30 July 2009

விருப்பங்களால் ஆன(அ)வள்

வழமை போலவே பணி முடிந்து கூடு நோக்கிய பயணம் தொடர்ந்தது, நேரத்திற்கு பின் ஓடினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட இரயிலைப் பிடிக்கமுடியும். அனைவருமே கடிகார முட்களின் பின்னால்தான் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அது முன்னே ஓட ஓட அதற்கு முன்னால் நாம் ஓட எத்தனித்து கால்மணி நேரம் முன்னதாக கடிகார முள்ளை மாற்றி வைக்கிறோம். ஓடிப்போய் ஏறியவுடன் சுவாசத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு இருக்கை கிடைத்தது ஆச்சரியமல்ல, அதிசயம். அந்த மாலை நேரத்து ரெயிலில் எப்போதுமே கூட்டம் நிரம்பிவழியும். அவளுக்கு எப்போதும் விருப்பமானது மழைக்கால ரயில்பயணம். மெல்லியதான மழையின் சாரல், ஈரக்கற்களும், தண்டவாளங்களும், அங்கங்கே முளைத்திருக்கும் புல் பூண்டுகளும், காற்றில் ஒரு வாசத்தை கிளப்பிவிட்டிருந்தது. ரெண்டே நிமிசந்தான் அதை அனுபவிக்க முடிந்தது. ஜன்னலுக்கு சற்று ஒட்டிய இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணி, சாரலடிக்குது, புடவையெல்லாம் நனைஞ்சிடும் என்றவாறே கண்ணாடி கதவை இழுத்துவிட்டாள். யாருடைய அனுமதியுமன்றி மற்றவருடைய விருப்பங்களை கண்ணாடி ஜன்னலை மூடியதைப்போலவே சடாரென்று மூடிவிட்டாள். ஒரு நொடி கோபம் வந்தாலும், விரும்பாமலேயே அவளுடைய எத்தனை விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்று தோன்றியது. ஒன்றா, இரண்டா.

ஆரம்பகாலத்தில் கழுத்துவரை முடி கத்தரிக்கப்பட்டிருந்தாள், அதுவே அவளுக்கு பிடித்தமாய்தான் இருந்தது. விடுவதாயில்லை. இது வரைக்கும்போதும், இனிமே முடி வளர்த்தாகவேண்டும் என்றபடியே குட்டை முடி நீளமானது.நீளமான பின் அவளுக்கு எப்போதும் ஒற்றை பின்னல் மேல்தான் இஷ்டம் ஜாஸ்தி. பள்ளியிலோ இரட்டை பின்னல் மடித்து கட்டப்பட்டே வரவேண்டும் என்பது நியதி. வார இறுதியில் தலைக்கு குளித்திருக்கும்போது குதிரைவால் போட அவளுக்கு மிகவும் விருப்பம். ஆனால் மறுநாள் பள்ளிக்கு போகும்போது சிக்கலாகி விடும் என்ற காரணத்தினாலேயே அதுவும் மறுக்கப்பட்டது. இப்படி முதலில் முடியில் ஆரம்பித்த அவளின் விருப்ப நிராகரிப்பு வளர்ந்தே வந்தது அவளூடே.

பதின்ம வயதில் ஆகக்கூடி அதிகம் அணியவேண்டிய ஆடை பள்ளி சீருடையே. அவளுக்கு வாய்த்த பள்ளியில் பச்சை குட்டைப்பாவாடையும், வெள்ளை நிற சட்டையும். அப்போது அவளுக்கு ஃபினோபார்ம் உடையின் மீது அதிக வசீகரமிருந்தது, பின்னால் அது வி வடிவத்தில் துப்பட்டாவை பின்குத்தி போடும் சுடிதாரின் மேல் மையம் கொண்டது. ஆனால் கடைசிவரைக்கும் அவள் அந்த குட்டைப்பாவாடை சீருடை அணியவே தலைப்பட்டாள். அவளுடைய ப்ரார்த்த்னை சீருடை மாற்ற வேண்டியதாயிருந்தது. வீட்டாருடைய வேண்டுதலோ இருக்கும் சீருடை தொடர்ந்தாலே அடுத்த வருடம் சீருடைக்கான செலவேதும் இருக்காது என்பதாயிருந்தது.

