06 July 2009

பெட்டிக்குள் தாலி

நேற்று அக்கா வீட்டுக்கு போயிருந்தேன்,அக்கா வீடு காலி பண்ணவேண்டியிருந்ததால், பொருட்களை ஒழித்து, அடுக்கும் வேலையிருந்தது.வேண்டும், வேண்டா பொருட்களை பிரித்தெடுத்து தனியாக கட்டி வைத்துவிட்டு, அலமாரிகளை குடைந்தோம்.கொஞ்சம் அடுக்கு டப்பாக்கள், இதர பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைத்தாயிற்று. ஒரு ரவுண்டு டப்பாவை திறந்தால், அதற்குள் ஒரு சின்ன சில்வர் டப்பா, அப்புறம இந்த நகைக்கடைகளில் நகை வாங்கும் போது கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பா இருந்தது. ஆர்வ மிகுதியால் ஒன்றை நான் திறந்துப் பார்த்தேன்.

கொஞ்சம் அதிர்ச்சி, அதில் அம்மாவின் சங்கிலியற்ற தாலி, அப்புறம் குண்டு மணிகள் இருந்தது. எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்த டப்பால என்ன இருக்கு என்றேன். அதற்குள் அக்கா சில்வர் டப்பாவை திறந்து பார்த்து, இதுல என்னோடது இருக்குடி என்றாள். பார்த்ததில் அதிலேயும் தாலி,கால் காசு போன்ற இத்யாதிகள். அதை அரைக்கணம் பார்த்துவிட்டு மூடிவைத்து விட்டாள் அக்கா. ஆனால் அந்த நிமிஷம் அக்காவின் மனதில் என்ன உணர்ச்சி எழுந்திருக்கும் என்று என்னால் உணர்ந்து உண்ரமுடியா நிலை.
இதே பொருள், கிட்டத்தட்ட 28 வருடங்களாக அவள் இதயத்தோடு இதயமாய், உயிரோடு உயிராய், உணர்வோடு உணர்வாய் ஒன்றப்பட்டு இருந்த விஷயம் தானே. அம்மா அந்த டப்பாவில் என்னவென்று கேட்க, எதுவும் சொல்லாமல் டப்பாவை திறந்துகாட்டினேன். இதுவா, எடுத்து உள்ள வை என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது. அவர்களிருவருக்கும் இது ஒரு சாதாரணமாய் (சாதா ரணமா அது) விஷயமாகப்போய்விட்டது.

ஆனால் இதே அம்மாவும், அக்காவும் இதற்கு கொடுத்த முக்கியத்துவங்கள் எத்தனை. எங்கள் திருமண நிகழ்வுகளின் போது, இருவருமே தாலி கட்டும் நேரத்தின் போது ஒரு படப்படப்போடும், பிறகு தாலியை முடிப்பதில் யார் யார் முன்னாடி இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டதிலும், பின்பு மூன்றாவது மாதம் தாலி பிரித்து மாற்றும் போது எத்துணை சம்பிரதாயங்கள். நேரம் காலம் எனப் பார்த்து பார்த்து. அதிலும் தாலி கோர்க்கப்பட்டிருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றவேண்டுமென்றால் நாள், கிழமை, நட்சத்திரம், பார்த்து என நீளும் சம்பிரதாயங்கள் அவை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பொருளை வெறுமனே பிளாஸ்டிக், சில்வர் டப்பாவில் பார்க்கும் போது எழுந்த உணர்வுகள் இருக்கிறதே. அவை சொல்லி மாளாது.

தாலி கட்டப்படும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை, எம் மக்கள் அதை கழட்டப்படும் போதும் வழங்கினார்கள் என் அம்மாவுக்கும் பிறகு அக்காவிற்கும். ஏன், பெண்கள் சுமங்கலியாக போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்நத நேரம் அது. இது போன்ற ஒரு அனுபவத்தை கற்பனைகளிலும் நினைக்கமுடியாது. மரணத்தை விடவும் கொடுமையான அனுபவங்கள். உடம்பே உதறலெடுத்து, அய்யோ வேண்டாம் வேண்டாம் என்ற அக் கணம் நிகழ்ந்தே விட்டது, வாழ்வில்.முக்காடு போட்ட அம்மாவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லாமல், பெருங்குரலெடுத்து கத்தியழுத போது, மிகவும் சாதாரணமாக சொன்னது சில உறவுகள். என்னடி புதுசா, என்னமோ உங்கம்மாவுக்கு மட்டும்தான் இப்படி ஆன மாதிரி, இதை விட சின்ன வயசுல இருக்கறதுங்களுக்கே நடக்குது. நாங்கல்லாம் இல்ல இப்போ என வரிசையாய் எனக்கு நேர்ந்தது, இவளுக்கு இப்போது நேர்ந்துவிட்டதே, அவ்ளோதான், இதைப்போய் என்ற ரேஞ்சில் இருந்தது அவர்களின் வார்த்தைகள். அதற்கடுத்து வந்த நாட்கள் இதை விடவும் கொடுமை, பூவும், பொட்டும், கழுத்துச்சங்கிலி என வளைய வந்த அம்மா, எதுவுமற்று விபூதியோடு கைவிடப்பட்டார்கள். ஏதாவது வச்சிக்கோம்மா என்றபோது, ம்ம்ச்சும், விடும்மா என்ற வார்த்தைகளோடு போய்விட்டார்கள். ஆனால் வருடாந்திரமாய் குங்குமம் வைத்துவந்த பச்சைத்தடம், அதன் மேல் பொருந்தா விபூதி, கண்ணாடி அல்லாத உலோக வளையல்கள் என அம்மாவை நேருக்கு நேராக பார்க்க கொஞ்சமல்ல நிறையவே சங்கடங்கள். இத்தோடு முடிந்ததடா கூத்து என்று நாட்களோடு சகஜமாகி விட நேரும்போது, இன்னும் நீ பார்க்கவேண்டியது நிறைய என்று கடவுள் உணர்த்தி விதி அக்காவின் வாழ்வில் விளையாடியது. இந்த முறை, மாமாவின் உடல், மயானததிற்கு எடுத்துச்சென்றவுடனே எனக்குப் பிடித்த கிலி, அடுத்து வரும் பதினாறாம் நாள் காரியம் தான்.

