01 August 2009

முதல் மூன்று பின்னூட்டங்கள்

எனக்கு அவ்வபோது தோன்றும் எதாவதைப்பற்றி கிறுக்கி வைத்திருப்பேன். 1997 என்று நினைக்கிறேன், புதுவருடத்திற்கு எனக்கு அழகான ஒரு டைரி கிடைத்தது. கிரானைட் கம்பெனி டைரி போல,அட்டை அப்படியே பளபளவென்று க்ரானைட் போலவே கறுப்பில் மின்னும். அந்த கறுப்பின் கவர்ச்சியில் மயங்கி இதுவரைக்கும் கிறுக்கியதெல்லாம் சேர்ந்து சிந்தனையின் சிதறல்கள் என்று டைரியின் முதல் பக்கத்தில் போட்டு நிரப்பி வைத்தேன். வீட்டார்க்கு நான் கிறுக்குவது தெரியும் அவ்வளவே. அந்த டைரியை நான் யாருக்கும் காண்பித்தது கூட கிடையாது. ஆனால் அதற்கு மூன்று பின்னூட்டங்கள் கிடைக்கும் என்பதை நான் கனவில் கூட அறிந்திருக்கவில்லை. அந்த பின்னூட்டங்களும், அதனை எழுதியவர்களைப் பற்றிய பதிவுதான் இது.

எனக்கு இரண்டாவதாக சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டரை விற்கும் & மற்றும் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனத்தில் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட்டில் வேலை கிடைத்தது. போனதென்னவோ பர்ச்சேஸ் டிபார்ட்மெந்தான், ஆனா நம்ம ராசி எப்பவுமே போறது ஒரு வேலை, செய்றது இன்னொரு வேலையாத்தான் இருக்கும். அந்த ராசி இங்கயும் வொர்க் அவுட் ஆகி நம்மளை கொண்டுபோய் சர்வீஸ் கோ ஆர்டினேட்டரா போட்டுடாங்க. கம்ப்யூட்டருக்கு ஒரு மானிட்டரும் கீ போர்டும் மட்டும்தான் இருக்கறதா அதுவரைக்கும் தெரியும். பக்கத்திலிருக்கும் சதுரப்பொட்டி சி.பி.யூ என்று அங்கு போனபின் தான் அறிந்ததே !!!. எப்பவுமே டாக்டர்கிட்ட போகும்போது நாம தானே நமக்கு முதல்ல ஜூரம்னு சொல்லனும், அது மாதிரி எங்க நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வாங்குனவங்க, ஏ.எம்.சி. வெச்சிருக்கவங்க மற்றும் பலரும் போன் செஞ்சு, இதுதான் ப்ரச்சினை என்று சொல்லிவிட்டால் அந்தந்த ஏரியாவுக்கு ஒதுக்கப்பட்ட சர்வீஸ் எஞ்ஜினியர்களை அனுப்பி வைக்கவேண்டும். முற்றிலும் புதிய அனுபவம். போன புதுசுல அந்த டிபார்ட்மெண்ட்ல எனக்கு நடந்த அனுபவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன்னா, உங்களனைவரிடமிருந்தும் நிறைய பல்புகளை வாங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால அது வேண்டாம். இப்போதைக்கு பூவேந்தனை பற்றி மட்டும் சொல்கிறேன்.

