26 March 2009

தெருக்கூத்து

சிறிது நாட்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் தெருக்கூத்தை காட்டினார்கள். ஆச்சரியமாக இருந்தது. இரவு 11 மணிக்கு மேல் டி.வி.யில் பார்த்ததால் தெருக்கூத்தை நேரில் பார்த்த எஃபெக்ட் வரலைன்னாலும் பார்த்துக்கிட்டிருந்தோம் நானும், அவரும். அதைத் தொடர்ந்து நானும் அவரும் தெருக்கூத்து, பாரதம் பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்தே போனோம். ஆனால் எனக்கு தெருக்கூத்தை ஒட்டிய நினைவுகள் அவ்வப்போது எழாமலில்லை, அதன் தொடர்ச்சியே இது.

என்னைப் பொறுத்த வரையில் இந்த மானாட, மயிலாட, கோலாட, குரங்காட போன்ற ஆட்டங்களுக்கு, இந்த தெருக்கூத்துகள் ஆயிரம் முறை தேவலாம். இதில் ஆடுபவர்களை விட, நடுவர்களாக இருப்பவர்கள் போடும் வேஷங்கள் தெருக்கூத்துக்காரர்களையே மிஞ்சி விடுகிறது.

எங்க ஊரில் (செஞ்சி பக்கம்) பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது தெருக்கூத்து நடக்கும், அப்புறம் யாராவது இறந்து விட்டார்களானால் அப்போது காரியத்தின் முன்நாள் இரவன்று கர்ண மோட்சம் கூத்து வைப்பார்கள். கூத்து பார்ப்பதை விட, அதைப் பார்ப்பதற்காக இடம் போட்டு வைப்பதுதான் பெரிய கூத்தே. கூத்து நடக்கும் மேடைக்கு முன்னாடி, ரொம்ப வெளிச்சமும் படாமல், முன்னால் அமர்ந்திருக்கும் ஆட்களின் தலையும் மறைக்காமல் என, இடத்தை சரியாக பிடிப்பதற்கு பெரிய போட்டியே நடக்கும். நாங்கள் தேருக்கும், திருவிழாவிற்கும் மட்டும் தான் ஊர் பக்கம் போவதாகையால், நமக்கு முன்னாடியே இடம் போட்டு வைத்திருப்பார்கள் இரண்டு அத்தைகளும்.

முருகரின் கல்யாணம் பார்த்துவிட்டு, மொய் எழுதிவிட்டு அப்படியே நம்ம மக்கள் கடை போட்டிருக்கும் இடத்தில் போய் உட்கார்ந்த்து முறுக்கு, ஸ்வீட், பொரி, டீ என அள்ளிவிட்டுட்டு அப்படியே கூத்து பார்க்க போய் உட்கார்ந்தோம்னா கண்ணக்கட்டும் தூக்கம். அவ்வ்வ்வ்வ்வ் - இது கொட்டாவி.
இதுக்கு நடுவில எம் பாயில் உக்காராதே, காலை நீட்டாதே மேலப் படுது, அப்படின்னு அங்க இங்க சத்தம் வந்துக்கிட்டுருக்கும். எல்லாம் இடம் பிடித்த மக்கள் கிட்டருந்து வர்றதுதான். நாளை காலை கூத்து முடியும் வரை அவங்க பட்டா போட்ட இடமாச்சே அது, மறுக்க முடியுமா, ம்ஹூம்ம்.

