24 June 2009

உப்பு

வீட்டை விட்டு எல்லோரும் போய்விட்ட இந்த 10 மணி காலை, ஒரு பெருமழை பெய்து ஓய்ந்த தோற்றத்தை வீட்டிலேயும், தன் மனதிலேயும் உண்டு செய்தது. காலையில் காஃபி குடித்ததோடு சரி, இன்னும் டிபன் ஆகவில்லை, பசித்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை.

எப்படி இருக்கும்? சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவும், உன் கை ரொம்ப பெரிசுங்கறதனால, இப்படியா உப்பை கொட்டி வைப்ப, இதுல என்று தட்டை தள்ளிவிட்டு போனபோது சற்று ஆத்திரமாய் வந்தாலும்,அதன் நிவர்த்திக்கான வழி தெரியவில்லை.

திருப்பி திருப்பி கையைப் பார்த்துக்கொள்கிறேன். பெரிசாக ஒன்றும் தெரியவில்லை, சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. கையையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால், போட்டிருந்த மோதிரமும் கண்ணுக்குப் பட்டது, இவ்வளவு நாளாய் விரலோடு விரலாகத்தான் இருக்கிறது. இன்றுதான் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் கூடத் தெரிகிறது. சின்ன சின்ன உருண்டையாக, வளையங்களைக் கொண்டு, வளையங்களின் இடுக்கில் அழுக்கு ஏறிப்போயிருக்கிறது. சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்தக்கணம் தோன்றியது.ஆனால் அடுத்த கணமே உப்பின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. கை சுட்டாலும் பரவால்லை என்று சுட சுட கையில் ஊற்றி, சுவைத்துப் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. இது போன்று உப்பின் சுவை பார்ப்பது கடந்த சில நாட்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை நாக்கில் பிரச்சினை இருக்குமோ. நாக்கைப் பார்த்தால் என்ன. சட்டென்று கண்ணாடியின் அருகே போய், நாக்கைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி பார்த்து, நாக்கை நீட்டிப் பார்த்து என்று செய்ததில் உமிழ்நீர் சுரந்ததுதான் மிச்சம், வேறொன்றும் பலனில்லை.

ச்சே, உப்பு என்ற ஒன்றை கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும், அப்படியே அதனதன் போக்கில் சாப்பிட்டு நாக்கும் பழக்கப்பட்டு போயிருக்கும், இப்படியே யோசனை நீண்டதில், தான் எப்பவாவது உப்பில்லை என்று உணவை புறக்கணித்திருக்கோமா என்று தோன்றியது.
ஒரு முறை அத்தை வீட்டில் தான் அது நடந்திருக்கிறது. அம்மாவிற்கு பெரும்பாலும் இந்தப்பிரச்சினை வராது, பாட்டிக்கும், அப்பாவின் சத்தத்திற்கு பயந்தே பார்த்துப் பார்த்து சமைப்பாள். ஒரு முறை கூட தப்பிப்போனதில்லை, பிள்ளைகளின் மீது எவ்வளவு கவனம் வைத்திருந்தாலோ, அதே கவனம் உப்பின் மீதும் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. சாப்பிடும் போது ஒரு முறை கூட உப்பு வைத்திருக்கும் கலம், கூடத்திற்கு வந்ததில்லை. ஆனால் அத்தை வீட்டில் பொடி உப்பை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, சாப்பாட்டு மேசை மீது எப்போதுமே இருக்கும். ஓட்டலில் வைத்திருப்பதைப் போல.

அத்தைக்கு அவ்வளவாய் சாப்பாடு, சமையல் என்ற விஷயத்தில் ஈடுபாடு இருக்காது, அதற்காகவே விடுமுறை காலங்களில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போகத்தோன்றும், இங்கே இருந்திருந்தால் இந்தப் பாட்டியின் பேச்சைக்கேட்டு, அம்மாவும் என்னை நை, நை என்று அதைச் செய், இதைச் செய் என்று நைந்துகொண்டிருப்பாள், செய்யவில்லை என்றால் பாட்டி வைதுக்கொண்டிருப்பாள். இந்த தொந்திரவுக்கே, விடுமுறை வரும் ஒரு வாரத்துக்கு முன்னரே அத்தையை வரச்செய்து, அவளோடு தொத்திக்கொண்டு போய்விடுவது. எந்த தொந்திரவும் இல்லாமல், நினைத்ததை செய்துக்கொண்டு பொழுதோட்டுவது என அவையெல்லாம் கார்காலங்கள். அவ்வப்போது அம்மாவை நினைத்துக்கொண்டாலும், அந்த குண்டு பல்பு போட்ட சமையலைறையை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