காரியத்துக்கு நாள் பார்க்க, அய்யருக்கு சொல்ல, சாப்பாட்டுக்கு, காரிய பத்திரிக்கைக்கு என வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தாலும், உள்ளுக்குள் பயம் உதறலெடுத்துக்கொண்டிருந்தது. அந்த பதினாறாம் நாள் வராமயே போனா நல்லாஇருக்குமே என்று எண்ணியபடி,
அதற்கு முந்திய நாள் வீட்டிற்கு வந்த உறவுகளுக்கு, ரொம்ப சடங்கெல்லாம் செஞ்சு சங்கடம் வேணாம், அப்படியே விட்டுடங்க, அக்காவ என்ற போது, எதுவும் சொல்லவில்லை யாரும். இதற்கென்றே மெனக்கெட்டு வந்த ஒரு ஆயா மட்டும், அத காலையில பாத்துக்கலாம் என்றது.
அப்படியே குத்திக்கொல்லலாம் போல வந்தது ஆத்திரம். ஆச்சு, அதிகாலை வந்து எல்லாம் முடிந்து, அழகான அக்காவை அலங்கோலப் படுத்தி தனியறையில் அமரவைத்து, போதாக்குறைக்கு போய்ப் பார், போய்ப்பாரு என்று உறவுகளின் கூச்சல் வேறு.

வாய்ச்சொல்லால் எத்தனை பேரை வீழ்த்த முடியும் ?. அக்காவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நிலையற்ற கண்களோடும், மனதோடும் பொங்கி வந்த அழுகையோடும் உள்ளே போகும் போது, அங்கே எனக்கு முன்னரே எனது அண்ணன் (சித்தி பையன்) அழுது வீங்கிய கண்களோடு.
அவரைப் பார்த்தபின் சொல்லத்தான் வேண்டுமா. எத்துணை மன தைரியம் வாய்க்கப்பெற்ற ஆண்களாக இருந்தாலும் கலங்கும் நேரம் என்று ஒன்று உண்டானால் அது அனேகமாக இது போன்ற சங்கடமான சம்பிரதாய கால நேரமாகத்தான் இருக்கும். என் அண்ணனுக்கு வாய்த்த இந்த நேரம் எத்துணையோ அண்ணன்களுக்கும் நேர்ந்திருக்கும், உணர்வுகளை அவர்களும் மென்று விழுங்கியிருப்பார்கள். தந்தை போன அவஸதை ஒரு புறமும், தாயாரின் இந்தக் கோலமும் ஒரு சேரத்தாங்கும் மனவலிமையையும் பெற்று, மேலும் ஆக வேண்டியதை ! பார்க்க வேண்டிய காலகட்டமல்லவா அது.

அது என் அக்கா மகனுக்கும் வாய்த்தது, காரியத்திற்கான வெளி சம்பிரதாயங்களுக்கு செல்லும் முன் அக்காவை பார்க்கவந்த அவன், சொல்லிய சொல், ம்மா, (உடைந்த ஒரு குரலோடு) நான் வரம்போது, நீ இப்டியிருக்கக்கூடாதும்மா, சொல்லிட்டேன் என்ற படி போனான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி எதையுமே நடக்கவிடவில்லை எம்மக்கள். நீட்டி.......க்கப்பட்ட சம்பிரதாயங்கள், கோபம் வந்தாலும் மறுத்து சொன்னாலும், நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருந்தன எல்லாம். எல்லாவற்றையும் கடந்து வந்தபின், எங்களின் வற்புறுத்தலுக்காக அக்கா ஒரு சிறிய பொட்டு வைக்க ஒத்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் ?

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், நெற்றி நிறைய குங்குமத்தோடு இருக்கும் பெண்களை, வயதான அம்மாக்களை கண்ணெடுத்துப்பார்க்கவே அவ்வளவு மனதுக்குள் குறுகுறுப்பாய் இருந்தது. உடன் சொல்லமுடியாத எண்ணங்கள் எழுந்து அது ப்ரார்த்தனையில் போய் முடியும். இப்போதும் வழியிலோ, ட்ரெயினிலோ, திருமணங்களிலோ இது போன்ற அலங்காரங்களோடு இருக்கும் பெண்களை பார்க்க நேர்ந்தால், சில எண்ணங்கள் எழவே செய்கிறது. தீபாவின் நகைப்புக்காக அல்ல படிக்கும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நாம் வழக்கமாக அணியும் ஒரு செயின் போல, தாலிச்செயினுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவமென்று ஏதுமிராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது போன்றே பூவுக்கும், குங்குமத்திற்கும் மற்றும் கண்ணாடி வளையல்களுக்கும்.

காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இறப்புக்குப் பின்னர் இப்படியொரு இழிநிலையும், மீண்டும் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டால் பிறரால் வரும் பழிநிலையும் மாற என்னிடம் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன. உங்களிடம்?

42 comments:

அ.மு.செய்யது said...

ப‌த‌ற‌ வைத்த‌ ப‌திவு !!!

//காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் //

மேலை நாட்ட‌வ‌ர்க‌ள் போல‌ தாலி,குங்கும‌ம் இந்த‌ இத்யாதி ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் இல்லாம‌லிருந்தாலே ந‌ன்றாக‌ இருக்கும் என்று தோன்றுகிற‌து.

இழ‌ப்புக‌ள் நேரிடும் போது,இந்த‌ பொருட்க‌ள் தான் வ‌லியை அதிக‌ரிக்க‌ செய்கின்ற‌ன‌வே.

TBR. JOSPEH said...

நாம் வழக்கமாக அணியும் ஒரு செயின் போல, தாலிச்செயினுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவமென்று ஏதுமிராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது போன்றே பூவுக்கும், குங்குமத்திற்கும் மற்றும் கண்ணாடி வளையல்களுக்கும்.//

கரெக்டா சொன்னீங்க.

இதுக்கெல்லாம் என்னைக்கி முக்கியத்துவம் இல்லாம போகுதோ அப்பத்தான் இந்த வரதட்சனை கொடுமையும் போகும்..

குடந்தை அன்புமணி said...

//காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இறப்புக்குப் பின்னர் இப்படியொரு இழிநிலையும், மீண்டும் எல்லாவற்றையும் போட்டுக் கொண்டால் பிறரால் வரும் பழிநிலையும் மாற என்னிடம் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன. உங்களிடம்?//

பின்னூட்டம் போடுவதற்கே முடியவில்லை தோழி. படித்ததும் மனது மிகவும் கனத்துப் போய்விட்டது. காலங்கள் மாறிவரும் சூழலில் இது மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது வேதனைதான்.குழந்தைப் பருவம் முதல் வரும் இந்த பழக்கம் இடையில் கணவன் மறைவினால் இழப்பதை பலரும் கண்டித்திருக்கிறார்கள். பழமையில் ஊறியவர்கள் மாற மறுக்கிறார்கள். காலங்கள் மாற்றும் என்ற நம்பிக்கையில்...

Vidhoosh said...

இன்று இதே விஷயத்தைப் பற்றி சில வேத ஆதாரங்களோடு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இடையில் வந்ததுதான்.

நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.

எழுதியது நன்றாக இருக்கிறது என்று சொல்லும் போது எழுத்து சொன்ன செய்தியால் மனம் வலிக்கிறது.

அப்துல்மாலிக் said...

சம்பிரதாயம் சடங்கு என்ற பேரில் சகிக்கமுடியாத சில/பல காரியங்கள் நடப்பதை தடுத்திடவேண்டும்... யார் அது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சொன்னீங்க தாலிக்கு முக்கியத்துவம் குடுக்காம இருந்தாலே நல்லது..
சும்மா இந்த பக்கம் வடநாட்டுக்கு டூர் வர சொல்லுங்க அந்த மாதிரி ஆளுங்களை .. அய்யோ காசு போகுமேன்னு கழட்டி டப்பால வச்சிட்டுத்தான் சாமிகும்பிடப்போவாங்க..அப்பல்லாம் அது தாலி இல்ல தங்கம்..

Unknown said...

அமித்தும்மா, மனம் மிகவும் கனத்துப் போய்விட்டது. என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். பெண்களுக்கு எதிராய் நடக்கும் பல கொடுமைகளுள் இது ஒன்று. தீர்க்காயுசா இருக்கணும் என்று வாழ்த்தப்படுவதை விட சுமங்கலியா இரு என வாழ்த்தப்படவே நம் பெண்கள் விரும்புவார்கள். என்னுடைய அம்மாவின் அம்மா 18 வயதில் (என் அம்மாவிற்கு ஒரு வயது) கணவனை இழந்துவிட்டார்கள். 85 வயதுவரை வாழ்ந்த அவர் வாழ்நாள் முழுவதும் வெள்ளைச் சேலை தவிர எதையும் அணிந்ததில்லை.நைட்டி அணிந்து கொள்ளுங்கள் வசதியாக இருக்கும் என்று சொல்லும்போது வெள்ளையில் இருந்தால் ஓகே என்று நிபந்தனையிட்டார்கள். அப்படி அவர் பழமைகளில் ஊறிப் போயிருக்கிறார்கள். புதிய விதயத்தை ஏற்கத் துணிந்தாலும் அதில் பழமையின் சாயலை எதிர்நோக்குகிறார்கள். எங்கள் அத்தைக்கு இந்நிலை வந்தபோது அவர்களின் பிள்ளைகள் தீர்மானமாக நீங்கள் பழைய மாதிரியே தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இத்தகைய சடங்குகளை அர்த்தமற்றதாக்கிவிட்டார்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றங்கள் நிகழும். பகிர்விற்கு நன்றி அமித்தும்மா!

