம் மனசுக்கு பிடிச்ச இடம் நம் வீடான அம்மா வீடுதான். புகுந்த வீடு என்ற சொல்லிலேயே அது நாம் வலியன புகுந்த இடம்னு தெளிவா இருக்கே. அது நம்ம வீடா மாறினாலும், நமக்கான ஸ்பேஸ் எப்பவும் அம்மா வீடுதான் (நம்ம பாச்சா எல்லாம் அங்கிட்டுத்தானே பலிக்கும்) எனக்கு எங்க போனாலும் என்ன செஞ்சாலும் என் அம்மாகிட்ட வந்தா போதும் புத்துணர்வு வரும். அவங்களோட இதமான பேச்சும் அணுசரணையும், ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் அன்பும், அவங்க இருக்கிற வீட்டோட vibration எல்லாமும் என் சோர்வை போக்கி சந்தோஷமான மனநிலைக்கு கூட்டிட்டு போகும். ஒவ்வொரு தடவை அங்கே போய்ட்டு வரும் போது கவர்ல எதாவது போட்டுத் தருவாங்க. அது குழந்தைகளுக்கான திண்பண்டமா இருக்கலாம், இல்ல எனக்கு ஊர்க்காய், அல்லது வத்தல் இல்ல எதாவது புது ட்ரஸ், இல்ல பூச்சரம், புத்தகம்னு எதாவது கொடுக்காம என்னை அவங்க அனுப்பினதில்லை. அம்மாவை நினைத்தாலே நெகிழ்ச்சியாக இருக்கிறது, நானும் அம்மாவான பிறகு அந்த அன்பின் ஆழங்களை மேலதிகமாய் உணர்ந்தேன்....அமித்தும்மா ச்சோ மச் பீலிங்க்ஸ் ஆசகிடுச்சு ஸோ இன்னிக்கு அம்மா வீட்டுக்குத்தான் போகப் போறேன் ;))))))

Anonymous said...

பிரசவ கால அம்மா வீடு அனுபவம் எனக்கு இல்லவே இல்லை, நான் எப்போதும் நினைத்து பார்த்து சங்கடப்படும் விஷயம் அது, என் அம்மாதான் ரொம்ப வருசமா உடல்நிலை சரியில்லாமல் இருக்காங்களே...

பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????//

ஏங்க, இப்பவே வயித்த கலக்குது.. ரெண்டு பொண்ணுக, அவங்களும் வேற வீட்டுக்கு போய்ட்டா இது வீடா? வெறும் சுவர்...ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

//
பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????//

கண்டிப்பா வெறிச்சோடணுமா அமித்து அம்மா?!! ;-)

Anonymous said...

போங்க அமித்து அம்மா, என்னென்னமோ ஞாபகத்தை கிளறி விட்டுட்டீங்க.

SK said...

இன்னும் புள்ளைகளுக்கு ஒரு வயசு ரெண்டு வயசு முடியலை.. அதுக்குள்ள இம்புட்டு யோசிக்க ஆரம்பிச்சுடாங்க. ரொம்ப ஓவரு ..

கமெண்ட் போடுற மயில் அக்கா புள்ளை குட்டிய போய் நல்ல படிக்க சொல்லுங்க.. அதுக்குள்ள அவ்வவ் போட்டு கிட்டு.. :)

சமீபத்தில் நான் கவனித்த ஒரு விடயம் இது.. :-) நல்ல சொல்லி இருக்கீங்க..

குசும்பன் said...

//ஆமாண்டி, நாங்கல்லாம் ஏது புள்ளை பெத்தது, நீ தான் ஊருல இல்லாத அதிசயமா புள்ள பெத்து வெச்சிருக்க என்று கொஞ்சமாவது வாய்ப்பேச்சு நீளும். //

அக்கா வீட்டுக்கு வந்திருந்த பொழுது இப்படிதான் அடிக்கடி அம்மாவும் அக்காவும் பேசிப்பார்கள்!

நெகிழ்சியான பதிவு

கே.என்.சிவராமன் said...

அமித்து அம்மா,

என்றேனும் ஒருநாள் உங்களிடமிருந்து வரப்போக்கும் நாவலுக்கான ஸினாப்ஸிஸை, இப்போது எங்களுக்கு வாசிக்க கொடுத்ததற்கு நன்றி :-)

தள்ளிப் போடாமல் உடனே நாவலை எழுத ஆரம்பித்துவிடுங்கள். வெளியிடும் பொறுப்பை நானே ஏற்கிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமுதா said...

