06 March 2009

உறங்காத இரவுகள்

சரியாக, பத்தாவதின் பாதியில் தான் அது என்னை பாதித்தது. தூக்கம் இல்லை, பசி இருக்கும் உணவு உள்ளிறங்காது. படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் இப்படியே வரிசையாக அடுக்கலாம்.தூக்கமில்லாமல் நட்சத்திரங்களை எண்ணி, எண்ணி, கண் சிமிட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கே நான் கண் வைத்தது வலித்திருக்கும். இப்படியாய் தொடர்ந்தே வந்து பனிரெண்டாம் வகுப்பின் போது உச்ச கட்டத்தை அடைந்தது. எனது இந்த நிலை குறித்து அம்மா ரொம்பவும் விசனப்பட்டார்கள்.இப்படியிரு, அப்படியிரு என்று ஏகப்பட்ட அட்வைஸ்கள். அதன் பாதிப்பின் வலி இங்கே அனேகம் பேருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆம், நான் பாதித்தது வீசிங்க் என்று பரவலாக அறியப்படும் மூச்சிரைப்பினால். வார்த்தைகளால் வடிக்க முடியாத நாட்கள் அவை. தூசி என்று எழுதி அதைப் படித்தால் கூட தும்மல் வந்துவிடும். அந்த அளவுக்கு அலர்ஜி.

திண்ணையில் படுத்துக்கொண்டே நட்சத்திரங்களை எண்ணி, நிலாவோடு பேசிய வலி மிகுந்த நாட்கள், என்றும் மறக்க முடியாது. எத்தனையோ மருத்துவர்கள், விதவிதமான மருத்துவங்கள். ஒன்றுக்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஆசையாக ஐஸ்க்ரீம் கூட சாப்பிட முடியாது.பனிரெண்டாம் வகுப்பின் முக்காவாசி நாட்கள் கண்சொருகி, மேசை மேலேயே தலை கவிழ்ந்த நாட்களே அதிகம். +2 வில் என் வகுப்புத் தோழிகள் வீசிங்க் என்று சொல்வார்கள். க்ளாஸ் டெஸ்ட் வந்தாலே உடனே வீசிங்க் வந்துவிடும். டீச்சருக்கு அத்துப்படி, டெஸ்ட் வீசிங்கா, நிஜ வீசிங்கா என்று கண்டுபிடித்து விடுவார்கள்.என் எதிரிக்கு கூட வீசிங்க் வரக்கூடாது என சொல்வேன்.


நடந்தால் மூச்சிரைக்கும். மூச்சை வெளியே இழுத்து விடமுடியாமல், உள்ளுக்குள்ளேயே ங்கொய்.... ங்கொய்.... என்று இழுத்துக்கொண்டிருக்கும். மாத்திரை போட்டால் நிற்கும். இரண்டே நாள்தான். உடனே அழையா விருந்தாளியாகிவிடும். இப்படியே தொடர்ந்து வேலைக்கு போகும் வரை நீடித்தது.பாவம், ஷெர்லி மாலா என்ற அலுவலக தோழிதான், வீசிங்கோடு ஆபிஸ் வந்தால், உடனே ஜீஸஸ் கால்ஸூக்கு போன் செய்து ஜெபம் செய்ய சொல்வார்கள். ஜெபம் நடக்கும் போது போனை என் காதில் வைத்துவிடுவார்கள். அதற்குபின்னர் நோயின் தீவிரம் கொஞ்சம் குறைந்தால் போல மனதுக்கு படும்.


அலுவலக விடுமுறை நாட்களில் எனது தலையாய வேலையே ஜீஸஸ் கால்ஸூக்கு என் நிலை குறித்து கடிதம் எழுதுவதுதான். எண்ணி ஏழு நாட்களுக்குள் பதில் கடிதம் வரும். ஜெபம் செய்ததாக். பின்னர் அதற்கு நன்றி கூறி என்னிடமிருந்து கடிதம் போகும். இந்த கடிதப்போக்குவரத்து நெடுநாள் நீடித்தது.