Unknown said...

பூ, பொட்டு , மாங்கல்யம் , நல்ல உடுப்பு ( சேலை ) உடன் ஒரு பெண் சக லக்ஷணங்களையும் அடைகிறாள் ....!!! அப்பொழுது அவள் மகாலக்ஷ்மிக்கு இணையாக போற்றப் படுகிறாள்....!! அதுவே பெண்மையின் அழகு....!!!


நல்ல பதிவு....!!!!

Vidhya Chandrasekaran said...

அமித்து அம்மா
சொன்னால் நம்பமாட்டீர்கள். சமீபத்தில் இப்படிப்பட்ட ஒரு சடங்காலும், அதைத் தொடர்ந்த சில பேச்சுகளாலும் ரொம்பவே வெறுப்படைந்து ஒரு பதிவு எழுதினேன். இன்னும் ட்ராப்டிலேயே இருக்கிறது. இந்தப் பதிவைப் படித்த பின் என் கருத்துகளை இன்னும் ஆணித்தரமாக பதிந்தது போலிருக்கிறது. இப்போதும் இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான சம்பிரதாயங்களை கட்டிக்கொண்டு அழுவதைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. இது வேண்டாம் என அழுந்த சொன்னால் வேறு மாதிரியான பெயர் மெத்த படித்தவர்களாலேயே வழங்கப்படுகிறது. உறவின் அடையாளமாக கருதப்படவேண்டியது பரஸ்பர பாசம் மட்டுமே.

Deepa said...

வார்த்தைகளே வரவில்லை அமித்து அம்மா. நெஞ்சடைத்துப் போயிருக்கிறேன்.
உங்கள் பிரியமானவர்களுக்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்த உங்களுக்கு ஆறுதல் கூறும் சக்தி என்னிடம் இல்லை.

அலங்காரங்கள் என்ற பெயரில் பெண்களைப் பதுமைகளாக்குவதும் பின்பு அதே போல வலுக்கட்டாயமாக அவர்களை மூளியாக்குவதும்...
என்ன நியாயம் இது?

ஆனால், பல குடும்பங்களில் இவ்வழக்கம் மாறி வருவதும் நடக்கிறது. (கணவனை இழந்த பின்பும் வழக்கம் போல் இருக்கச் சொல்வது)

Deepa said...

//பூ, பொட்டு , மாங்கல்யம் , நல்ல உடுப்பு ( சேலை ) உடன் ஒரு பெண் சக லக்ஷணங்களையும் அடைகிறாள் ....!!! அப்பொழுது அவள் மகாலக்ஷ்மிக்கு இணையாக போற்றப் படுகிறாள்....!! அதுவே பெண்மையின் அழகு....!!!//

அப்படியா?
தலையிலும் கழுத்திலும் பாம்பை அணிந்து கொண்டு ஆண்கள் மகாவிஷ்ணுவாகவும் சிவபெருமானாகவும் காட்சி தாருங்களேன்! எங்களுக்கும் ஆசையாக் இருக்கிறது!

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு லவ்டேல் மேடி

அப்படி மகாலஷ்மியாக , அழகாக பார்க்கப்படுபவள் அவலட்சணமாக நேர்ந்த காட்சியைப் பார்த்தபின் எழுந்த உணர்வுதான் இந்தப் பதிவு.

வேறென்ன சொல்ல.

Anonymous said...

அதிர்ந்து போனேன் அமித்து அம்மா, ஒரு சிலர் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் இருக்கும் வயதான பாட்டி 80 வயதுக்கு மேல் ஆனா பாட்டி, அவர்கள் கணவர் இறந்ததும் கண்டிப்பாக பொட்டெல்லாம் எடுக்க திடமாக மறுத்து விட்டார். இன்றளவும் நீண்ட திலகமுடன் தான் இருக்கிறார். பெண்கள் தான் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். படிக்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது..

Thamira said...

உங்கள் எழுத்து மிக தேர்ச்சிபெற்றுவருகிறது. எடுத்துக்கொண்ட விஷயங்களை அழுத்தமாக சொல்ல முடிகிறது உங்களால். இன்னும் இது போன்ற விஷயங்கள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.. மாற்றங்கள் நிச்சயம் வரும்.!

நர்சிம் said...

நல்ல பதிவுங்க.

நட்புடன் ஜமால் said...

எத்தனை மாற்றங்களை இச்சமுதாயம் மிக அழகாக ஏற்ற கொண்டுள்ளது, பெண்களின் எவ்வளவு ஏற்றங்கள் இவை ஒரு புறமிருக்க இவ்வாறு சடங்கு சம்பிரதாயம் என்று உயிரை மட்டும் விட்டு வைத்து ...

இந்த கொடுமைகள் என்று தான் நிற்குமோ ...

சந்தனமுல்லை said...

:(( மனசே சரியில்லை அமித்து அம்மா!!

ஹ்ம்ம்..இந்த சம்பிரதாயங்களெல்லாம் எப்போது மறையுமோ?!!

நாஞ்சில் நாதம் said...