பொதுவாக சர்வீஸ் இஞ்சினியர்களுக்கு அவர்கள் குடியிருப்பு ஏரியாவை ஒட்டிய சர்வீஸ் கால்களை அலாட் செய்வார்கள். ஆனால் அதிலும் இந்த பூவேந்தன் தன் பெயரைப்போலவே வித்யாசம். குடியிருப்பதென்னவோ ஸ்டெல்லா மாரீஸ் காலேஜ் பக்கமுள்ள ஒரு சாலையில், ஆனால் தனக்கு மட்டும் ஆவடி, அம்பத்தூர் பக்கமிருக்கும் கம்ப்யூட்டர் கம்பெனிகள் மற்றும் கால்களையே வருமாறு பார்த்துக்கொள்வார் / நம்மையும் அப்படியே செய்ய சொல்வார். காரணம் ரொம்ப சிம்ம்பிள், அவனோட காதலி ஆவடியில் ஒரு காலேஜில் படிச்சிட்டிருந்தாங்க. ஹார்ட்வேர் வேலைப்பார்த்தாலும் ரொம்ப சாஃப்ட்டா கவி்தையெல்லாம் எழுதுவார். கவித்தொல்லை தாங்க முடியாது. மஞ்சள் கலரில் ஆபிஸில் ஃபைல் செய்ய வேண்டிய சர்வீஸ் ரிப்போர்ட் காப்பியின் பின்புறமெல்லாம் கவிதையா இருக்கும். என்ன பூவேந்தன் இது, இத எப்படி நான் ஃபைல் செய்ய முடியும். கொடுங்க மேடம் ஒரு ஜெராக்ஸ் செய்து கொடுக்கிறேன்.இப்படி ஒன்னு ரெண்டல்ல, ஒரு புத்தகத்தில் 100 ஸ்லிப் இருந்தா, அதில் குறைந்த பட்சம் அம்பது, அறுவது ஸ்லிப்பாவது கவிதையோடதான் வரும். எங்க சர்வீஸ் செய்ய போனாலும், சாருக்கு அழகான பொண்ணை பாத்தா கவிதை ஊத்து பொங்கி பொங்கி வருமாம். மீறி கோபப்பட்டு கேட்டா, நான் என்ன செய்யமுடியும், பாருங்க அந்த கம்பெனியில் (குறிப்பிட்ட கம்பெனியின் பெயரை சொல்லி) அந்த பொண்ணு (பெயரும் தெரிஞ்சிருக்கும்) இன்னைக்கு வெள்ளிக்கிழமையா, நல்லா தலைக்கு குளிச்சிட்டு, மஞ்சள் சுடிதாரு அப்படி இப்படின்னு ஆரம்பிச்சு, கவிதை எங்க போய் முடிஞ்சிருக்கும் தெரியுமா

சென்னைக்கு இன்னைக்கு மழை நிச்சயம்
தலைகுளித்த
அவளின் கருங்கூந்தல் கார்மேகமாகிவிட்டதே...

இங்கதான். இத படிச்சிட்டு இதவிட்டா உனக்கு வேற வேலையென்ன, சொல்லு. ஒழுங்கா வீட்டுலருந்து கூப்பிடு தூரத்துல இருக்குற ஆபிஸுக்கு டூ வீலர் இருந்தும் அதுல வராம, 29சி ஏறி ஸ்டெல்லா மாரீஸ் நிறுத்தமிறங்கி, அங்க பராக்கு பாத்துட்டு, அப்புறம் வேற ஒரு பஸ்ஸ புடிச்சு ஆபிஸுக்கு வர பெருந்தன்மையான மனசு இருக்குற உனக்கு இப்படியெல்லாம் கவிதை தோன்றதுல ஆச்சரியமே இல்ல. என்ன பாவம் ஆவடி தான்.என்று அடிக்கடி கிண்டல் செய்வோம். இது மாதிரி அடிக்கடி அவரும் கவிதை எழுத, நான்(ங்)களும் கிண்டல் செய்ய, ஒரு முறை அது விவாதமாயிற்று. ஆமாம் உங்களுக்கு கவிதைய பத்தியெல்லாம் என்ன தெரியும். சும்மா பேசாதீங்க. உங்களுக்கென்ன இனி சர்வீஸ் ரிப்போர்ட்ல கிறுக்கக்கூடாது அவ்ளோதான, அதையே செய்றேன் என்று முகம் தூக்கி வைத்துக்கொள்ள ரொம்பவும் தர்மசங்கடமாகிப்போய்விட்டது. இதுக்கு என்ன பரிகாரம்னு தேடப்போய், கடைசியில நான் எழுதி வெச்சிருந்த டைரிய எடுத்து வந்து ஒருநாள் கொடுத்து இத டைம் இருந்தா படிங்க பூவேந்தன் என்றேன். வாங்கும் போதும் முகம் உர் ரென்றுதான் இருந்தது.

