13 April 2009

உயிர்த்தண்ணீர்

உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு - இவை மூன்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைத் தொகுப்புகள். கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” நாவலை படிக்கவேண்டும், அப்போது தமிழினி பதிப்பகத்தில் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

சில வலைப்பூக்களின் / வலைப்பூவினரின் அறிமுகத்தால் தான் இவரைப் பற்றி தெரியவந்தது, இல்லையெனில் வழக்கம் போல ஏதாவது காமா, சோமா என்று வாங்கி வைத்திருப்பேன். நோட் பண்ணுங்க வாங்கி வைத்திருப்பேன், அவ்ளோதான்.

முன்னும், பின்னும் எந்தவொரு நவீனத்துவமும் இல்லாமல், யதார்த்தமாய் நெஞ்சை அள்ளி செல்கிறது இவரின் எழுத்துக்கள். இவரின் கதை மாந்தர்கள் அனைவரும் கிராமத்தின் கடைகோடி மாந்தர்களே.
விருத்தாசலமும், அதையொட்டிய கிராமங்களும், முந்திரிக்காடுகளும் இவையே கதைக்களங்கள். படிப்பவருக்கு புரிந்து கொள்ளுதலில் எந்தவொரு சிரமமும் கொடுக்காத எழுத்து நடை. பேச்சு நடையிலேயே இவரின் எழுத்து நடை இருப்பதுதான் சிறப்பு.

இவரின் கதைகளின் வட்டார எழுத்து நடையை படிக்கும் போது, பல சமயங்களில் எங்கம்மா பயன்படுத்தும் சில, பல வார்த்தை வழக்குகள் ஞாபகம் வந்து போனது.

இவரின் கதைகளை படிக்கும் போது, அப்படியே கிராமத்து போய் வந்த அல்லது போகத்தூண்டும் உணர்வு எழாமல் இருக்காது. இது என் அனுபவம், அவரைப் படித்தவர்கள் சொல்லலாம்.

இவரின் சிறுகதையில் எனக்கு நிறைய கதைகள் பிடித்திருந்த போதும், சருவு என்ற கதைதான் அடிக்கடி நினைவுக்கு வரும். கலியன் என்றொரு தாத்தா, வெற்றிலை போட்டே பழக்கப்பட்டவர். ஒரு நாள், ஒரு வாய் வெற்றிலைக்கு அவர் படும் பாடே, அந்தச் சிறுகதை, படித்து முடித்த போது, எனக்கு கலியன் தாத்தாவுக்கு உடனே வெற்றிலை வாங்கி தரனும் என்று தோன்றியது நிஜம்.
என் அம்மா, வெற்றிலை போடுவதை அடிக்கடி சொல்லி திட்டுவேன். அதுவும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது.