மனம் மிகவும் கனத்துப் போய்விட்டது. சமீபத்தில் இதே மாதிரி எனக்கும் ஒரு சோக நிகழ்வு.
காலங்கள் மாற்றும் என்ற நம்பிக்கையில்...

சென்ஷி said...

நல்ல பதிவுங்க.

Unknown said...

தாலி அறுக்கும்போது பார்ப்பவர் உயிரும் சேர்ந்து அறும்... என்னா பெரிய ஆம்பளை சிங்கம்னாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வந்தேதான் தீரும். சரி தாலியாவது இடையில் வந்தது... பொட்டைக்கூடவா அழிக்கவேண்டும்... ஸ்டிக்கர் பொட்டு போட்ட கைம்பெண்களைத் திட்டும் பெரிசுகளைக்கூடக் கண்டிருக்கிறேன்..என்ன சடங்கோ என்ன சம்பிரதாயமோ

தமிழ் அமுதன் said...

கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு என்ன தேவை? அவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்! அமைதி படுத்த வேண்டும்! நம்பிக்கை கொடுக்க வேண்டும்! தைரிய படுத்த வேண்டும்!

ஆனால்? இங்கே நடப்பது என்ன? ''தாலி அறுப்பது'' ஒரு நிகழ்ச்சியாம் அதில் சுற்றத்தார் வேறு கலந்து கொள்ள வேண்டுமாம்? வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அல்லவா இருக்கிறது?

காலம் காலமாய் பெண்களின் மீது திணிக்கப்பட்ட கொடுமையின் தொடர்ச்சி இது !!

யார் இதை எதிர்ப்பது?

ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன்,பெண்னமடிமைத்தனத்தை எதிர்க்கிறேன் என் அரை வேக்காட்டு தனமாக குரல் கொடுக்கும் பெண்கள் இங்கே உதவமாட்டார்கள்!

தன் தாய்க்கோ ,சகோதரிக்கோ ,இப்படி நேர்ந்தால் அதை எதிர்த்து ஆண்கள்தான் குரல் கொடுக்க வேண்டும்! வெறும் குரலாக அது இருக்க கூடாது ஒரு தீர்வாக இருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்து சிலர் கணவனை இழந்த பிறகும் பூ ,பொட்டு வைத்து கொண்டு கண்ணியமாக வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு பக்க பலமாக பெற்றோர்களும் ,சகோதரர்களும் இருந்து வருகிறார்கள்!

இதுபோன்ற மடமை தனங்களை எதிர்த்து ஆண்கள் குரல் கொடுத்தால் அவர்களுக்கு முதல் எதிரியாக அங்குள்ள ''''எல்லாம் தெரிந்த''' பெண்கள்தான் இருக்கிறார்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நாம் வழக்கமாக அணியும் ஒரு செயின் போல, தாலிச்செயினுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவமென்று ஏதுமிராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. //

நல்லா சொன்னீங்க..
முக்கியம்ன்னு சொல்றவங்க கூட வடநாட்டுக்கு டூர் போ சொல்லுங்க கழட்டி டப்பால வச்சிடுவாங்க.. அப்ப அது தாலி இல்ல தங்கம்..

நாஞ்சில் நாதம் said...

///எனக்கு தெரிந்து சிலர் கணவனை இழந்த பிறகும் பூ ,பொட்டு வைத்து கொண்டு கண்ணியமாக வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு பக்க பலமாக பெற்றோர்களும் ,சகோதரர்களும் இருந்து வருகிறார்கள்!\\\


சரியாக சொன்னீங்க ஜீவன்

\\\\இதுபோன்ற மடமை தனங்களை எதிர்த்து ஆண்கள் குரல் கொடுத்தால் அவர்களுக்கு முதல் எதிரியாக அங்குள்ள ''''எல்லாம் தெரிந்த''' பெண்கள்தான் இருக்கிறார்கள்!\\\\

பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களும் இருக்கிறார்கள்.

நாஞ்சில் நாதம் said...

///எனக்கு தெரிந்து சிலர் கணவனை இழந்த பிறகும் பூ ,பொட்டு வைத்து கொண்டு கண்ணியமாக வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு பக்க பலமாக பெற்றோர்களும் ,சகோதரர்களும் இருந்து வருகிறார்கள்!\\\


சரியாக சொன்னீங்க ஜீவன்

\\\\இதுபோன்ற மடமை தனங்களை எதிர்த்து ஆண்கள் குரல் கொடுத்தால் அவர்களுக்கு முதல் எதிரியாக அங்குள்ள ''''எல்லாம் தெரிந்த''' பெண்கள்தான் இருக்கிறார்கள்!\\\\

பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களும் இருக்கிறார்கள்.

ஆகாய நதி said...

u made me cry :(((((

no more words to say amithu amma...

I dont have this much guts to c anyone in this situation :(

Unknown said...

// திரு லவ்டேல் மேடி

அப்படி மகாலஷ்மியாக , அழகாக பார்க்கப்படுபவள் அவலட்சணமாக நேர்ந்த காட்சியைப் பார்த்தபின் எழுந்த உணர்வுதான் இந்தப் பதிவு.

வேறென்ன சொல்ல. //



மன்னிக்கவும் ... பதிவை சரியாக படிக்காமல் இடுகை இட்டதற்கு ..!!!