/*இனி அம்மாவும் நம் வீட்டு விருந்தாளிகளில் ஒருவளாய் போயிருப்பாள். அம்மா வீட்டு மக்களுமே !!!!!!!!!*/

/*என்னதான் அவங்க வந்துட்டு போயிட்டு இருந்தாலும், அங்க போய் டேரா அடிக்கிற அந்த ஒரு அனுபவம் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.*/
என்ன சொல்ல? வார்த்தைகளில் சொல்லமுடியாதது

/*பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????*/
தோழிகளுடன் இப்படி பேசும் பொழுது நம் பெண்களுக்காவது காலம் மாறாதா என்று பெண்ணைப் பெற்றவர்கள் கூற, அடுத்த தலைமுறையில் மாறட்டும் என்று பையனைப் பெற்றவர்கள் கூறினார்கள் :-). இரண்டு பேருக்கும் இரண்டு வீடுமே மகிழ்ச்சி அளிக்கும் வீடாக இருந்தால் சரி

Vidhoosh said...

:0 என்ன சொல்ல? எங்க வீட்டிலிருது எங்க வீட்டுக்குப் போயிட்டு திரும்பி கிளம்ப லேட்டாகிக் கொண்டிருக்கும் போது, அம்மா "உங்க வீட்டுல தேடுவாங்கடி. கிளம்பு" அப்படீம்பாங்க.
மாமியார் நான் உள்ளே நுழைந்ததுமே "உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா?" அப்படீன்னு கேப்பாங்க.
இதுல எது நம்மளுது?
கவலையுடன்,
==வித்யா

வல்லிசிம்ஹன் said...

அம்மா "உங்க வீட்டுல தேடுவாங்கடி. கிளம்பு" அப்படீம்பாங்க.
மாமியார் நான் உள்ளே நுழைந்ததுமே "உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா?" அப்படீன்னு கேப்பாங்க.
இதுல எது நம்மளுது?
கவலையுடன்,
///top class:))))

butterfly Surya said...

நடை அருமை.

Plz note Sivaraman's comments.

ஆனா இப்போவெல்லாம் அந்த மாதிரி நடக்குதா அமி அம்மா.??

சென்னையில நிறைய புகுந்த வீடுகள் ஒரிரு வருடத்தில் பிறந்த வீடுகள் பக்கத்து தெருவிலோ அடுத்த அப்பார்ட்மெண்டிலோ செட்டில் ஆகி விடுகிறது. இன்னும் சிலர் விலைக்கே வாங்கியும் விடுகிறார்கள்.


அவங்களுக்கெல்லாம் இந்த பீலிங் இருக்குமா..?? அதை மிஸ் பண்றவங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.. பாருங்க தோழி உமாவும் பீல் ஆயிட்டாங்க..

அதைதான் அழகா சொல்லியிருகீங்க..

கலக்குங்க.. வாழ்த்துகள்.

Deepa said...

பெண்களின் இரு வீட்டு பந்தங்களை ரொம்ப நுட்பமா அழகா சொல்லி இருக்கீங்க, படு யதார்த்தமான எடுத்துக்காட்டுகளுடன்.


// அம்மா வீட்டுல இருக்குற கஞ்சி தண்ணிக்கூட இளநீர் கணக்கா இருக்கும்னு பில்டப் வேற. //

:-)) ஆமால்ல...

Unknown said...

///பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????///... உண்மை

குடந்தை அன்புமணி said...

இடுகையை படித்துக் கொண்டே வந்தவள் கடைசிவரி தந்த அழுத்தத்தில் கண் கசிந்துவிட்டேன்.

பெண்குழந்தைகள் பிறந்தால் இதற்காகத்தான் வருந்துகிறார்களோ என்று யோசிக்கிறேன். (இந்த காலத்தில் வேறு காரணமாக இருக்கலாம்)

குடந்தை அன்புமணி said...

இடுகையை படித்துக் கொண்டே வந்தவள் கடைசிவரி தந்த அழுத்தத்தில் கண் கசிந்துவிட்டேன்.

பெண்குழந்தைகள் பிறந்தால் இதற்காகத்தான் வருந்துகிறார்களோ என்று யோசிக்கிறேன். (இந்த காலத்தில் வேறு காரணமாக இருக்கலாம்)

Jerry Eshananda said...

அமிர்தாவின் அம்மாவிற்கு மதுரைஅம்பதியிலிருந்து வணக்கம்.உங்களின் வலைப்பூ பக்கம் வரும்போது சற்று வேகமாக கடந்து விடுவேன்.இப்போ வேறு வழியில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்களை விட்டு விட்டு, இல்லாது விழும் எரி நட்சத்திரத்தின் பின்னே மனசு தவ்வி ஓடுவதை போல,என் வீட்டில் பாரதி,கரிகாலன்,என்ற இரு புதல்வர்களோடு சரி.கொலுசு சத்தம் கேட்க முடியாமல் போனதற்கு எனக்கும்,என் மனைவி ரோசிக்கும் கொடுத்து வைக்கவில்லை. அவ்வப்போது ஏக்கம்,விரக்தி வந்து பெருமூச்சோடு கரைந்து செல்லும். தங்களின் பதிவுகளை வாசிக்க வரும் எங்களை, கருணா சாகரத்தில் அமிழ்த்தி விடுகிறீர்கள். இன்னும் இவ்வுலகில் கருணை,அன்பு என்னும் தாயுள்ளம் இருப்பதால் தான்,இப்பிரபஞ்ச வெளியில் சிறு தூசியாய் உழலும் நம் பூமி தன அச்சில் நேர்த்தியாய் இன்னும் சுழல்கிறது என்று நம்புபவர்களில் இந்த எளியவனும் ஒருவன்

ஈரோடு கதிர் said...