டைரியை திருப்பி என்னிடம் கொடுத்துவிட்டு, சாரிங்க என்றொரு வார்த்தையை உதிர்த்தது பூ. டைரியின் கடைசிபக்கம் அவரின் கையெழுத்து கவிதையாக அல்ல, உரைநடையாக இருந்தது. மன்னிக்கவும் உங்களின் டைரியில் நான் எழுதுவதற்கு. உங்கள் குரலைப்போலவே அருமையான கவிதைகள், தேர்ந்தெடுத்த வார்த்தைகள். இனிமேல் நான் கவிதையெழுத கண்டிப்பாக இன்னும் கொஞ்ச நாட்கள் பிடிக்கும். நன்றி என்னைத் தெளிவுபடுத்தியமைக்கு. இப்படி முடிந்திருந்தது அந்த நீண்ட உரைநடை பின்னூட்டம்

பின்பு நானும், அவரும் நல்ல நண்பர்களாகி, அவரின் திருமணத்திற்கு போனது, அவருக்கு குழந்தை பிறக்கும் வரை எங்களின் நட்பு தொடர்ந்தது. அப்புறம் கால அலை இருவரையும் வெவ்வேறு இடத்தில் ஒதுக்கி, தொடர்பெல்லைக்கு அப்பால் போட்டு வைத்திருக்கிறது (இருவரிடமும் செல்போன் இருக்கிறது, ஆனால் எண்கள்தான் நாங்கள் அறிந்திருக்கவில்லை :) )


திருவொற்றியூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு எங்கள் நிறுவனம் நிறைய கம்ப்யூட்டர்களை விற்றிருந்தது. அங்கு தினமும் ஏதாவது ஒரு ப்ரச்சினை வரும். அதனை அந்த கம்பெனியிலிருந்து மேற்பார்வையிட்டவர் ராஜன். ரிக்வெஸ்ட்டாகவோ இல்லை திட்டுவதற்காகவோ எனக்கொரு போன் அவரிடமிருந்து தினம்வருவது வாடிக்கை. போனை எடுக்கும்போதே திட்டப்போறீங்களா சார் என்று கேட்டுக்கொண்டேதான் போனை எடுப்பேன். இப்படியே இவரும் நண்பராகிவிட்டார். எனக்கிருக்கும் வாசிப்பு பழக்கத்தையறிந்த ராஜன், உங்கள மாதிரியே ஒரு கிறுக்கு(!) எங்க ஆபீஸ்லியும் இருக்காங்க, இருங்க அறிமுகப்படுத்தறேன் என்றார். அவர்தான் மோகன். திருச்சியருகிலிருக்கும் ஒரு குக்கிராமம். அப்பா இல்லை, ஒரு தங்கை, வயதான அம்மா. வறுமை, சொந்தங்களின் முன் தலையெடுக்கவேண்டுமென்ற சென்னைக்கு வேலை தேடி வந்தவர்.வீட்டாரின் வறுமை போக்கஅந்தக் கம்பெனியில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தார்.வாசிப்பின் மேல் தனியாத ஆர்வம். தங்கையின் பாசம். அவளுக்கான சேமிப்பு, அம்மாவின் வயோதிகம் இதோடு தன் லட்சியமான சினிமா கவிஞன் கனவையும் நிறைவேற்றிக்கொள்ள படாதபாடு பட்டார். வலியப்போய் கோடம்பாக்கத்தில் முருகன் என்றொரு நண்பரை பரிச்சயம் செய்துகொண்டார்.ஏன் என்று கேட்டதற்கு, கோடம்பாக்கம்தானே சினிமாவின் நுழைவாயில் என்றார். எப்படியாவது ஒரு பாட்டெழுதி, அது ரேடியோவில் ஒலிக்க வேண்டும், அதனை தன் அம்மா கேட்கவேண்டும் என்பதே இவரின் லட்சியக்கனவு.

தன் கவிதைகளை அச்சிலேற்றி அதைதான் கோடம்பாக்கத்து விசிட்டிங்கார்டாக தரவேண்டும் என்பதையறிந்து, எப்படியெப்படியோ 2000 ரூபாய் சேமித்து வைத்து “உலகம் உருண்டைதான்” என்பதொரு கவிதை தொகுதியைப் போட்டார். இதற்குப்பின்னர் அவரெனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். உடன் கற்றை கற்றையாக கவிதைகளும் வரும்.எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் இவரைப்பற்றி சொல்வேன்.அதன் வாயிலாகவாவது அவருக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்பதே எனது நப்பாசை எல்லாவற்றையும் இன்னும் சேர்த்து வைத்திருக்கிறேன்.