அத்தை அனேகமாய் கலந்த சாதம் மாதிரிதான் செய்வாள். அதுதான் சுலபம், ரசம், சாம்பாருன்னு செஞ்சாலும் சாதத்துல போட்டு கலந்துக்கிட்டுதானே சாப்பிடப்போறோம். தோசை சரியாகவே வார்க்கவராது, சப்பாத்தியும் அதே கதைதான். ஓவ்வொரு தோசையும், சப்பாத்தியும் ஒவ்வொரு தோற்றம் காட்டும், சில சமயம் மேப்பில் இருக்கும் சில நாடுகள் கூட அதே மாதிரி சாயலாய் இருப்பதாய் கூட நினைத்துக்கொண்டு சிரிப்பேன். அத்தை கேட்டால் சொல்லிவிடுவதுண்டு, அதற்கு அவளும் சிரித்துக்கொண்டே, எப்படியும் பிச்சு பிச்சு தானே சாப்பிடறோம், எப்படியிருந்தா என்ன, வயிறு ரொம்புதா. அதப் பாரு என்பாள். ரொம்பவும் மெனக்கெட மாட்டாள் சமையலுக்கு எப்பவுமே, மாமாவும் அதே மாதிரி இருந்ததால், அத்தைக்கு இந்த விஷயத்தில் எந்த பிரச்சினையுமில்லை.

கூடுதலாக இவளின் சமையலின் கைத்திறமை கண்டு, சொந்தக்கார கூட்டங்கள் வந்து டெண்ட் அடிப்பதென்பது மிகமிகக் குறைவு. அத்தைக்கு சமையலில் தான் கைத்திறமை இல்லையே ஒழிய, கை வேலைப்பாடெல்லாம் அழகாய் செய்வாள், அவள் எம்ராய்டரி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தையின் ஓய்வு நேரங்களெல்லாம் எம்ப்ராய்டரிதான், சில பத்திரிக்கைகள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பரிசு கூட வாங்கியிருக்கிறாள் இதற்காக. எம்ப்ராய்டரிக்கு நேரம் ஒதுக்குவதற்காகவே சமையலை சீக்கிரம் முடிக்கிறாள் போல என்று கூட தோன்றியது.

மேடம், கொரியர்.......... என்ற கட்டைக் குரல், சட்டென்று நினைவுகளை கலைக்கச்செய்தது. நேரத்தைப் பார்த்தால் 11 மணி என்று காட்டியது. ஏதோ பேங்க்கில் இருந்து வந்த கொரியர், ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்யவே அரைமணி நேரம் பிடித்தது. மறுபடியும் சமையலறை. உப்பு கிலி பிடித்துக்கொண்டது. சாப்பிடத்தோணவில்லை, மீண்டும் ஒரு காபி குடித்துவிட்டு, துணிகளை துவைத்து, காயப்போட மாடிக்கு போனேன். காயப்போடும்போது, அங்கிருந்து மளிகைக்கடை கண்ணில் பட்டது. ஒரு வேளை இவன் தரும் உப்பில் ஏதேனும் ப்ரச்சினையா. அளவாய் போட்டாலும், கரிக்க செய்யும் தன்மையோ. என்ன உப்பு வாங்குகிறோம்,கீழே போய் பார்க்கவேண்டும்.