கண்டிப்பாக.......!! நன் குறையாக எதையும் கூறவில்லை...!!


சில காலங்களுக்கு முன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறுதல் என்ற கொடுமை இருந்தன.....!! அப்பொழுதெல்லாம் பெண்கள் சுதந்திரம் எனபது அறவே கிடையாது....!! அப்படியும் சுதந்திரமாக இருந்த பெண்களின் பெயர்கள் வரலாற்றுப் பலகையில் பொறிக்கப் பட்டது...!!


காலம் சிறிது மாற.. மாற... எதிர்ப்புகள் அதிகரிக்க.... உடன்கட்டை சம்ப்ரதாயம் உடன்கட்டை ஏறியது....... !! பின் பெண்கள் பூ , பொட்டு , இல்லாமல் வெள்ளை சீலையுடன் தோற்றம் அளித்தார்கள்... , ( ஒரு சில வகுப்புகளில் கூந்தலை முற்றிலும் அகற்றி விடுவார்கள் ..) அது தான் நம் முந்தைய காலம். என் பள்ளி நண்பன் ஒருவன் எனது அருகாமை ஊரான கோபிசெட்டிபாளையத்தில் உள்ளான். அவன் ஒருமுறை வகுப்பு நண்பர்கள் ஒரு சிலரை அவன் வீடிற்கு அழைத்திருந்தான். நண்பர்கள் ஏழு பேர் சென்றிருந்தோம். அங்கு நான் கண்ட கட்சி கொடுமையிலும் கொடுமை. அவனது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். அவனது பாட்டி ( கணவனி இழந்து வெள்ளை கோலத்தில் ) , அவனது அம்மா (அவனது அப்பாவை இழந்த வெள்ளை கோலத்தில் ) , அவனது அத்தை (அவனது மாமாவை சிறு வயதிலேயே இழந்து வெள்ளை கோலத்தில் ) . அவனது அத்தைக்கு குழந்தை இல்லை.அந்த வீட்டில் இவன் ஒரே பையன். அந்த மூன்று வெள்ளை கோலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் அவன் வளர்கிறான் . வெளியே சென்றால் எல்லா பெண்களும் பூவும் , பொட்டுடனும் போகையில் , அவ்வது வீட்டில் மட்டும் எல்லோருமே கணவனை இழந்து வெள்ளை கோலத்தில் ... அப்பொழுது அவன் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கும்.


ஆனால் , காலம் சற்றே மாறிவிட்டதாகவே நான் கருதுவேன் ... , எங்கள் ஊர்களில் ( ஈரோட்டில் ) இன்றைய காலகட்டத்தில் நான் பார்த்தவரை , கணவனை இழந்த பெண்கள் சிலர் பட்டுப் புடவைகளை தவிர , மற்ற ரக கலர் புடவைகளை ,தங்கச் செயின் , வளையல் , அணிகிறார்கள் ..... சில கணவனை இழந்த இளம் பெண்கள் , ஸ்டிக்கர் பொட்டும் வைத்துக் கொள்கிறார்கள்...!! என்னைப் பொறுத்தவரை இது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவே கருதுவேன்...!! காலப் போக்கில் இன்னும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு ..!!

முக்கியமாக தென் தமிழக கிராமங்களில் இச் சூழல் மாறவேண்டும்...!!!!!


சில காலங்களுக்கு முன் ஆண்கள்தான் திருமணத்தின்போது மெட்டி அணிவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்...!! காலப் போக்கில் அது எப்படி மாறியது என்று தெரியவில்லை....!!!!




//
//பூ, பொட்டு , மாங்கல்யம் , நல்ல உடுப்பு ( சேலை ) உடன் ஒரு பெண் சக லக்ஷணங்களையும் அடைகிறாள் ....!!! அப்பொழுது அவள் மகாலக்ஷ்மிக்கு இணையாக போற்றப் படுகிறாள்....!! அதுவே பெண்மையின் அழகு....!!!//

அப்படியா?
தலையிலும் கழுத்திலும் பாம்பை அணிந்து கொண்டு ஆண்கள் மகாவிஷ்ணுவாகவும் சிவபெருமானாகவும் காட்சி தாருங்களேன்! எங்களுக்கும் ஆசையாக் இருக்கிறது! //



சகோதரி தீபா அவர்களே.... , எல்லா ஆண்களும் தவறானவர்கள் அல்ல, மேலும் இது ஆண் ஆதிக்கத்தால் ஏற்பட்டதல்ல... பாரதியும் ஒரு ஆண் தானே............???

மாதவராஜ் said...

சமூகம் குறித்த பிரக்ஞைகளே இந்தப் பதிவில் அழுத்தமாய் வெளிப்பட்டு இருக்கின்றன. common sense என்றழைக்கப்படும் நமது பொதுப்புத்திக்குள் காலம் காலமாய் ஊறிப்போய் இருக்கிற சம்பிரதாயங்கள், உணர்வுபூர்வமாய் நம்மை ஆட்டுவித்திருக்கின்றன. கேள்விகள் எழுப்பப்படும்போதுதான் அவை குறித்த தேவைகள் புரிய வரும். முக்கியமான பதிவு.

அமுதா said...