ஒரு கட்டத்தில் மாத்திரை சாப்பிட்டால் தான் உடம்பு நன்றாக இருக்கிறது என்று நானே நினைத்துக்கொண்டே, பெட்னிலானை (Betnelan) தினந்தோறும் சாப்பாட்டுக்கு பதிலாக கூட, விழுங்க ஆரம்பிக்க விளைவு. காலையில் எழுந்து முகத்தைப் பார்த்தால், பூசணிக்காய் போல இருக்கும். அந்த வீக்கம் வடியவே மதியமாகிவிடும்.
வீட்டில் எல்லோரும் திட்ட, திட்ட நான் இதை விடாப்பிடியாக செய்துகொண்டிருந்தேன். இந்த பூசணிக்காயே நாளடைவில் பழக்கமாகிவிட, எதேச்சையா ஈ.எஸ். ஐ ஹாஸ்பிட்டலிலுக்கு ச்சும்மா போனேன். ஒருமுறையாவது அங்கே சென்று காண்பிக்காவிட்டால் பின்னாலில் லாஸ் ஆஃப் பேவின் போது ஈ.எஸ்.ஐ.சி.யின்பலனை பெறமுடியாது என்று அலுவலகத்தில் மிரட்டி வைத்திருந்தார்கள்.

நான் சென்ற அந்த ஈ.எஸ்.ஐ மருத்துவமனை டாக்டர்தான், என்னை கடைசியாக எச்சரித்தார் - நீங்கள் தொடர்ந்து இந்த மாத்திரையை உட்கொண்டால் உங்களின் கர்ப்பப்பை பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் சாப்பிடும் மாத்திரையில் கீடோன் காம்பவுண்ட் இருக்கிறது. அதுவே இதற்கு காரணம் ஜாக்கிரதை என்றார். திரும்ப வரும்போது பயங்கர யோசனை.என்னடா வசமா போய் ஒரு காம்பவுண்டில் மாட்டிக்கொண்டிருக்கிறோமே என்று, யோகா, பிரணாயாமம் என்று இப்போது வேறுபக்கம் திசை திரும்பியது.


அப்படி இப்படி என கடைசியாய் அந்த மாத்திரையின் பிடியில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன். எனது முந்தைய நிலைமைக்கு இப்போது எவ்வளவோ தேவலாம். எப்பவாவதுதான் விருந்தாளியா, நம்ம வீசிங்க் சார் வருவார். வந்தவுடனேயே ஒரு பெட்னிலான். அப்புறம் போய்விடுவார்.



டிஸ்கி : ஏன் இப்போது இந்தப்பதிவு என்று கேட்பவர்களுக்கு, எனக்கு இப்போ வீசிங்க் வரா மாதிரி இருக்குது, அதனாலதான் இந்த கொசுவத்தி.

22 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஆம், நான் பாதித்தது வீசிங்க் என்று பரவலாக அறியப்படும் மூச்சிரைப்பினால்\

ஓஹ்!

இப்ப ...

நட்புடன் ஜமால் said...

எனது தந்தைக்கும்

இரண்டாவது

அண்ணாவுக்கு

உண்டு

ரொம்ப கஷ்டமாயிருக்கும் அவர்களை அந்த நிலையில் பார்க்கும் போது ...

குடந்தை அன்புமணி said...

எனது சகோதரிக்கும் அதுபோல் நேர்வதுண்டு. மாத்திரைகளால்தான் வாழ்க்கை ஓடுகிறது. என்ன சொல்லியும் தலைக்கு குளித்து விரதம் அது இதுவென்று இழுத்துவிட்டுக்கொள்வார்கள். சமீபத்தில் மிகவும் முடியாமல் போய்,மருத்துவரை பார்த்து, இப்போது தேவலாம். உடம்பிற்கு ஏற்றார்போல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்!

Vidhya Chandrasekaran said...