ச்சே, எங்கே போனாலும் இந்த உப்பு ப்ரச்சினை ஒட்டிக்கொண்டே வருகிறது. பசித்தது, காலையில் சாப்பிடத்தாலோ என்னவோ, தயிர் சாதம் சாப்பிடலாம் என்று தோன்றியது, சாதத்தில் தயிரை விட்டு பிசையும்போது தோன்றியது, உப்பு போடாமல் இன்று சாப்பிட்டால் என்ன, இன்று காலையிலிருந்து என்னோடு ஒட்டிக்கொண்டே வந்து உயிரை வாங்கும் இந்த உப்பு நினைவுக்கு இதுதான் சரியான தண்டனை, உன்னைப் புறக்கணிக்கிறேன் உப்பே என்றபடி தயிர்சாதத்தை வாயில் வைத்தால் என்னவோ போலிருந்தது.
என் பேச்சும், செயலும் எனக்கே சிரிப்பை வரவைத்தாலும், உப்போடு ஒரு வீராப்பு வரத்தான் செய்தது. பாரேன், உப்பு, வீராப்பு என்று, ஆழந்த சிந்தனைகளில் தொடர்பாக வார்த்தைகள் கூட அடுக்கு மொழி போல வந்து விழுகிறது. ம்ஹூம் விடுவதாயில்லை, எப்படியாவது இந்த உப்பில்லா தயிர்சாதத்தை சாப்பிட்டாவேன், இரண்டும், மூன்று வாய், குமட்டிக்கொண்டு வந்தது. கொஞ்சம் ஊறுகாய் வைத்துக்கொள்ளலாமா என்று தோன்றியது, ம்ஹூம், வேண்டாம். உப்பின் அதிக பட்ட பயன்பாடே ஊறுகாய்க்குத்தான். அதற்கு ஒரு துளி உப்பே சேர்த்துக்கொள்ளலாம்.

வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று பிடிவாதமாய், தட்டை கையிலெடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து டி.வி.யைப் போட்டேன். போட்டவுடனேயே இந்தக் காட்சிதான் ஓடியது, ஒரு பெண்ணும், சமையலறையும்,கலராய் ஏதோ உணவு வகையறாவையும் காண்பித்து, தலைமுடி சீராய், மடிப்பு கலையாத புடவையோடு,முக்கியமாய் வியர்த்து வழியாமல்,தன் நீண்ட நெயில் பாலீஷ் விரல்களால் உப்பை அழகாய் தூவிக்கொண்டிருந்தாள். உடன் ஒரு மெல்லிய இசையும் ஒலித்தது. வாங்குங்கள் அயோடின் நிறைந்த இந்த உப்பை என்று கீச்சுக்குரலில் சொன்னாள். டி.வியை ஆஃப் செய்யவும் தோன்றாமல்,சாப்பிடவும் தோன்றாமல் தயிர் சாதத் தட்டையே வெறித்துக்கொண்டிருந்தேன் நான். பிள்ளைகள் பள்ளிவிட்டு வரும் சத்தம் கேட்டது. மீண்டும் வருமா இந்த உப்பின் யோசனை, இல்லை மீண்டு வருவோமா இந்த உப்பிலிருந்து ? மறுபடியும் உயிரைவாங்கும் இந்த உப்பின் சிந்தனையோடு கையைக் கழுவிக்கொண்டு கதவைத் திறந்தேன்.

31 comments:

கே.என்.சிவராமன் said...

எக்ஸலண்ட் அமித்து அம்மா... அந்த கடைசி பத்தியை நீக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ரோஷத்துக்கும், உப்புக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வார்கள். அப்படி வாசித்தால் சிறுகதை வேறொரு தளத்துக்கு செல்கிறது.

நல்லா இருக்கு

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நட்புடன் ஜமால் said...

நன்றாக ’சப்பு’

கொட்ட வைத்த

‘உப்பு’

ஆயில்யன் said...

உப்பு மேட்டர்ல எவ்ளோ விசயங்களை உள்ளடக்கி ஒரு கதை சூப்பரு தங்கச்சியக்கா :)))

ஆயில்யன் said...

ஆச்சி நேத்து தாவணி பத்தி ஒரே அழுவாச்சி இன்னிக்கி நீங்க உப்பு பத்தி ஒரே அழுவாச்சி :((

Vidhya Chandrasekaran said...

நைஸ்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்குமே அந்தக் கடைசி பத்தி கதையோடு ஒட்டாமல் செயற்கையாகத்தான் தோன்றியது.
நீக்கிவிட்டேன்.

நன்றி உங்களின் கருத்துக்கு திரு. சிவராமன்.