/*காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது*/
சடங்குகளும் சம்பிரதாயங்களும் மறைந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் அழியும். என் மாமாவின் மறைவின் பொழுது அடுத்து என் மனம் அடித்துக்கொண்டது. நல்ல வேளையாக இது போன்ற சம்பிரதாயங்கள் இல்லை. ஆனால் எப்பொழுதும் பூவும் பொட்டுமாக இருப்பார் அத்தை. இப்பொழுது சின்னதாக பொட்டு வைத்துக் கொள்கிறார். இன்னும் பூ வாங்கி படத்துக்கும் , எங்களுக்கும் கொடுக்கிறார். சில வேளைகளில் கோவில் பிரசாதம் என்று "குங்குமமோ" "பூவோ" கொடுக்க கை வந்துவிடும் பொழுது, மனம் தடுமாறி விடும். எத்தனை பெரிய துன்பம்...
/*இப்படியொரு இழிநிலையும், மீண்டும் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டால் பிறரால் வரும் பழிநிலையும் மாற என்னிடம் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன. உங்களிடம்*/
சிறு வயதில் இருந்து வைத்த பூவும், பொட்டும் ஒரு வேளை வைத்துக் கொள்ளும் ஆசை இருந்தாலும் இவ்வுலகம் பழிக்குமே என்ற எண்ணம் கொடுமை. என்னிடமும் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன

Unknown said...

//தலையிலும் கழுத்திலும் பாம்பை அணிந்து கொண்டு ஆண்கள் மகாவிஷ்ணுவாகவும் சிவபெருமானாகவும் காட்சி தாருங்களேன்! எங்களுக்கும் ஆசையாக் இருக்கிறது!// well said Deepa..

மனைவியை இழந்த ஆண்கள் மற்றொரு திருமணம் செய்து கொள்வார்கள். இது இன்றும் நடக்கும் விதயம். விதவை மறுமணம் என்பது எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டிருக்கிறது. மணம் கூட அவரவர் தேவை மற்றும் விருப்பம் சார்ந்தது. அவர்களின் நிம்மதி, எதிர்காலம் எல்லாம் அவனுடன் சேர்ந்து தொலைந்து போவது இன்றும் தொடரும் சாபம்..பெண்மை வெல்கவென்று சொன்னவன் கனவு இன்னும் முழுதாக பலிக்கவில்லை.

Unknown said...

காலம் மாறும். ஒரு சில பழக்கவழக்கங்களை நாம் நம்ம வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கணும். நான் ஃப்ளைட்க்கு கிளம்பும் அன்று நல்ல சகுனத்துக்காக எங்க அப்பா வீட்டில் இருக்கும் சுமங்கலியை காருக்கு எதிரில் நடந்து வரச் சொல்லுவாங்க. பொதுவாக எப்பவும் என் மாமாவின் மனைவி (அக்கா என்று அழைப்போம்) வருவாங்க. என் மாமா இறந்த பிறகு நான் ஊரில் இருந்து திரும்பும் நேரத்தில் அப்பா அதே அக்காவை தான் எதிரிலே நடந்து வரச் சொன்னாங்க. கணவரை இழந்தவர் எதிரில் வந்ததால் எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. சில மூட நம்பிக்கைகள் ஒழிந்தாலே மாற்றங்கள் நிறைய ஏற்படும். அதே மாதிரி, கணவனை இழந்துவிட்டவர்களை பொட்டில்லாமல் இருக்கவோ, சுப காரியங்களில் தள்ளி இருக்கவோ எங்க குடும்பத்தில் அனுமதிக்கறது இல்லை.

மாதேவி said...

"காலம் காலமாய் பெண்களின் மீது திணிக்கப்பட்ட கொடுமை இது".

பல குடும்பங்களில் இவ்வழக்கம் மாறி வருவது வரவேற்கவேண்டியது. காலத்திற்கேற்ப மேலும் மாற்றம் வேண்டும்.

"உழவன்" "Uzhavan" said...

அமித்துமா.. நல்ல கேள்வியை இந்த சமூகத்தின் முன்னால் வைத்துள்ளீர்கள். மாற்றம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சடங்கு/சம்பிரதாயங்கள் மீது நாம் வைத்திருக்கும் மடத்தனமான/மூர்க்கத்தனமான நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் காரணம். இன்றைய தேதியில் பெரும்பாலான பெண்கள் தேவைப்படும்போது தாலியைக் கழற்றி வைக்கவும், தேவைப்படும்போது அணிந்துகொள்ளவும் செய்கிறார்கள். அதனை ஒரு பெரிய இதுவாக நினைக்காத கணவன்களும் இருக்கிறார்கள். விரைவில் இந்த முற்போக்கான சிந்தனை எல்லா வீடுகளிலும் நிலவும்

கே.என்.சிவராமன் said...

அமித்து அம்மா,

அழுத்தமான, நெகிழ வைக்கும் பதிவு. ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் என் கண் முன்னால் என் அம்மாவின் தோற்றமே விஸ்வரூபம் எடுக்கிறது.

இதற்கு மேல் நான் என்ன எழுதினாலும் அது செயற்கையாகத்தான் இருக்கும் அமித்து அம்மா...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கிபவா said...

:)))

anujanya said...