அவளுக்கு உயரமான மேஜையும், உடன் நாற்காலியோடு அமர்ந்து படிக்க அதிக விருப்பமாயிருந்தது. இடமும் உடன் பணமும் பற்றாக்குறையினால் வைத்து எழுத வசதியாய் சின்னதாய் ஒரு சாய்வு மேசைதான் தரப்பட்டது. அதிகம் கேட்டால் வீக்கம் விரலுக்கு தக்கபடிதான் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாள்.ஆனால் விருப்பங்கள் விரலைத் தாண்டியும் நகம் போல் வளர்ந்துகொண்டேயிருந்தது.அவளும் நகத்தோடே விருப்பங்களையும் குறைத்துக்கொண்டே வந்தாள்.

வாய்களின் ஓயாத இரைச்சலோடும், குண்டு பல்பின் குறைந்த ஒளிக்கற்றைகளிலுமே பத்தாவது வரை படிக்க நேர்ந்தது. அப்போது அவளுக்கு குழல்விளக்கின் நிழலில் படிக்கவொரு ஆசையிருந்தது. ஆனால் அந்த வெளிச்சம் எல்லோருக்குமாயிருக்கும் அந்த ஒற்றை அறை முழுதும் பரவுமென்பதால்,இரவு, அதிகாலை படிப்பெல்லாம் திண்ணையின் குண்டு பல்பின் வெளிச்சத்திலேயே கழிந்தது. பதினொன்றில் பொருளாதாரமே விருப்பப்பாடமாக எடுக்க விருப்பம். அதிலும் வேறொரு பள்ளியில் (இந்த சாக்கிலாவது சீருடை மாறாத என்ற நப்பாசையும் ஒரு காரணம்)கணக்கு அவளுக்கு கசப்பானதென்றும், அதில் ஒரு பாடம் முழுக்க கணக்காவே வரும், வேண்டாம், முழுக்க முழுக்க அறிவியலே படிக்கட்டும் என்றானது. விருப்பமான பள்ளியையும் உடன் பாடத்தையும் தேர்ந்தடுக்கவிடவில்லை விருப்பங்களை நம்மை கேட்காமலேயே மாற்ற முழு உரிமம் ’பெற்ற(அ)வர்கள். இதற்குள் அவள் விருப்பமற்றதையும் விருப்பமாக்கிக்கொள்ளும் வித்தையறிந்திருந்தாள். அழுதாலும், தொழுதாலும் எது நடக்குமோ அதுதான் நடக்கும் நடந்தே தீரும் என்ற கீதாச்சாரம் அவளுக்கும் உபதேசிக்கப்பட்டது.
தமிழிலிருந்து ஆங்கில வழிக்கல்வி, ஆறுமாதத்திற்கு பிறகு அனைத்திலும் தேர்ச்சி. தலையெழுத்தையே நிர்ணயிக்க போவதாய் கருதும் மதிப்பெண் அட்டைகளை ஒவ்வொரு பரீட்சையின் போதும் பெற்றோரே வந்து வாங்கக்கடவது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எப்போதும் அவளின் அக்காதான் அவளுக்காக வருவாள். ஆசிரியை அக்காவின் அருகாமையிலேயே அவளைத் தட்டிக்கொடுத்தாள். இன்னும் கொஞ்சம் கடின உழைப்பிருந்தா இன்னும் மதிப்பெண் கூடும், என்ன கொஞ்சம் சேட்டைகள் நிறைந்த செல்லப்பெண்ணாக இருக்கிறாள் இவள். தன்னைக்குறித்து பிறர் மனதில் தோன்றும் பிம்பத்தை அவள் அப்போதுதான் முதன்முதலில் கேட்டறிந்தாள். கடின உழைப்புத்தான் ஆனாலும் காலத்தின் கணக்கு வேறாகியிருந்தது. ஒரு பாடம் தேர்ச்சி பெற முடியாமல் போனாள். மூன்றே மூன்று மதிப்பெண்களால் அவள் முழுமையடையாமல் போனாள். அத்தனை ஆசிரியர்களும் “உச்” கொட்டினார்கள். யாரோ சொன்னார்கள், ஆரம்பத்துல அவள் சொன்னாமாதிரியே அவள் விருப்பப் பாடத்தையே எடுத்திருக்கலாம் அப்படியென்று. அவள் இப்போது இது போன்ற வார்த்தைகளுக்கு சிரிக்கக் கற்றுக்கொண்டிருந்தாள். மீண்டும் எழுதினாள் தேர்ச்சியடைந்தாள். பள்ளி இறுதி நாட்களில் அவளும் கல்லூரிக்கு போகும் கனவுகளில் மிதந்தாள். கல்லூரிப் பெண்ணாக அவள் கலர் கலர் ஆடைகளில் கைகளில் நீள புத்தகத்தோடு பேருந்தில் பயணிப்பதைப்போன்று கனவுகள் கண்டுகொண்டிருந்தாள்.