நன்றி ஜமால் சகோ

நன்றி ஆயில்ஸ் அண்ணாச்சி.

நர்சிம் said...

//என்னோடு ஒட்டிக்கொண்டே வந்து உயிரை வாங்கும் இந்த உப்பு நினைவுக்கு இதுதான் சரியான தண்டனை, உன்னைப் புறக்கணிக்கிறேன் உப்பே//

நல்லா எழுதி இருக்கீங்க.

தமிழ் அமுதன் said...

உப்புக்கு சமையல்ல இவ்ளோ முக்கியத்துவம் இருக்கும் போது!
''உப்பு பெறாத விஷயம்'' அப்படின்னு ஒரு டயலாக் வேற வழக்கத்துல இருக்கு!!!

Dhiyana said...

சூப்பர்.. கலக்குறீங்க..

Deepa said...

சுவாரசியமாக இருந்தது!
//தலைமுடி சீராய், மடிப்பு கலையாத புடவையோடு,முக்கியமாய் வியர்த்து வழியாமல்,தன் நீண்ட நெயில் பாலீஷ் விரல்களால் உப்பை அழகாய் தூவிக்கொண்டிருந்தாள்.//

ஆமால்ல..அந்த உப்பு போட்டா சமையல் சூப்பராயிடுமா? :-))

சமையலுக்கு இந்த உப்பு போடுவது மட்டும் உலகம் பூரா இருக்கே எப்படி என்று நானும் யோசித்ததுண்டு

ஆனா எனக்கு நாக்கு நீளம். அஞ்சு வயசிலேயே, வீட்டில் குழம்பில் என்னமோ குறைன்னு எல்லோரும் குழம்பிக் கொண்டிருக்க, ’அதுல உப்பு பத்தலை’ என்று சொன்னேனாம்! ;-)

குடந்தை அன்புமணி said...

உப்பு பற்றிய கதை சப்பென்று இல்லாமல் சரியாகத்தான் இருக்கிறது, உங்கள் கைவண்ணத்தில்!

Thamira said...

ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதன் நுண்ணிய பல தொடர்புகளை அலசுவதற்கு மிகத்திறன் வேண்டும். மாடியிலிருந்து பார்த்த கடையும், அது தொடர்பான சிந்தனையும் வியக்கச்செய்தது. தேர்ந்த எழுத்தாளராகி வருகிறீர்கள்.!

Vidhoosh said...

:0 super amiththu amma.

ஆகாய நதி said...

சூப்பர் அமித்து அம்மா! :)

அன்புடன் அருணா said...

அட என் சமையல்லெ அடிக்கடி இப்படி நடக்குமே!

"உழவன்" "Uzhavan" said...

அமித்துமா.. கலக்குறீங்க :-)
உப்புச் சப்பு இல்லாத மேட்டரையெல்லாம், நல்ல உப்பு காரம் போட்டு சுவையா தருகிறீர்கள். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் :-)
ம்ம்.. ஆமா.. உப்பு இல்லாம தயிர் சாதம் சாப்பிட அவ்வளவு கஷ்டமா என்ன? நான் தயிர் சாதத்திற்கு உப்பே போடுவதில்லை.

மாதவராஜ் said...

நம் அன்றாட வாழ்விலும், இந்திய வரலாற்றிலும் உப்புக்கு தவிர்க்க முடியாத இடம் இருந்த போதிலும் ஆண்கள் அது குறித்து பெரிதாய் எதுவும் சிந்திப்பதில்லை, சாப்பிடும் நேரம் தவிர.

ஆனால் பெண்களுக்கு அது ஒவ்வொரு நாளும் எதோ சமையலறைத் தேர்வு மாதிரி. எனக்கு எங்க அம்மாவைப் பெத்த அம்மாவின் ஞாபகம், இந்தப் பதிவைப் பார்த்ததும் நிறைய வந்தது. அவர்கள் சமைக்கும்போதுதான் நான் அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். அப்படியொரு கவனமும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார்கள். சுடச்சுட குழம்பைக் உள்ளங்கையில் லேசாய் ஊற்றி சுவைத்துப் பார்க்கிற காட்சி ஞாபகத்திற்கு வந்தது.