நமக்கு பஸ்ஸில் வந்த அலுப்பு, பலகாரத்த தின்னதுன்னு தூக்கம் கண்ண கட்டும், அத்த, மடிய இப்படி வைய்யி, நான் படுக்கப்போறேன் அப்படின்னு ஆரம்பிப்போம், இரும்மா, பப்பூன்னு வந்துடுவான், செத்த பாத்துட்டு தூங்குவ, தூங்கறதுக்கா, இம்மா மின்னாடி பாய போட்டு வெச்சேன் என்று சொல்வார்கள்.
சரி என்று உட்கார்ந்தால், வந்தேனே, நான் வந்தேனே என்று இன்னதுதான் கலர் என்று இல்லாமல் இருக்கும் ஒரு ட்ரஸ்ஸை போட்டுக்கொண்டு, ரோஸ் பவுடரை அப்போ அப்புன்னு அப்பிக்கிட்டு ஒருவர் வருவார். டபுள் மீனிங்க் டயலாக்கும், டேன்ஸும், பாட்டும் என எல்லாரையும் கொஞ்ச நேரம் சிரிக்கவைப்பார். அடிக்கடி ராஜா மாதிரி இருக்கும் ஒருவரிடம் சவுக்கடியும், எட்டி எட்டி உதையும் வாங்குவார். நமக்கு தூக்க கலக்கம் நடு நடுவே தூங்கி விட்டு, இடையில் கொஞ்சம் சத்தம் ஜாஸ்தியாக இருக்கும்போது மட்டும் லேசாக கண்ணைத் திறந்து பார்ப்பேன். மங்கலான லைட் வெளிச்சத்தில் பாவாடை, தாவணி போட்டுக்கொண்டு, இடுப்பு வரைக்கும் கனகாம்பரம், மல்லி யெல்லாம் வைத்துக்கொண்டு ஒய்யார நடையும், அப்போதைய ப்ரபலமான டூயட் பாட்டு எதையாவது உல்டா செய்தோ இல்லை அப்படியே பாடிக்கொண்டிருப்பார். பார்ப்பதற்கு அப்படியே பெண் மாதிரி இருக்கும், எத்தனையோ முறை சந்தேகம் தாளாமல் அம்மாவிடம், அத்தையிடமும் நான் கேட்டு இருக்கிறேன். அத்த, இவங்க நம்மூரா. எந்தத் தெருவுல இருக்காங்க, என்றெல்லாம். அதுக்கு அத்த, ஆம்பளைங்கதான், பொம்பள வேசங்கட்டி கூத்தாடுறாங்க. வெளியூர்ல இருந்து கூத்தாடுறததுக்கா ஒபயக்காரவுங்க கூட்டியாந்துருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.

இந்தப் பெண் வேசம் கட்டுபவர்கள் எப்படித்தான் உடை மாற்றுவார்களோ என்று தெரியாது, ஜிகு ஜிகு வென்று இருக்கும் பாவாடை, ரவிக்கையுடன், புடவை, தாவணி அடிக்கடி மாற்றிக்கொண்டு வருவார்கள். பின்னாடி இருக்கும் கொட்டாயில தான் துணி மாத்துவாங்களாம். நிறைய சின்னப் பசங்க, பெரிய பசங்க கூட கொட்டா சந்துவழியா பாத்துக்கிட்டிருக்கும். யாராவது வந்து வெரட்டுவாங்க. ராஜா வேஷங்கட்டுபவர் போட்டிருக்கும் உடையை நினைத்தால் எனக்கு இப்பவும் சிரிப்புவரும். இடுப்புக்கு கீழே கூடைய கவுத்தா மாதிரி, ஃபிரில் வெச்சு (நெறைய துண்டு துணிகளை கொசுவி) பஃப் பென்று வைத்திருப்பார்கள். அட்டை கீரிடமும், கத்தியும், முகமெல்லாம் சிவப்பு அல்லது நீல வர்ணமாக அந்த உடையுமாக அணிந்து கொண்டு அவர் வந்தால் பயமாக இருக்கும் அப்போது எனக்கு.

என் மாமாவின் அப்பா இது போன்று வேஷங்கட்டுவார், பாட்டியின் சாவின் போது வைத்த “கர்ண மோட்சம்” கூத்தில் பெரிய மாமாதான் கர்ண வேஷம் போட்டார். நேரிலேயே ஆஜானுபாகுவாக இருக்கும் அவர், அந்த உடையை போட்டவுடன் கன, கம்பீரமாக இருந்தார். இரவு வரைக்கும் கூட நம் பார்த்தோமே, பின் எப்போது இது மாதிரி வேஷங்கட்டி கொண்டார் என்பது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். காலை அவர் முகச்சாயத்தை மண்ணெண்யெய் ஊத்தி கழுவும் வரைக்கும் அவர் பின்னாடியே சுத்திக்கொண்டிருந்தேன். அதே போல் இரவில் கூத்தாடுபவர்கள் மறுநாள் காலையில் டீக்கடையிலோ இல்லை வீட்டிற்கு சாப்பிடவோ வருவார்கள். மழுமழுவென்று கன்னத்தோடு, நெறைய முடியை அப்படியே கொண்டையாக முடிந்திருப்பார்கள். அவர்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும், இரவு இவர் என்ன வேஷம் கட்டியிருப்பார் என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். அதுவும் பெண் வேடம் கட்டியிருப்பவர் யார் என்று ஆராய்ச்சி வேறு.