இறுதியாண்டு தோல்வி விருப்பங்களோடு சேர்த்து அவளை விழுங்கி விட்டாலும், இப்போது விருப்பமின்றியே கட்டாயத்துக்காக பல்கலைக் கழக வாயிலாக படிப்பைத் தொடர்ந்தாள். தோழிகளனைவரும் பேருந்து நிறுத்தம் வரை வருவார்கள், அவர்கள் இடப்பக்கம் கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கும், இவள் எதிர்ப்பக்கம் வேலைக்கு போகும் பேருந்து நிறுத்தத்திலும் நின்றாள். வேலையும், படிப்புமென ஒரே பாதைதான். இளங்கலையில் மூன்றாண்டுகளும் முதல் வகுப்பில் தேர்ச்சியானாள் அவள். அடுத்ததை தொடர்ந்தாள். அடுத்ததும் தொடர்ந்தாள். மூன்று மதிப்பெண்களை இழந்ததாலோ என்னவோ அவள் மூன்று பட்டப்படிப்பை முடித்தாள். முதன் முதலாக வேலைக்குப்போன இடத்தில் குறைவான சம்பளமென்றாலும், நிறைவான ஒரு மனிதரை காண நேர்ந்தது அவளுக்கு. அனேகரின் காதல் நட்பில்தானே தொடங்குகிறது.

நான்கு வருட நட்புக்கு பிறகு அது காதலானதை உணர்ந்தவுடனே அவளுக்கு அவளது விருப்ப நிராகரிப்பின் பயம் படையெடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை இந்த விருப்பத்தை எவரெதிர்ப்பினும் அவள் நிராகரிப்பதில்லை என்று முடிவு செய்தாள். ஆனால் முடிவிலாப்போராட்டம் ஒன்று எட்டாண்டு காலமாக நடந்தே பயணித்தது அவளோடு. வாசிப்பிலும், கிறுக்கல்களிலும் தன்னை மீட்டெடுத்துக்கொண்டாள் அவள்.

இவளின் இந்த விருப்பத்தை யாராலும் நிராகரிக்க முடியாதென்று தீர்மானித்தார்களோ என்னமோ உரிமம் பெற்றவர்கள் கடைசியாய் தலை சாய்த்தார்கள், அவளும் தலைசாய்த்தனள் தன் தலைவனின் தோள்மீது. முதன் முறையாக அவளின் வாழ்வின் முதலும் கடைசியுமான விருப்பம் முற்றுக்கு வந்தது. இந்த முற்றும்க்கு பின்னர்தான் தன் விருப்பங்களை தெளிவாகத் தீர்மானித்துக்கொண்டாள். தைரியமாக தன் விருப்பங்களை தெரியப்படுத்தினாள். வரையறைகளுக்குள் தோன்றும் விருப்பத்திற்கு விரலாவது வீக்கமாவது.

காலை மிதித்தாலும், காற்றை அடைத்தாலும் கத்தாதவர்கள் சக பயணிகள், அந்தப் பெண்மணி ஜன்னலை மூடியதற்கும் மறுப்பில்லை அவர்களிடம். அவள் இப்போது அந்த பெண்மணியிடம் சற்று குரலுயர்த்தி சொல்கிறாள். சாரலில் உங்களுக்கு புடவை கொஞ்சம்தான் நனையும், ஆனால் எங்களுக்கு முழுசாய் காற்றே வரவில்லை என்று. வேண்டுமென்றால் நான் அங்கே உட்கார்ந்து கொள்கிறேன், நீங்கள் இங்கே வாருங்கள். அந்தப் பெண் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, காற்றோடு வார்த்தைகளை முணுமுணுக்கிறாள். அதை கவனித்தும் கண்ணுறாதவளாய் அவள் முகத்தோடு வந்து மோதும் சில்லென்ற மழைக்காற்றோடு, பயணத்தை தொடர்கிறாள். கூட்டினைத் தொட்டுவிடும் தூரம். இப்போது மகளின் விருப்பங்களுக்கெல்லாம் மறுப்பேதுமில்லாமல் தலை சாய்க்கவென்றே அவளின் நடை வேகமாகின்றது.