நீங்கள் சொன்ன விதம் அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமைங்க.

வேத்தியன் said...

நன்னாருக்கு...
:-)

Unknown said...

என்னதான் உப்பு அதிகமானாலும் , கம்மியானாலும்... வீட்டு சாப்பாடுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு... அமிர்தம் தோற்றுவிடும்...!!!! அந்த அருமை வெளியில சப்பிடும்போதுதான தெரியுது....!!!


இப்படிக்கு ,

என் அம்மா சமையலை மிஸ் பண்ணும் ,

லவ்டேல் மேடி.......

மணிநரேன் said...

அடேயப்பா...உப்பினை வைத்து இப்படியொரு சிறுகதையா??கதையினுள் மனம் எங்கெல்லாமோ சென்று வந்துவிட்டது.

நன்றாக இருந்தது.

அமுதா said...

அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அமித்து அம்மா! அதுவும் சொன்ன விதம் கலக்கல்!

//அங்கிருந்து மளிகைக்கடை கண்ணில் பட்டது. ஒரு வேளை இவன் தரும் உப்பில் ஏதேனும் ப்ரச்சினையா. அளவாய் போட்டாலும், கரிக்க செய்யும் தன்மையோ.//

:-))

மிகவும் ரசித்தேன்!

Unknown said...

அருமையான கதை அமித்தும்மா. நுட்பமான கதைசொல்லியாகிட்டீங்க. கதை நெடுகிலும் அவளின் உப்பு பற்றிய மன சஞ்சலத்தை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன். குறிப்பாக மாடியிலிருந்து எட்டிப் பார்க்கும் போது மளிகை கடையைப் பார்க்கையில் சிந்தனை வயப்பட்டது, டீவியில் சமையல் செய்பவரின் வர்ணனை அவர் உப்பை போட்ட விதத்தை சொல்லியது அட்டகாசம். இக்கதையை உடனடியாக எதாவது பத்திரிகைக்கு அனுப்பவும். அல்லது எனக்கு மெயில் அனுப்புங்கள். வாழ்த்துக்கள் எழுத்தாளரே!

ச.முத்துவேல் said...

உமா ஷக்தியும்,ஆதியும் நான் சொல்ல நினைத்தை சொல்லியிருக்கிறார்கள். உரையாடல்களற்ற, வெறும் மனவோட்டங்களை மட்டுமே கொண்ட சிறுகதை, படிப்பதற்கு அத்தனை சுவை தருமா என்றால் ஒப்பீட்டளவில் குறைவுதான். ஆனால், மிகத் துல்லியமாக, இயல்பாக எழுதும்போது சாத்தியம்.

மனவோட்டங்களை சோம்பாமல், தயங்காமல்,முழுதும் எழுதும் செயல் எழுத்தாளர்களுக்கு, எழுத்துக்கு அவசியம். ஒரு சிறுகதை எழுத்தாளர் உருவாகிக்கொண்டிருக்கிறார் (இனிமேல்தானா?) என்பதில் மகிழ்ச்சி.

ராம்.CM said...

அருமை.

Rajalakshmi Pakkirisamy said...

Good :)

யாத்ரா said...

இந்தக் கதை மிகவும் பிடித்திருக்கிறது, நம்மை அதிகம் பாதிக்கிற விஷயங்கள் நம்மை விட்டு அகலாது நம்மையே சுற்றிக் கொண்டிருக்கும், அது சார்ந்தே நம் எண்ணவோட்டமிருப்பதால் அது சார்ந்தே எல்லாம் நிகழ்வதாக நமக்கு தோன்றும், நிகழும்( டி வி ad ). இதை மிக அழகாக எழுதியிருக்கீறீர்கள், சொரணை கோபம் எல்லாம் அதிகம் இருக்கிறதென்று நான் கொஞ்ச நாள் உப்பு குறைவாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதிகாரத்திற்கு எதிராக நம்மால் செய்ய முடிந்த சிறய எதிர்வினை.

அருமையான கதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா வந்திருக்குப்பா.. :)

butterfly Surya said...

சூப்பர்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும்.

butterflysurya@gmail.com

செல்வநாயகி said...

அருமை.