அடுத்தாப்பல, பரசு அண்ணன், மாமாவின் பள்ளிக்கால தோழர். ஊரிலிருக்கும் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் அவர்தான் குடியிருந்தார். சினேகிதக்காரர் என்பதால் வாடகையெல்லாம் ஏதுமில்லை. அம்மாதான் அடிக்கடி ஏதாவது முணுமுணுத்துக்கொண்டிருப்பார்கள் அவரைப் பற்றி. குள்ளமாக, கருப்பாக, ஆனால் நல்ல குரல் வளத்துடன் இருப்பார் பரசு அண்ணா, காமெடியாக பேசுவதில் ஆள் பயங்கர கில்லாடி. அவரும் வேஷங்கட்டுவார் திருவிழாவின் கடைசி நாள் ஊரில் இருக்கும் ஆட்கள் (இதற்கென்றே ஒரு செட் இருக்கும் போல) இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்டம் வைப்பார்கள். கூத்து மாதிரிதான் இருக்கும், ஆனால் கர்ண மோட்சம், வாலி மோட்சம் இன்ன பிறவெல்லாம் இல்லை. ஏதாவது புரட்சிகர கருத்துக்கள் கொண்ட நாடகபாணியில் இருக்கும். கதை, திரைக்கதை, வசனமெல்லாம் மாமாவின் இன்னொரு சினேகிதர் சுப்பிரமணி.

பரசு அண்ணாவிற்கு கட்டாயம் ஏதாவது வேஷம் இருக்கும். ஊர் ஊராக போய் கூத்து கட்டும் ஆட்கள் என்றால் துணிகள் எல்லாம் செட்டாக வைத்திருப்பார்கள். புதுசு எல்லாம், இல்லை கந்தல் தான். அதை அவர்கள் நேர்த்தியாக் உடுத்தி பேசி ஆடும் விதம்தான் ஆளை அசத்தும்.

அதுவும் பரசு அண்ணா உயரத்திற்கு தோதாக உடை வேண்டுமென்றால், 7, 8 வது படிக்கும் பெண் பிள்ளைகளின் உடைகள்தான் தோதாக இருக்கும். அவர் எங்களிடம் உடை கேட்கும் பாணியே அலாதிதான்.
முதலில் ஏய் அத்தைக்காரி (எங்க அத்தையை) ஏதாவது பொடவை இருந்தா குடேண்டி, வேஷங்கட்டறதுக்கு. அதுக்கு அத்தை, ஏண்டா, உம் பொண்டாட்டிய போய் கேளு, அவதான் பொட்டி ஃபுல்லா வெச்சிருக்காளே. த்தே, அது எல்லாம் ரேஷங்கடை பொடவைடி. ஒம் மருமவ தான் ஒனக்கு சிகினா பொடவையெல்லாம் எடுத்து குடுத்துகிதே, அதுல ரெண்டு குடேன். அக்காங்க், அதையெத்து ஒன்கிட்ட குடுத்துடறேன், நீ அதுல சாயம் பூசி எத்தா. ஏன் நல்லது பொல்லதுக்கு ஒன்னு புச்சா கட்றேன்னு ஒங் கண்ண உறுத்துதா.
நடுவில் என் மாமா, ம்மா, அவந்தான் கேக்கறானே , குடேம்மா. அப்புறம் கமலாகிட்ட இருந்து வாங்கிப்ப. அடப் போடா இவன் ஒருத்தன், அவனுக்கு தோதா... என்பார்கள்.

அப்புறம் எங்களிடம் வருவார், (என்னிடம், மாமா மகளிடம்), ஏம்மா, நீங்க சுடிதார், அது இதுன்னு வெச்சிருந்தா குடுங்களேன். புதுசா ஒரு கூலிங்க்ளாசு வேற வாங்கிவெச்சிருக்கேன். உங்க ட்ரஸ்ஸையும் போட்டுக்கிட்டு அதையும் போட்டுகிட்டா நல்லா இருக்கும் இல்ல என்பார். அப்புறம் நாளைக்கு யாராவது கேட்டா இது லதா ட்ரஸ்ஸூ, யசோ ட்ரஸ்ஸூன்னு சொல்லலாமில்ல என்பார். என் மாமா மகளின் ஆடைகள்தான் அவருக்கு சரியாக பொருந்தும், இருவரும் ஒரே உயரம். ஒரு முறை அவளின் மிடியை போட்டு இவர் மேடையில் ஆட ஏகப்பட்ட அப்ளாஸாம். அந்த வருடம் நான் பத்தாவது பரிட்சையாகையால் போகமுடியாமல் போய்விட்டது.