என் அப்பாவுக்கு கூட உண்டு. ஆனால் இப்போது நல்லா குறைந்துவிட்டது. அதிகாலையில் 5.30 மணிக்கு மேல் வாக்கிங் போய் பாருங்கள். பலன் தெரிவதாக அப்பா சொன்னார். எனக்கு சைனஸ் தொல்லை. நீங்கள் சொன்ன பூசணிக்காய் ப்ராப்ளம் வரும். செட்ரிசன் தான் கைக்கொடுக்கும். ஆனா அந்த மாத்திரை சாப்பிட்டா தூக்கம் கண்ண கட்டும். இப்போ ஜூனியருக்கும் விசிங் ப்ராப்ளம் இருக்கு. சித்தா மெடிசின் குடுத்திட்ருக்கேன். 2 மாசமா ஒரு பிரச்சனையுமில்ல. பார்ப்போம்.

சந்தனமுல்லை said...

:(

//: ஏன் இப்போது இந்தப்பதிவு என்று கேட்பவர்களுக்கு, எனக்கு இப்போ வீசிங்க் வரா மாதிரி இருக்குது, அதனாலதான் இந்த கொசுவத்தி.//

வெயில் காலத்திலயுமா அமித்து அம்மா?!

அமுதா said...

/*என் எதிரிக்கு கூட வீசிங்க் வரக்கூடாது என சொல்வேன். */
நானும் அதே கூறுவேன். எனக்கும் 9வது வ்குப்பிலிருந்து தீவிரமாகி ... நான் பட்ட கஷ்டங்கள் சொல்ல மாளாது. சென்னை வந்த பிறகு குறைந்தது. யாழினி கருவில் இருக்கும்பொழுது... அம்மா இப்பொழுது நினைத்தாலும் குலை நடுங்குகிறது டாக்டர்கள் மாத்திரை சாப்பிட எடுத்த முடிவுகளால். எனக்கு வெயில், மழை, தூசி எல்லாமே... எது என்று தெரியாமலே வந்து விடும்.

அமுதா said...

இப்பொழுது ஹோமியோபதி போகிறேன். பரவாயில்லை. அது போல் என் உறவினர் ஒருவர் கூறியது.:
"கட்டிலை நன்கு சாய்த்து, தலைப்புறம் நன்கு உயர வைத்து படுக்க வேண்டும் (குறிப்பு: கட்டிலே சாய்ந்து இருக்க வேண்டும், தலையணை உயர்த்துவது அல்ல.). அது போல் இரவு உணவு படுப்பதற்கு 2 மணி நேரம் முன்பு முடிக்க வேண்டும். இது அவர் செய்து இப்பொழுது தொந்தரவு இல்லை என்றார். அவருக்கும் தூசி அலர்ஜி. ஆனால் ஒவ்வொருவரும் ஒன்று கூறுவார்கள். நம் கஷ்டம் நமக்கு தான் :-((

அப்பாவி முரு said...

நீங்க பட்ட-படுற கஷ்ட்டம் எனக்கும் கஷ்ட்டமாத்தான் இருக்கு.

இந்த பதிவுனால உங்களுக்கு இலவசமா நிறைய மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கப் போகுது. தயவு செய்து அவைகளை முயற்ச்சிக்க வேண்டாம்.கவனம்

Thamira said...

இது பரவலாக காணப்படும் நோய்தான். இருப்பினும் பதிவின் முடிவு வருத்தம் தருவதாய் இருக்கிறது. விரைந்து இதிலிருந்து விடுதலை பெறுவீர்கள் என நம்புகிறேன்.

narsim said...

//சரியாக, பத்தாவதின் பாதியில் தான் அது என்னை பாதித்தது. தூக்கம் இல்லை, பசி இருக்கும் உணவு உள்ளிறங்காது. படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் //

ஏதோ காதல் மேட்டர்னு நெனைச்சா.. இப்படி முடிச்சிட்டீங்களே மேடம்.. Take care!

ஜீவா said...

அமிது அம்மா மனதுக்கு கஷ்டமாக இருந்தது . இப்பொழுதுதான் inhaler வந்துவிட்டதே .அதை பயன்படுத்தி பாருங்கள் அறிவுரை அல்ல . தகவல் அவ்வளவே .

தாரணி பிரியா said...