அதே போல், வனாந்திரம் என்னும் மற்றொரு சிறுகதை, படித்தவுடன் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அன்பு கணவனை இழந்த மனைவி, மகன். முந்திரிக்கொட்டைகளை பொறுக்கி அதை விற்று வரும் ஜீவனம். மகன் என்ற கதாபாத்திரத்தின் பெயர் ராசீவ் காந்தி. எங்க ராசீவ் காந்தி வரலியாடா பள்ளிக்கோடத்துல இருந்து, என்று சக பள்ளிப்பிள்ளைகளை கேட்கும் போது, சிரிப்பு வருகிறது. ஆனால் முடிவு அதை மறக்கச் செய்து விடுகிறது. தாயும், பள்ளி விட்டு வந்த மகனும் முந்திரிக்கொட்டை சேகரிக்க செல்கிறார்கள். ஆனால் அன்று மகன் சொல்கிறான். இன்று சேகரிக்கும் முந்திரிகளை நீ விற்கக் கூடாது, எனக்கு உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பொரியல் செய்து தரவேண்டுமென்கிறான். சரி என்ற ஒப்புதலோடு சென்று, நிறைய சேகரித்து வருகிறார்கள். தாய்க்கோ மனது அடித்து கொள்கிறது, இதை விற்றால் இவ்வளவு காசு கிடைக்குமே என்று, மெதுவாய் மகனிடம் சொல்கிறாள், அவன் எரிச்சலோடு முகம் காட்டுகிறான், இதற்குத்தான் நான் வரமாட்டேன் என்றேன் என்று. சரி என்று மகன் விருப்பத்திற்கிணங்க அன்று கிடைத்த அத்தனை முந்திரிகளையும் பொரியல் செய்து, ரசம் வைத்து அவனை சாப்பிட கூப்பிடுகிறாள். அவனும் சாப்பிட்டு விட்டு, போதுமென சொல்லி பாதி முந்திரிப்பருப்பை அப்படியே வைத்துவிடுகிறான். பிறகு தாயை சாப்பிட சொல்கிறான். தாயோ ரசமும், ரசத்திலிருக்கும் மிளகாயை கடித்துக்கொண்டு சாப்பிடுகிறாள். இதைக்கண்ட மகன், ஏம்மா, அவ்ளோ இருக்கே, ரசத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடேன் என்கிறான். அவள் வேகமாக மறுக்கிறாள். மகனோ அழும் குரலில், உனக்காகத்தாம்மா இவ்ளோ கொட்டையும் விக்க சொல்லாம, வறுக்க சொன்னேன், இத்தனை நாள் எடுத்த கொட்டையெல்லாம் எனக்கு வெறுமே சாப்பிட கொடுப்ப, மீதிய வித்துடுவ. ஒரு நா கூட நீ ஒரு முந்திரிக்கொட்டய எடுத்து வாயில போட்டதில்ல, அதுக்குத்தாம்மா செய்ய சொன்னேன், சாப்பிடும்மா என்கிறான். அதற்கு அவளோ, இல்லப்பா, நானெல்லாம் அதுக்கு ஆசைப்படக்கூடாது, அப்பா போனவுடனயே அதயெல்லாம் விட்டுட்டேன், அப்படி அந்த சுவைக்கு ஆசைப்பட்டு ஒன்ன எடுத்து வாயில போடுவேன், அப்புறம் நாளைக்கும் அதயே வாய் கேட்கும். அப்படியே பழகும். நாம்ப இருக்குற நெலமையில நாக்கு ருசிக்கு ஆசைப்பட்டா ஒத்துவராதுப்பா, பச்சத்தண்ணிய குடிச்சா கூட, வவுறு ரொம்புதான்னு பாத்துக்கனும்பா என்கிறாள்.

இந்தக் கதையை படித்து முடித்தவுடன் ரொம்ப நேரம் எதுவுமே தோன்றாமல் அப்படியே வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் கதையின் தாக்கமே இந்தப் பதிவெழுதவும் தூண்டியது.

மேற்சொன்னது ஒரு பானை சோற்றின் பதமே. கண்மணி குணசேகரனின் எழுத்துக்கள் மேலும் பரிணமிக்கட்டும். மேலும் அவரின் புது நாவல்கள் / சிறுகதைத் தொகுப்புகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிரவும்.

16 comments:

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி அமித்து அம்மா! நானும் வாங்க முயற்சி செய்றேன்!

//பள்ளிக்கோடத்துல இருந்து, என்று சக பள்ளிப்பிள்ளைகளை கேட்கும் போது, சிரிப்பு வருகிறது. ஆனால் முடிவு அதை மறக்கச் செய்து விடுகிறது.//

:) :(

ச.முத்துவேல் said...

ரசித்துப் படித்தேன் பதிவை. அஞ்சலை இப்போது தீர்ந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.(அரசு நூலகங்களில் கிடைக்கிறது) மறுபதிப்பு வந்தால்தான்.கண்மணி சொன்னார்.
உயிர்த் தண்ணீர் நானும் வாங்கி ”வைத்திருக்கிறேன்”.உங்கள் பதிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. நல்லா உணர்வுபூரவமா எழுதியிருக்கீங்க.இவை தவிர
கோரை என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். நானும் படிக்கவில்லை.ஒட்டு மொத்தமாக ஒரு கவிதைத்தொகுப்பு இருக்கிறது.தமிழினியில் இவரின் நூல்கள் கிடைக்கும்.

anujanya said...