இதோ வந்துவிட்டது, பங்குனி உத்திரப்பெருவிழாவும், ஊரிலிருந்து அழைப்பும். பசுமலை முருகனும், பரசுவும் இன்னபிறரும் இருக்கிறோம். கை பிடித்துக் கூட்டிப்போக மாமா நீயில்லையே. போக நேரிட்டாலும் அங்கு நீ இல்லாத வெறுமையை எதைக்கொண்டு தீர்ப்பது. நீ அமர்ந்து சிரித்த கல்லும், பேசிய வீட்டுத்திண்ணையையும் உன்னை ஞாபகப்படுத்துமே.

தெருக்கூத்து பதிவெழுத ஆரம்பித்து, கடைசியில் நினைவுகளில் நீராடிவிட்டேன். மறக்கமுடியவில்லை மாமா உன்னை. உன் நீங்கா நினைவுகளோடு மேற்கொண்டு எழுதமுடியாமலேயே இந்தப் பதிவை முடிக்கிறேன்.

27 comments:

நட்புடன் ஜமால் said...

\\மறக்கமுடியவில்லை மாமா உன்னை\\

:(

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாங்க முதல்...........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//என்னைப் பொறுத்த வரையில் இந்த மானாட, மயிலாட, கோலாட, குரங்காட போன்ற ஆட்டங்களுக்கு, இந்த தெருக்கூத்துகள் ஆயிரம் முறை தேவலாம். //


கோடிமுறை.. பொதுவாகவே..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இதில் ஆடுபவர்களை விட, நடுவர்களாக இருப்பவர்கள் போடும் வேஷங்கள் தெருக்கூத்துக்காரர்களையே மிஞ்சி விடுகிறது.//


தெருக்கூத்துக்காரர்கள் மரியாதையான உடைதான் அணிவார்கள்

நட்புடன் ஜமால் said...

தெருக்கூத்து :

இது தரும் ஞாபகங்கள் எனக்கும் நிறைய வருகிறது

கடைசி பத்தியில் உள்ள விடயம்

என்னை ஏதுமற்றதாக ஆக்கிவிட்டது.

narsim said...

//என்னைப் பொறுத்த வரையில் இந்த மானாட, மயிலாட, கோலாட, குரங்காட போன்ற ஆட்டங்களுக்கு, இந்த தெருக்கூத்துகள் ஆயிரம் முறை தேவலாம்//

//இரும்மா, பப்பூன்னு வந்துடுவான், செத்த பாத்துட்டு தூங்குவ, தூங்கறதுக்கா, இம்மா மின்னாடி பாய போட்டு வெச்சேன் என்று சொல்வார்கள்.
சரி என்று உட்கார்ந்தால், வந்தேனே, நான் வந்தேனே என்று இன்னதுதான் கலர் என்று இல்லாமல் இருக்கும் //

கலக்கல் நடையில் நல்ல பதிவு.

குடந்தை அன்புமணி said...

தாங்களின் நினைவலைகளில் நாங்களும் நீந்தி வந்தோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜமால்

இல்லீங்களே சுரேஷ், உங்களுக்கு முன்னாடி ஒருவர் இருக்காரே.

நான் உடையை குறிப்பிடவில்லை திரு. சுரேஷ், அவர்கள் அழுவதும், மேடைக்கு வந்து முத்தமிடுவதும், போவென் என்று சொல்லி, நாலு பேர் கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமரவைப்பதும்.

இது மாதிரியான மேடையிலேயே கலைக்கப்படும் வேஷங்களையே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியா ஜமால், ஞாபகங்களை நீங்களும் பதிவிடலாமே.

ரசிப்புக்கு நன்றி நர்சிம்..... சார்.

நன்றி குடந்தையாரே.

அபி அப்பா said...

வாவ் பென்டாஸ்டிக்! நல்ல அழகா தெளிவா சொல்ல வேண்டிய விஷயத்தை அழகுபட, கலகலன்னும் அத்தோட கொஞ்சம் நெகிழ்வாகவும் பரசு அண்ணண் டிரஸ் கேட்டு கெஞ்சும் போது பாவமாகவும், மாமா இப்போது இல்லை என்கிற போது அழுகையாகவும் நவ ரசத்தோட ஒரு அருமையான பதிவு இது உங்களுக்கு!! வாழ்த்துக்கள்!!! நல்லா தொடர்ந்து எழுதுங்க!!