அவர் அந்த டைரியில் எழுதிய பின்னூட்டம். இதுவரை உங்கள் குரல் மட்டும் தான் எனக்கு அறிமுகம். முகமே பார்த்து பழகாத என் நட்புக்கு உங்கள் அகத்தை பார்க்கும் வாய்ப்பை எனக்கிந்த டைரி அளித்தது. அதற்கு கவிதையின் கருவறையே உனக்கெனது நன்றி. என்னாலும் உனது நண்பனாக இருக்க விழையும் அ. மோகன்ராஜன் என்றிருந்தது.

அவரை நான் கடைசியாக சந்தித்தது மே 24,2004. இப்படி எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்கும் நான், அவர் முதலில் எனக்குத் தந்த அவரின் செல்போன் எண்ணை மறந்துவிட்டேன். பின்னர் இவரும் தொடர்பெல்லைக்கு அப்பால் ஆகிவிட்டார். இன்னமும் இவரைத்தேடும் முயற்சியில் இருக்கிறேன்.


இவரை சந்தித்தது எனது முதல் நிறுவனத்தில்.அவ்வப்போது கிறுக்கி அவரிடம் காண்பிப்பேன். ஒரு புன்னகையே பின்னூட்டமாக வரும். அவரும் கவிதை எழுதுவார். அவருக்கு காவல்துறையில் வேலை கிடைத்து அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட, நானும் மேற்கூறிய கம்பெனிக்கு மாறிவிட்டேன்.சிறிது கால இடைவெளிக்குப் பிறகு எங்களின் நட்பு தொடர்ந்தது. மீண்டும் நட்பு மலர்ந்த ஒரு காலகட்டத்தில், இப்பவும் எழுதறியா, ஏதாச்சும். ம், எழுதறேனே. இன்னொருதடவை பார்க்குறப்போ டைரி தரேன் என்றேன். டைரி பரிமாற்றம் நடந்தது. ஆனால் அவரின் பின்னூட்டம் டைரியில் எழுதப்படவில்லை. ஒரு வெள்ளைத்தாளில், சாய்வான கையெழுத்தில். ஏன் டைரியில் எழுதவில்லை என்ற காரணமும் அதிலிருந்தது. அந்த டைரி இவருக்கு முன்னரே வேறிருவர் கைக்கு கிடைத்ததால், இவர் வெள்ளைத்தாலில் எழுதினாராம். உங்கள் அழகான கவிதைகளை வாசித்தேன், அதைவிடவும் அழகான உங்கள் கையெழுத்தில். சாரதா - இவர் சாதாரண ரகமல்ல,சாதிக்கும் ரகம் என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)

40 comments:

நட்புடன் ஜமால் said...

டைரிக்கே பின்னூட்டம் வாங்கினீங்களா

கிரேட் ...


அமித்து அப்பாவும் இரசிகர் தானா ...

நட்புடன் ஜமால் said...

சென்னைக்கு இன்னைக்கு மழை நிச்சயம்
தலைகுளித்த
அவளின் கருங்கூந்தல் கார்மேகமாகிவிட்டதே...]]

அருமையா எழுதியிருக்கார் பூவேந்தன்.

Vidhoosh said...

ஏனோ சிரிப்பு வந்தது.
ஆமா, கவிதையெல்லாம் பதிவேற்றி இருக்கீங்களா?
--வித்யா

வல்லிசிம்ஹன் said...

காதல் ரகசியங்கள் கவிதை மூலம் வந்ததா. வெகு அழகு அமித்து அம்மா.
ரசிக்கத் தெரிந்தவர் கணவனானது.

அப்துல்மாலிக் said...

அழகான நினைவலைகள்

சென்ஷி said...

:-)

சிம்பிளா சொல்லனும்னா பதிவுகளை அமர்க்களப்படுத்தறீங்க.

Unknown said...

///நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா///
ஆஹா.. மாட்டிக்கிட்டாரா மாட்டிக்கிட்டாரா...

சும்மா சொன்னேன்... நல்லருந்தது.. நடசத்திர வாரத்தில இப்புடி கலக்கறீங்களே

Anonymous said...

ஆகா டைரி எழுதுறதுல இவ்வளவு இருக்கா?