36 comments:

சந்தனமுல்லை said...

Wow...Hats off Amithu amma!!!

நட்புடன் ஜமால் said...

நிறைய சொல்லனும் போல் தான் இருக்கு


இப்போதைக்கு

கடைசி வரிகளில் புரிகிறது நீங்கள் புரிந்துகொண்டது

butterfly Surya said...

விருப்பங்களால் ஆனவருக்கு இனி வாழ்வில் எல்லா விருப்பங்களும் நிறைவேற வாழ்த்துகள்..

அற்புதை நடை..

எலக்ட்ரிக் டிரெயினை விட செம ஸ்பீடு..

அபி அப்பா said...

ஒரே பதிவில் சுயசரிதமா??? அருமையான எழுத்து நடை!!! அற்புதமா வந்திருக்கு இந்த பதிவு!!!!

சந்தனமுல்லை said...

:-)

மூன்று பட்டப்படிப்புகளை முடித்த(அ)வளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!! thumps-up!!!

Anonymous said...

எப்ப அவளுக்காக வாழப்போகிறாள்?

அமுதா said...

/*வரையறைகளுக்குள் தோன்றும் விருப்பத்திற்கு விரலாவது வீக்கமாவது.*/
அழகாகக் கூறினீர்கள். இரயில் பயணத்தில் தொடங்கி வாழ்க்கைப்பயணதையே சொல்லி விட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள்

கே.என்.சிவராமன் said...

கைய கொடுங்க அமித்து அம்மா...

'நட்சத்திர' வாரத்துல உண்மைலயே ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரம் தெரியுது...

அதுவும் இந்தப் பதிவு... 'புனைவு' நீங்க சொன்னாலும், என்னவோ தெரியலை, இதை புனைவா மட்டுமே வாசிக்க முடியலை.

வார்த்தைகளோட அடர்த்தில, மொழி உங்க முன்னாடி மண்டியிட்டு அமர்ந்திருக்கு. தொடர்ந்து எழுதுங்க...

நன்றி, நல்ல வாசிப்பனுபவத்தை எங்களுக்கு தந்ததுக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அ.மு.செய்யது said...

பைத்தியக்காரன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

செம்ம காண்டா இருக்கு..

நிறுத்துங்க..
இதோட நிறுத்துங்க..!!

அ.மு.செய்யது said...

அடுக்கு மொழி,வார்த்தை ஜாமல்,சொல் அலங்காரம் ஏதுமில்லாமல்
இவ்வளவு எளிமையாக சுவாரஸியமாக எழுத முடியுமா என்பவர்களுக்கு
இச்சிறுகதை ஒரு சான்றாக அமையட்டும் !!

அ.மு.செய்யது said...

சாரி அது வார்த்தை 'ஜாலம்'....ஸ்லிப் ஆஃப் தி டொங்கு !!

தமிழ் அமுதன் said...

ரயில் நிலையம் ...!

ரயிலுக்கு காத்திருக்கும் ஒருவன் ...!

அவனை கடந்து செல்லும் வேறொரு ரயில்...!

ரயிலின் முதல் பெட்டி தொடங்கி
கடைசி பெட்டி அவனை கடப்பதற்குள் ஒரு வாழ்க்கை
கதையை முழுவதும் பிசிறில்லாமல் சொல்லி விட்ட வேகம் !

இப்படி எழுதுவது சுலபமல்ல!!
''எந்த சாயலும் இல்லாத அபூர்வமான எழுத்துநடை''
இப்படி பட்ட எழுத்து நடையை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி!

SK said...

அருமை

सुREஷ் कुMAர் said...

நிராகரிப்புகளை சூப்பரா சொல்லிருக்கிங்க..

இவற்றில்பல ஆண்களுக்கும் பொருந்தும் தானே..

எனக்கும் பலது நிராகரிக்கப்பட்டுள்ளன..
இன்றுவரைக்கும் நிராகரிக்கப்படுகின்றன..

சிங். செயகுமார். said...

அழகான நடை.
இர்ண்டாவது தடவையும் வாசிக்க தூண்டியது. இன்று ஓர் மனம் கவர்ந்த வாசிப்பனுபம்..... நட்சத்திர வாழ்த்துக்கள் அ..அ

Unknown said...