புதியவன் said...

நான் கிராமத்தில் வளர்ந்ததில்லை ஆதலால்...இது போன்ற தெருக்கூத்துகளை பார்க்கும் வாய்ப்பை இழந்திருக்கிறேன்...உங்கள் பதிவை படிக்கும் போது தெருக்கூத்து பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது...

கடைசி பத்தியை படிக்கும் போது ஒரு வித வெறுமையை உணர முடிகிறது...

"உழவன்" "Uzhavan" said...

எனக்கு மட்டுமல்ல; நம்மைப் போன்று சிறிய ஊர்களிலிருந்து நகரம் வந்தவர்கள் எல்லோருக்குமே இதைப் படிக்கும்போது பழைய நினைவுகள் நம் மனதில் பாய்போட்டு அமரத்தான் செய்யும். இதே கூத்து போல், எங்கள் கிராமத்தில் புராண நாடகங்கள் நடைபெறும். அரிச்சந்திர மயாண கண்டம், வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, வீரபாண்டிய கட்டபொம்மன்... இப்படி நிறைய. இன்றும் என் கிராமத்தில் ஒவ்வொரு ஆடிமாத கடைசி செவ்வாயில் நடைபெறும் காளியம்மன் கோவில் பொங்கள் திருவிழாவில், ஒருநாள் மட்டும் இதுபோன்ற புராண நாடகம் நடைபெறும். நீங்கள் சொன்னது போல், அங்கும் இடம் பிடிக்க பாய், தலையணையோடு பெண்கள் வருவார்கள். :-)
நான் ஒருநாளூம் முழுமையாக ஒரு நாடகத்தையும் பார்த்ததில்லை. நாடகத்தின் ஆரம்பத்தில் வரும் பபூன் மற்றும் பபூனி யின் காமடிகளை (டபுள்மீன்ஸ் கண்டிப்பாக இருக்கும்) மட்டும் பார்த்துவிட்டு, தூங்க சென்றுவிடுவதுண்டு. இவர்களின் வேடிக்கையான பெயர்களைச் சொல்கிறேன்; கேளுங்கள். பபூனின் பெயர் பஸ்ஸப்பன்; பபூனியின் பெயர் டீசலம்மா. ரெண்டும் சேர்ந்து இருந்தாதான் ரெண்டுமே பயன்படுமாம். இது அவர்கள் ஒருமுறை சொன்ன வசனம். :-)

இது பின்னூட்டமாதலால் இதோடு முடிக்கிறேன். என் பழைய நினைவுகளை புரட்டிப்பார்க்க உதவிய இப்பதிவிற்கு நன்றிகள். ஆனால், பதிவின் இறுதியில் ஒரு பீலிங்ஸ்ஸ குடுத்திட்டீங்க :-(

தமிழ்நதி said...

இந்த மானாட மயிலாட குயிலாட குரங்காட எனக்கும் பிடிப்பதில்லை. எப்போது தொலைக்காட்சியைப் போட்டாலும் யாராவது ஒருவர் 'ஜிங்கிச்சா'என்று ஆடிக்கொண்டிருப்பார்கள். இதனால் ஏதாவது பிரயோசனம் உண்டா? இத்தனை அறியாமையும் ஏழ்மையும் இருக்கும் நாட்டில் இவ்வகையான நிகழ்ச்சிகளின் தேவைதான் என்ன? அரசியல்வாதிகள் அரசியலில்தான் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்களது கைகளில் இருக்கும் ஊடகங்கள் வழியாகவும் அந்தத் தொண்டைத்தானே செய்கிறார்கள். சொல்லக்கூடாது சொல்லக்கூடாது என்றால் வாயைவைத்துக்கொண்டு சும்மாவும் இருக்கமுடியவில்லை அமித்து அம்மா:)

ஆயில்யன் said...

விடுமுறையில் ஒரு நாள் இது போன்றதொரு நிகழ்ச்சியினை நானும் கண்டேன்! ஆர்வம் கொண்டு நாம் ஊக்குவிக்கவேண்டிய கிராம கலைகள் பார்க்க மனிதர்கள் அவ்வளவாக இன்றி ஆனாலும் கூத்து கட்டி ஆடுபவர்களின் உற்சாகம் குறைவில்லாமல் நடைப்பெற்றது ! அது பற்றிய உங்களின் நினைவு குறிப்புக்கள் அருமை.ஊர் பேச்சு வழக்கும் அசத்தல்!