உருக்கமான பதிவு

அ.மு.செய்யது said...

ம்ஹூம்.....என்னத்த சொல்ல ??

பை.காரன் சொன்ன நீங்க எழுதப்போற நாவலுக்கு நானும் கொஞ்சம் அணிந்துரை எழுதுறேங்க..ப்ளீஸ்.

ஆகாய நதி said...

ம்ம்ம்... ரொம்ப ஃபீல் பண்ண வெச்சுட்டீங்களே.... எனக்கு இந்த எங்க வீடு அப்படின்னு சொல்லும் வழக்கம் கொஞ்சம் சிக்கலாவே இருந்தது... அடிக்கடி வாயில் வந்துவிடும் சொல் தொண்டையோடு முழுங்கிவிடுவேன்...

அம்மா வீடு அம்மா வீடு தான்... அதற்கு நிகர் அது தான்!

ஆகாய நதி said...

ஆனால் கடைசியில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறதே :(

சிங். செயகுமார். said...

//இந்த நுண்ணிய மாறுதல் அம்மா வீட்டிற்கும் புரிய ஆரம்பித்திருக்கும் போது அனேகமாய் அது நாமிருவர் நமக்கொருவரின் தொடக்க காலமாய் இருக்கும். //


போகின்ற போக்கில் அள்ளி தெளித்துவிட்டு போன அந்த வாக்கியம் அழகோ அழகு.




நேத்து நைட் உக்காந்து எல்லா பழைய பதிவையும் படிச்சிட்டேன்.........

ஆகாய நதி said...

//
பெண்குழந்தைகள் பிறந்தால் இதற்காகத்தான் வருந்துகிறார்களோ என்று யோசிக்கிறேன்
//

உண்மைதான் எனக்கு பெண் பிறந்தால் இப்படியெல்லாம் நடக்குமே என்று குழந்தையை சுமந்த போதே யோசித்தேன்... அப்போதே என்னால் அதைத் தாங்க முடியவில்லை...
பிறந்தது பொழிலன் :)

ஆயினும் என் மனதில் பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் மிகுதியாக இருக்கத்தான் செய்கிறது!

Prakash said...

மிக நுட்பமான பதிவு. பலருக்கு ரணமாக புகுந்த வீடு இருந்திருக்கிறது. மிகவும் சுதந்திரமாக , சுய சிந்தனோயோடு இருந்த சிலர் புகுந்த வீட்டில் அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின அடிமைகளை காட்டிலும் கேவலமாக நடத்த பட்டிருக்கிறார்கள்.சில அனுபவங்கள் நிழலாடுகிறது இதை வாசிக்கும்பொழுது. பதிவிற்கு வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இங்க நானும் வீட்டுக்காரங்களும் ரெண்டுபேருமே அம்மாவீடு விட்டுட்டுவந்தவங்க தான்..இது “நம்ம வீடு” ஊருக்குப் போனாதான் அம்மா வீடு :))

Uma said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!

Unknown said...

எம் மகளும் மாமியார் வீட்டுக்குப் போயிடும்ல. அங்கே போனால் அப்பா நினைப்பெல்லாம் வராதா? அம்மாவை மட்டும்தான் நினைப்பாங்களா? ஏங்க அம்மாவைப் பற்றி இவ்வளவு எழுதி இருக்கீங்க. மாமாவைப்பற்றியெல்லாம் எழுதி இருக்கீங்க. அப்பாவைப் பற்றியும் போனாப்போகுதென்று ஒரு வார்த்தை போட்டிருக்கலாம்.
இதெல்லாம் ஒத்து வராது. வீட்டோட மாப்பிள்ளையா கிடைச்சா பார்த்திர வேண்டியதுதான். :))

sakthi said...

ஞாபக அடுக்குகளை பின்னோக்கி நக்ர வைத்துவிட்டீர்கள் அமித்து அம்மா

"உழவன்" "Uzhavan" said...

//இனி அம்மாவும் நம் வீட்டு விருந்தாளிகளில் ஒருவளாய் போயிருப்பாள்//


ப்ச்ச்.. ரொம்ப கஷ்டம்ல :-((
சொந்த வீடே விருந்தாளி வீடாய்ப்போவது என்பது.... என்னத்த சொல்ல

தமிழ் அமுதன் said...