மிக முக்கியமான விஷயத்தைத் தொட்ட பதிவு. காலம் மாறி வருகிறது என்றாலும், பழமையின் பிடிக்குள் இன்னும் சிக்கி இருக்கும் சிலவற்றுள் இக்கொடுமையும் ஒன்று.

ஊடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் இருக்கும் தாக்கத்தினால், அவர்களுக்கு இந்த விஷயத்தில் பெரிய கடமையும் இருக்கிறது.

அனுஜன்யா

Unknown said...

இப்பொழுது கொஞ்சம் நிலைமை மாரி இருக்கிறது ...முன்பு வெள்ளை சீலை தான் கட்ட வேண்டும் என்று கட்டாய படுத்துவார்கள்.. இப்பொழுது வயதானவர்களே கலர் சீலை உடுத்துவதை பார்க்க முடிகிறது ....போக போக நிலைமை மாறும் என்று நம்புவோம்.... தட்சை கண்ணன்

Shiva said...

நான் இலங்கையச் சேர்ந்தவர், 16ம் நாள் தாலியறுப்பு, காரியங்கள் பற்றி எமக்குத் தெரியாது, தாலியறுக்கும் சடங்கைப் பர்றி முழுமையாக விளக்க முடியுமா? ஏழும் என்றால் இதை ஒரு தனிப்பதிவாக இட முடியுமா? கணவன் இறந்த நாளில் இருந்து அவர்து மனைவிக்கு என்ன சடங்கு நடக்கும் என்று விளக்கமாக பதிய முடியுமா ?

Shiva said...

நான் இலங்கையச் சேர்ந்தவர், 16ம் நாள் தாலியறுப்பு, காரியங்கள் பற்றி எமக்குத் தெரியாது, தாலியறுக்கும் சடங்கைப் பர்றி முழுமையாக விளக்க முடியுமா? ஏழும் என்றால் இதை ஒரு தனிப்பதிவாக இட முடியுமா? கணவன் இறந்த நாளில் இருந்து அவர்து மனைவிக்கு என்ன சடங்கு நடக்கும் என்று விளக்கமாக பதிய முடியுமா ?

அன்புடன் மலிக்கா said...

மனம் கனக்கிறது இதுப்போன்ற சில நிகழ்வுகளால்,,

தாங்களின் பதிவு வெகு சிறப்பு

yoha said...

இதை வாசித்த பின்னர் எனக்கு அழுகையே வந்து விட்டது. இதே சடங்கை 3 வருடங்களுக்கு முன்னர் நானும் அனுபவித்தவள் என்ற வகையில்.எவருமே ஒர் பெண்ணின் மனம் எவ்வளவு பாடுபடும் என்று சிந்திப்பதில்லை. இதில் சோகம் என்னவென்றால் இதை முன் நின்று செய்யும் பெண்களும், இச் சடங்கை அனுபவித்தவர்களாக உள்ளது தான். என்னுடைய வேதனை எல்லம் என்னவென்றால் கண்வனை இழந்தவழுக்கு தாலியும் பொட்டும் தேவை இல்லை என்றால் நாமே அதை எடுத்துவிடுவோமே, எதுக்காக தனியாக ஒரு சடங்கு வைத்து பலிக்கடா போல் செய்யது இறுதியில் தலையையும் மழித்து இறுதியில் சுற்றத்தாருக்கு வீபுதி வழங்கும் போது அவர்கள் படும் பாட்டை என்னவ்ண்டு சொல்லுறது. 4 ஏற்கனவே விதவையானவர்கள் என்னை நோக்கி வந்த் போது என் மனம் பட்ட பாட்டை எப்படித்தான் கூறுவதோ. அமித்துஅம்மா உங்களது நடைமுறைகள் என்னவோ. உங்கள் ஈ-மையில் என்ன தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் பலவற்றை உரையாடலாம் என்று யோசனை.

PDK said...

இதற்கு நீங்கள் சமுதாயத்தை குறை கூறுவது தவறு. இத்தகைய ஒரு சடங்கில் இருந்து நீங்கள் உங்களது அக்காவையும் அம்மாவையும் காத்திருக்க வேண்டும். நீங்கள் யராவது எதிர்த்திருந்தால் இச்சடங்கை தடுத்து இருக்கலாம் அல்லவா. அதை விட அக்காவும் அம்மாவும் இச் சடங்கை எதிர்க்கவில்லை தானே, அவர்களது உடன் பாட்டுடன் தானே இது நடந்தது. அக்காவினதும் அம்மாவினதும் எண்ணம் என்னவாக இருந்தது, உங்கள் உறவுக்காரர்களில் எத்தனை பேர் இதை ஆதரித்தனர், எத்தனை பேர் எதிர்த்தனர்?

Unknown said...

நான் இதுவரை உங்களது கட்டுரையில் குறிபிட்ட சடங்கு எல்லாம் சினிமாவில் மட்டும் காட்டப் படும் என்று நினைத்தேன். ஆனால் நிஜதிலும் நடைபெறுவது ஆச்சரியமாய் உள்ளது. இச்சடங்கு எல்லம் பல வருடங்களுக்கு முன்னரே நிறுத்தப் பட்டதாகவே நான் அறிந்தேன். இதை கொஞ்சம் விவரமாக விளக்குவீர்களா. ஈமெயில் செய்ய முயன்றேன் ஆனால் உங்களுடைய முகவரி கிடைக்கவில்லை