அமித்தும்மா, க்ளாஸிக். வார்த்தைகளே இல்லை பாராட்ட. எளிமையும் அழகியலும் உண்மையும் அடுக்கடுக்காய் ஒவ்வொரு வார்த்தையும் ரசித்தேன். முடித்த விதம் அற்புதம். வாழ்த்துக்கள்!!

சென்ஷி said...

கலக்கல் எழுத்து நடை. நல்ல மெருகேற்றம் வர்ணிப்புகளில். வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

Unknown said...

ஏங்க... இப்பிடியே எழுதினா நாங்களெல்லாம் எப்பங்க நட்சத்திரம் ஆகிறது?...lol

ரொம்ப நல்லாருக்குங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லா நல் விருப்பங்களும் நலமே நிறைவேற வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

வார மாத இதழ்களில் எழுதவேண்டிய எழுத்துகளை இப்போது வலையில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கான காலம் விரைவில் வரும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
 
அன்புடன்
உழவன்

நிஜமா நல்லவன் said...

ரொம்பவே ரசித்து படித்தேன்! வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

நிஜமா நல்லவன் said...

/ " உழவன் " " Uzhavan " said...

வார மாத இதழ்களில் எழுதவேண்டிய எழுத்துகளை இப்போது வலையில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கான காலம் விரைவில் வரும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்/

ரிப்பீட்டேய்...!

அன்புடன் அருணா said...

அடடா!இவ்வ்ளோ நாளா எங்கெருந்தீங்க??இவ்வ்ளோ அழகா எழுதிருக்கீங்க! பிடிங்க பூங்கொத்துக்களை!!

நாஞ்சில் நாதம் said...

அழகான நடை, செம ஸ்பீடு

தேவன் மாயம் said...

பிரமாதம்!!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!!

Unknown said...

//இப்போது மகளின் விருப்பங்களுக்கெல்லாம் மறுப்பேதுமில்லாமல் தலை சாய்க்கவென்றே அவளின் நடை வேகமாகின்றது.//
தவறு.
நல் விருப்பங்கள மறுப்பபேதுமின்றி ஆமோதிக்கப்படுவது போல், தேவையற்ற விருப்பங்கள் அன்பாக சொல்லப்பட்டு நிராகரிக்கப் படவூம் வேண்டுமே.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை பேர்களுடைய வாழ்க்கைகளோ வந்துவிட்டுப் போய்விட்டன இந்தப் பயணத்தில் அமித்து அம்மா.
அற்புதமான நடை. கவிதையாகப் பொழிகிறது உங்கள் எழுத்து. மனம் நிறைந்த பாராட்டுகள்.

Dr.Rudhran said...

impressive. neat. good work. keep writing, best wishes

Deepa said...

அற்புதம் அமித்து அம்மா.
’மழைச்’ சாரலில் இன்னும் நனைந்து கொண்டிருப்பதைப் போல் உணர்கிறேன்!

Anonymous said...

என்னப்பத்தி நானே எழுதிட்ட மாதிரி இருக்கு.. சீருடை, விருப்ப பாடம், தமிழ் வழியிலிருந்து உடனே ஆங்கில இலக்கியம், (கொடுமை) முடிந்தவுடன் வேலை, எல்லாமே.. ம்ம்ம்ம்.

ஆகாய நதி said...

எப்படிங்க இப்படிலாம் எழுதுறீங்க... முடியல.... ரொம்ப அழகான பதிவு... ஆழமான பதிவும் கூட!

Kavitha said...

Very nice. Reflected thoughts of all girls born and brought up in economically middle-class family including me.

Karthik said...

I liked this one. Superb! :)

ஸ்வர்ணரேக்கா said...

//காலை மிதித்தாலும், காற்றை அடைத்தாலும் கத்தாதவர்கள் சக பயணிகள்//

இவ்வளவு நல்லா எழுதின கைக்கு தங்க வளையலே போடலாம்....

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்...

மாதவராஜ் said...

இடையில் பலருடைய பதிவுகளை விட்டிருக்கிறேன்.இன்று உங்கள் பதிவுகளை மொத்தமாய் படித்துக்கொண்டு இருக்கிறேன். அருமை. பெண்மனதின் நுட்பமான பகுதிகளை- சில இடங்களில் கவிதைத் தெறிப்புகளோடு- சொல்கிறது. மிகத் தேர்ந்த, சிந்தனையும், மொழி நடையும் கொண்ட இந்தப் பதிவு பல செய்திகளை போகிற போக்கில் சொல்கிறது.