சரி .......... உங்க நிலைய சொல்லிடிங்க! நீங்களும் அழுது ! வீட்ல உள்ளவங்களையும்
அழ வைச்சுட்டு புருஷன் வீட்டுக்கு போய்டுவீங்க! அங்க போனதும் புது வீடு ,புது சொந்தம்,கணவன் அப்படின்னு அம்மா வீட்டு பிரிவு வலியை மறந்து உடனடி உற்சாகம் அடைய செய்யும் விஷயங்கள் அதிகம்!! (சந்தோசம்தான்)




ஆனா!

வீட்டுல உற்சாகமா வளைய வந்த சகோதரியை ,மகளை பிரியும் வலியை யாரு சொல்லுறது! பொண்ணு புருஷன் வீட்டுக்கு போனதும் வீட்டுல உள்ளவங்க ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்து பேசவே ரெண்டு மூ்ணு நாள் ஆகும்! அதோட அவங்க இயல்பு நிலைக்கு திரும்பவே சில நாட்கள் ஆகும்! அழுகை ன்னா என்னன்னே தெரியாத சில கல் நெஞ்சு காரங்க கூட பொண்ண பிரியும் போது கண் கலங்குரத பார்த்தது உண்டு!

எதுவானாலும் ! காலப்போக்கில் மறந்துபோகும் ஒரு சகஜ விஷயம் இது!!

தேவன் மாயம் said...

பிறந்து வளர்ந்து பிறகு வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட நாற்று அறுவடையாகி தாய் வீட்டுக்கு மூன்று மாத கால அவகாசம் (5.7 என்று நீட்டிக்கலாம், க்கலாம், லாம், ம்) என்ற இடைவெளியோடு அம்மா வீட்டுக்கு வரும். வேலையே செய்யாமல் வேளாவேளைக்கு சாப்பாடும், குழந்தை ஒன்றே ஆகப்பெரிய குறிக்கோளாய் இருக்கும் இந்தக்காலம், அம்மாக்களெல்லாம் நம்ம குழந்தை(யும்) அம்மாவாயிடுச்சே என்று வியந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ///


அம்மா வீட்டு சுகத்தை நல்லாச் சொல்லியிருக்கீங்க! இது ஒரு தொடர்கதைதானே.............

கோமதி அரசு said...

//அம்மா வீடு//

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும், ஏற்பட்ட உணர்வுகளை அழகாகச்
சொல்லியிருக்கிறிர்கள்.

கூட்டுக் குடும்பமாய் இருக்கும் போது எங்கவீடு என்று மாமியார் வீட்டைக்கூறுகிறோம்.

தனிக்குடித்தனம்
இருக்கும் போது, விடுமுறைக்கு
எந்த ஊருக்குப்
போகிறிர்கள்? என்று பக்கத்துவீட்டில்
கேட்டால் மாமியார் வீட்டுக்குப் போவதாக இருந்தால் மாமியார் வீட்டுக்குப் போகிறோம் என்கிறோம். ,அம்மா வீட்டுக்குப் போவதாக இருந்தால் அம்மா வீட்டுக்குப் போகிறோம்
என்று சொல்கிறோம்.

விழாக்கள் கொண்டாடும் போது மட்டும் ’ எங்க வீட்டுப்பழக்கம் இப்படி, அம்மா வீட்டுப்பழக்கம் இப்படி’ என்கிறோம்.இது மாதிரி நேரங்களில் மாமியார் வீட்டை ’எங்கவீடு’ என்கிறோம்.இல்லையா?

பா.ராஜாராம் said...

எவ்வளவு அருமையான பெண்,மகள்,மருமகள்,மனைவி,தாய்,அம்மா,நீங்கள் அமித்து அம்மாள்.வேலைகளில்,.. தமிழ் மனத்தின் "இந்த வாரத்தின் நட்சத்திரம்" அறிய முடியாமல் போயிற்று.ஆனால் என்ன...கண் நிறைந்து விட்டது.வாழ்த்துக்கள்!நல்ல தெளிவான நடையும் அமித்து அம்மா...

pudugaithendral said...

அருமையான பதிவு.

ஒவ்வொரு பெண்ணின் மனநிலையை படம் பிடிச்சு காட்டிய மாதிரி இருந்துச்சு.

மாதவராஜ் said...

நெகிழ வைத்து விட்டீர்கள்.
//சட்டுன்னு ஒருநாள் சரிம்மா, நான் கெளம்பறேம்மா எங்க வீட்டுக்கு என்று நாமே தெரியாமல் உச்சரித்துக்கொண்டிருப்போம்.// மிக முக்கியமான இடம் இது!

Iyappan Krishnan said...

ரொம்ப நெகிழ்ச்சியான விஷயம்.