Unknown said...

அழகா எழுதி இருக்கீங்க சாரதா. ரசிச்சிப்படித்தேன்.தொடருங்கள்...

உங்களுடைய குரலை எல்லோரும் சிலாகிக்கிரார்களே. நீங்கள் என்ன பாடகியா!

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் உங்களுடன் ஒருமுறை பேசி இருக்கிறேன். உண்மையிலேயே நல்ல குரல் தான்.

Deepa said...

:-) show me your friends and I'll tell you who you are என்றொரு வாசகம் உண்டு. நீங்கள் நட்பு கொள்ளும் முறையும் அழகுமே உங்கள் இயல்பை உணர்த்துகிறது.

கடைசி பாரா தொடங்கிய விதமும் முடித்த் விதமும் அழகோ அழகு! :-)

வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

நிஜமா நல்லவன் said...

அமித்து அம்மா மூன்றாவது பின்னூட்டம் சூப்பர்!

குடந்தை அன்புமணி said...

முதல் இரண்டு பின்னூட்டங்களையும் படித்துவிட்டு மூன்றாவது படித்துக் கொண்டு வந்தேன். கடைசியில் அவர்தான் அமித்துவின் அப்பா என்று முடித்திருந்தது எதிர்பார்க்காதது.

அமித்து அப்பா போலீஸா... ம்...ம்... காக்கிச் சட்டைக்குள் கவிதையா... நடக்கட்டும் நடக்கட்டும்.

கல்யாண்குமார் said...

//நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)//
அட, பதிவின் மிகக் கடைசி வரியில் அமித்துவின் அப்பாவை அறிமுகப்படுத்தியிருந்தாலும் ஓ ஹென்றி கதையின் முடிவைப் போல ஒரு சுவராஸ்யமான முடிச்சு! வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

சாதாரண ரகமல்ல,சாதிக்கும் ரகம் ..

கரெக்டாதான் சொல்லியிருக்கிறார். இன்னும் மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) இது ரொம்பவே நல்லாருக்குங்க..

நிலாரசிகன் said...

தமிழ்மண நட்சத்திரமானதற்கு முதலில் வாழ்த்துகள். இந்த இடுகையை படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன் அ.அ.

அன்புடன் அருணா said...

உங்க டைரிய நாங்க எப்போ படிக்கிறது???அனுப்பி வைங்கப்பா!!!

நாணல் said...

:)))

PRINCENRSAMA said...

டைரிக் கவிதைகளை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கும் அமித்துவின் அப்பாவுக்கு என் அனுதாபங்கள்!

Thamiz Priyan said...

போலீஸ்... முன்னாடி சிரிச்சிக்கிட்டு இருப்பாருன்னு சொன்னதும் புரிஞ்சிடுச்சு.. அது அமித்து அப்பாதான்னு.. என் கெஸ்ஸிங் கரெக்டா இருக்கு.. ;-)))

Anonymous said...

பூவேந்தன்னு ஒரு நல்ல கவிஞரை கவிதை எழுதவிடாம பண்ணீட்டிங்களே !!:)

Anonymous said...

ஆஹா!!!! இதுதான் அவர் மாட்டின கதையா?? ஜூப்பர்....:))

Anonymous said...

ஆஹா!!!! இதுதான் அவர் மாட்டின கதையா?? ஜூப்பர்....:))

Jackiesekar said...

நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)--//

அசத்திட்டிங்க அமித்து அம்மா...

துளசி கோபால் said...

கவிதை 'புரியும்'கணவரா?
ஆஹா............
மூன்றாவது பின்னூட்ட ஸ்பெஷலுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

அ.மு.செய்யது said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

இன்று தான் படிக்க நேர்ந்தது.இந்த மாதிரி டைரி பார்த்து,மயக்கம் போட்டு விழுந்து,பின்னூட்டம் வாங்கி
இம்ப்ரஸ் பண்ணற சொகமே தனி தான்.

ஒருமுறை,என்னோட காலேஜ் நோட் பின்னாடி கவிதைகள பார்த்துட்டு,திட்டாம எங்க மேம் நடு பக்கத்துல‌
ஒரு பின்னூட்டம் போட்டு வச்சிருந்தாங்க...