மாமாவின் மீதான தங்களின் பாசத்தின் வெளிப்பாட்டினை உணரமுடிகிறது !

மாதேவி said...

கூத்து பதிவு நன்று.எங்கள் கிராமத்தில் ஓரிருதடவை பார்த்திருக்கின்றேன்.

அப்துல்மாலிக் said...

தெருக்கூத்து
இது கிராம சிருவர்களின் நடனமேடை
நேரில் கண்டுகளிக்கும் இன்பம்
என்றைக்குமே மறக்காது

நசரேயன் said...

அருமை.. நல்ல மலரும் நினைவுகள், அப்படியே எங்க ஊரு திருவிழா பார்த்த ஞாபகம்

ச.முத்துவேல் said...

அட செஞ்சிப் பக்கமா!?

இயல்பான மனிதர்களின், இயல்பானப் பேச்சை, நீங்களும் எவ்வித பாசாங்கும் இன்றி, இயல்பாகப் பதிவிட்டிருப்பதற்கு
பாராட்டுகள்.சின்ன வயதில்(6, 7 படிக்கும்போது),அம்மாவோட கிராமத்துக்குப் போயிருந்தப்ப பாத்த தெருக்கூத்து ஞாபகம் வந்தது.
/ராஜா வேஷங்கட்டுபவர் போட்டிருக்கும் உடையை நினைத்தால் எனக்கு இப்பவும் சிரிப்புவரும். இடுப்புக்கு கீழே கூடைய கவுத்தா மாதிரி, ஃபிரில் வெச்சு (நெறைய துண்டு துணிகளை கொசுவி) பஃப் பென்று வைத்திருப்பார்கள்./
இதுபோல் நிறைய சுவாரசியம்..

Unknown said...

தேன் அருவியாய் ஆரம்பித்து கண்ணீர் அருவியில் சேர்த்து வைத்து மனசை கனக்க வச்சுட்டீங்க அமித்து அம்மா.; நல்ல பதிவு, உங்கள் எழுத்து நடை தெருக்கூத்தை கண்முன் நிகழ்த்திக் காட்டியது.

\\மறக்கமுடியவில்லை மாமா உன்னை\\

:(

சந்தனமுல்லை said...

அமித்து அம்மா..நல்ல பதிவு..வட்டார வழக்கு நடை..கலக்கலா இருக்கு!! கண்முன்னாடி தெருக்கூத்தையும், அவங்க நடைஉடையும் நிறுத்திட்டீங்க!
சூப்பர்! :-)

சந்தனமுல்லை said...

வடலூர்லே பூசம்தான் ஃபேமஸ்..ஆனா அங்கே இபப்டி நடக்குமான்னு தெரியலை! போனதும் இல்லை! ஹ்ம்ம்ம்! கடைசிலே மனசை பிழிஞ்சுட்டீங்க! :(

தமிழ் அமுதன் said...

படிக்க படிக்க திகட்டாத எழுத்து நடை!
நாங்களும் சின்ன வயசுல பவளக்கொடி,வள்ளி திருமணம்,அரிச்சந்திரன்
நாடகமெல்லாம் பார்த்து இருக்கோம்! நாடகம் முடிஞ்சு வெட்ட வெளிலையே
தூங்கி காலைல வீட்டுக்கு வந்த கதை எல்லாம் உண்டு!!

ராம்.CM said...

கலக்கல் நடையில் நல்ல பதிவு.

SK said...

நிறைய நினைவை கேலப்பிடீங்க.. ம்ம்ம்

நல்லதொரு பதிவு.

Poornima Saravana kumar said...

பழைய நினைவுகள் கண்ணிலே!

அமுதா said...

அருமையான பதிவு. ம்... இந்த வருஷம் நானும் எங்க ஊர் திருவிழாவுக்குப் குட்டீஸைக் கூட்டிட்டு போகலாம்னு ப்ளான் போட்டேன்... பங்குனி திருவிழா டைம்ல குட்டீஸ் பரீட்சை. இனி, சித்திரை திருவிழாவிற்கு போக முடியுதானு பார்க்கணும்...

cheena (சீனா) said...

அன்பின் அமித்து அம்மா

அருமையான கொசுவத்தி சுத்தி அசை போட்டு ரசிச்சு மலரும் நினைவுகளை அப்படியே எழுதி இருப்பதற்கு பாராட்டுகள் - ரசித்தேன் - இயல்பான நடை

நல்வாழ்த்துகள்