வேலன் முன்னரே கண்மணி குணசேகரன் பற்றி சொல்லியிருக்கிறார். நீங்கள் வனாந்திரம் கதையை விவரித்ததிலேயே மனம் கனக்கிறது. கதையில் எப்படி வருகிறதோ. நீங்கள் சொன்ன விதத்தில் பூடகமாய் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

புத்தக விமர்சனம் சற்று நீளமாக எழுதி உங்கள் வலையில் பதிவிடுவதோடு, வேலன் வைத்திருக்கும் இன்னொரு வலைப்பூவிலும் (நூல் நயம்) இணைக்கலாமே நீங்கள்.

நல்ல பதிவு. வாழ்த்துகள் சகோ.

அனுஜன்யா

ராம்.CM said...

நல்லா உணர்வுபூரவமா எழுதியிருக்கீங்க...

நல்ல பதிவு. வாழ்த்துகள்

அகநாழிகை said...

நல்ல பதிவு. உங்கள் வழக்கமான இடுகைகளிலிருந்து வித்தியாசமாய் இருந்தது. வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
- பொன்.வாசுதேவன்

நட்புடன் ஜமால் said...

உயிர்(த்)தண்ணீர் பேரே ரொம்ப அழகாயிருக்கு.

அவசியம் படிக்கனும்.

முன்னும், பின்னும் எந்தவொரு நவீனத்துவமும் இல்லாமல்\\

ஓஹ்! முன் நவீனத்துவம் வேறு இருக்கா.

கடைகோடி மாந்தர்களிடம் தான் நிறைய கற்று கொள்ள இயலும்.

வணாந்திரம் படித்த ஞாபகமாயிருக்கு.

தாயின் மீது உள்ள பாசம் உறுக்கமாக உள்ளது.

நல்ல விதமான அறிமுகம்.

அமுதா said...

நல்ல பதிவு அமித்து அம்மா. நீங்க சொன்னதில் இருந்து நானும் வாங்க எண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்த பதிவு இன்னும் தூண்டுது. வாங்கிப் படிக்கிறேன்.

SK said...

நல்லா அனுபவச்சி படிச்சு இருக்கீங்க. எழுதியும் இருக்கீங்க.

Thamira said...

இல்லையெனில் வழக்கம் போல ஏதாவது காமா, சோமா என்று வாங்கி வைத்திருப்பேன். நோட் பண்ணுங்க வாங்கி வைத்திருப்பேன், அவ்ளோதான்.//

முன்னும், பின்னும் எந்தவொரு நவீனத்துவமும் இல்லாமல், யதார்த்தமாய் நெஞ்சை அள்ளி செல்கிறது//

கலக்குறீங்க.. ரசித்தேன்.

'வனாந்திரம்' மனதைத்தொட்டது..

RAMYA said...

நல்ல பதிவு நீங்கள் கூறி இருக்கும் புத்தகம் )அஞ்சலை) எங்கு கிடைத்தாலும் நான் வாங்குகின்றேன்.

ஆனால் கிடைப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. இந்த (அஞ்சலை) புத்தகத்தை நானும் பல முறை பல இடங்களில் தேடி ஏமாந்துதான் மிச்சம்.

பார்க்கலாம். படிக்க படிக்க மனம் கனத்து விட்டது தோழி.

Unknown said...

அருமையான பதிவு அமித்து அம்மா. நல்ல நூல் அறிமுகங்கள்்தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

நல்லதொரு பகிர்வு அமித்து அம்மா..

"உழவன்" "Uzhavan" said...

தினத்தந்தி, தினமலர், குமுதம், ஆனந்தவிகடன்... இதத் தவிர வேற எந்த புத்தகங்களையும் பெருசா நான் ஒன்னும் படிச்சதில்லை. இந்த பதிவைப் படிக்கும்போது, எனக்கும் படிக்கவேண்டும் என்கிற எண்னம் ஏற்படுகிறது.
பகிர்வுக்கு நன்றி.

narsim said...

தேர்ந்த வார்த்தைகள்.. நல்ல அறிமுகப் பதிவு.

Deepa said...

நல்லதொரு நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி அமித்து அம்மா.

soorya said...

நல்ல பதிவு தோழி.
தங்கள் மொழிநடை நன்றாக இருக்கிறது.தங்கள்
பதிவுகள் எல்லாம் வாசிப்பேன், ஆனால் பின்னூட்டமிடுவதில்லை. குறைவிளங்க மாட்டீர்களே...!