You are extraordinary..Keep it up.
( இப்படி தான் உசுப்பேத்துவாங்க )

சந்தனமுல்லை said...

வாவ்..வாவ்...வாவ்..கலக்கல் அமித்து அம்மா! என்னவொரு கவிக்குடும்பம்..!!

//சாரதா - இவர் சாதாரண ரகமல்ல,சாதிக்கும் ரகம் //

சூப்பர்..அப்படியே வழிமொழிகிறேன்!! :-)

☀நான் ஆதவன்☀ said...

படித்து கொண்டே வந்ததில் கடைசி நண்பர் எதிர்பாராதது :)

Bee'morgan said...

ஆகா.. அருமை அருமை.. :)

லதானந்த் said...

வாழ்த்துக்கள்!
கவிதைக்காரவிங்கனாலே நான் காணாமப் போயிருவேன்.
ஆனா கவிதை பத்தின கட்டுரை நெம்ப நல்லா இருக்குது.

Anonymous said...

Hello madam,

nice! interesting seam less flow, with a punch at the end.

unga husband POLICE-nu solli payamuruthuringala!!!!!






















Sorry just for fun

reg,
madhan

cheena (சீனா) said...

ஆகா ஆகா - நாட்குறிப்பிற்கே மூன்று மறு மொழிகளா - அதுவும் மூன்றாவது வாழ்க்கைத்துணையா - அருமையாக விவரித்து இருக்கிறீர்கள்

நல்வாழ்த்துகள்

வினையூக்கி said...

அருமையான பின்னூட்டங்கள் :) நட்சத்திர வாழ்த்துகள் மேடம்

தமிழ் அமுதன் said...

///சாதாரண ரகமல்ல,சாதிக்கும் ரகம் ..///

இப்படித்தானே சொன்னாரு?
அதுக்கு போய் எங்க அயித்தானுக்கு ஆயுள் தண்டனை
கொடுத்துடீங்களே ? அதும் ஒரு போலீஸ் காரருக்கு! நியாயமா ?


ஒரு விசயத்துல நீங்க ரொம்ப உசந்துடீங்க!
முதல் ரெண்டு பின்னுட்டத்துல அவங்க பேர் சொன்ன நீங்க
அமித்து அப்பா பேர் மட்டும் சொல்லல பாருங்க அதுதான் அழகு!!

அமுதா said...

/*நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)*/

:-))
சுவாரசியமான டைரியும் பின்னூட்டங்களும்...

"உழவன்" "Uzhavan" said...

//நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)
 
அழகு :-))
 
அமித்துமா.. நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். வாழ்த்துக்கள் :-)
 
இடுகைகளுக்கே பின்னூட்டமில்லாமல் நாங்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். நீங்க என்னனா டைரிக்கே பின்னூட்டம் வாங்கிருக்கீங்க. கலக்கல்தான் போங்க.
நானும் எதாவது கிறுக்குவது என் டைரியில்தான். இதுக்குதான் ஆபிசுல ஆண்டுதோறும் குடுக்குறாங்கனு நினைக்கிறேன் :-)

- இரவீ - said...

ரொம்ப நல்லாருக்குங்க...வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

ஆஹா! ரொம்ப ரசித்து படித்தேன். பாலைவனச்சோலை படத்தில் டைரி பற்றி சந்திரசேகர் ஒரு டயலாக் சொல்வார். இன்றுவரை டைரி என்றவுடன் அந்த ஞாபகம் வரும். இனி உங்கள் டைரி கூட நினைவில் வரலாம். வாழ்த்துக்கள்.

Thamira said...

வித்தியாசமான கோணத்தில் உங்கள் காதலை பதிவு செய்திருக்கிறீர்கள்.! அழகு.!

சுரேகா.. said...

மன்னிக்கணும்..
இந்த இடுகையை இப்போதான் படிச்சேன்.
வயதானாலும் அம்மா...அம்மாதானே!?

நேர்த்தியான வார்த்தைகளில்
கோர்த்து, ஒரு சிறுகதை மாதிரி
முடிச்சிருக்கீங்க!

ரொம்ப நல்லா இருக்கு பதிவும்
அது சார்ந்த அனுபவங்களும்..!

வாழ்த்துக்கள்ங்க!

ஆமா..இப்ப அவர் டைரி படிக்கிறாரா?
:)