எனக்கு மார்கழி தை மாதங்களில் மூச்சு விட கொஞ்சம் கஷ்டபடுவேன். அதுக்கு நான் என் வீட்டுல இருக்கற எல்லாரையும் அத்தனை கஷ்டப்படுத்தறேன். நீங்க பரவாயில்லை போல அமித்து அம்மா. உடம்பை பார்த்துக்கோங்க. டாக்டரை பார்த்து அவர் சொல்ற போல மருந்தை எடுத்துகோங்க

Arasi Raj said...

அதல்லாம் வராது...அதையே நினைச்சுட்டு இருக்காதீங்க..

தண்ணி அடிச்சுட்டு அதையே நினைச்சுட்டு இருந்தா தன் போதை வரும்னு எங்க கணவர் சொல்லுவர்...மறந்து தான் பாருங்களேன்....எப்டி வருதுன்னு பாத்துருவோம்

Take care of your health

தமிழ் அமுதன் said...

எனக்கும் இந்த பிரச்னை இருந்தது!
அதுவும் வெயில் காலத்தில் வீசிங்
தொல்லை வந்தால் கூல்டிரிங்க்ஸ் கூட
ஏதும் குடிக்க முடியாமல்.... யப்பா ....அவஸ்தை

கிருத்திகா ஸ்ரீதர் said...

என் பெரிய பையன் கதை மாதிரியே இருக்கு... ஆனா இப்ப ஒரு நல்ல மருத்துவம் கிடைச்சிருக்கு.. பலன் இருக்கா இல்லையான்னு இன்னும் 2 மாசத்துல தெரியும்.. இருந்தா சொல்றேன் நீங்களும் செக் பண்ணிக்கலாம்.

அபி அப்பா said...

அமித் அம்மா! ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. இது சம்மந்தமா மங்கை போட்ட பதிவை அனுப்பறேன். பதிவை தேடி எடுத்து கொடுத்த முத்துலெஷ்மி அவர்களுக்கும் நன்றி!
http://manggai.blogspot.com/2007/05/blog-post.html

அன்புடன்
அபிஅப்பா

அபி அப்பா said...

\\தண்ணி அடிச்சுட்டு அதையே நினைச்சுட்டு இருந்தா தன் போதை வரும்னு எங்க கணவர் சொல்லுவர்..\\

:-)) அப்ப ஒரு நாளைக்கு ஒரு பெக் போதும்:-))))

Unknown said...

Akka take care.. :(

Deepa said...

என் க‌ண‌வ‌ருக்கும் கிட்ட‌த் த‌ட்ட‌ இதே பிர‌ச்னை இருந்த‌து. அதாவ‌து வீசிங் இலை. ம‌ற்ற‌ ப‌டி தும்ம‌ல், fan காற்றுக்குக் கீழ் ப‌டுத்தால் துக்க‌ம் போயே போச்சு, மூச்சே விட‌ முடியாம‌ல் அடைப்பு இருந்த‌து. ENT ஒருவ‌ர் சொன்ன‌ ப‌டி மூக்குத் தண்டைச் சுற்றி வளர்ந்திருந்த தேவையற்ற சதைகளை அறுத்து (அவை தான் பிரச்னைக்குக் காரணமானம்) ஆபரேஷன் செய்ததில் ஓரளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் இது சரி வருமா என்று விசாரித்துப் பாருங்கள்.

Ungalranga said...

என்னங்க.. இதுக்கெல்லாம பயப்படுவாங்க..
உங்களுக்கு வீசிங்க் இல்லனு நம்புங்க..
வீசிங் இருக்காது...

நான் என்னோட அனுபவத்துல சொல்லுறேன்..

நம்புங்க.. அது போதும்..
மேலும் தகவலுக்கு

http://www.youtube.com/watch?v=CM8_fxe0T_U

ஆங்கிலத்தில் தான் இருக்கும்..
ஆனாலும் உங்களை சிந்திக்க வைக்கும்.

நம்பிக்கையுடன்..
ரங்கன்

(பி.கு)இதுக்கு மேல வீசிங் அது இதுன்னு பதிவா போட்டீங்க.. பிச்சுபுடுவேன்..பிச்சு.. கிர்ர்ர்ர்ர்...

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு, இது ஒரு பயனுள்ள பதிவுதான்.

//வீசிங்க் வரா மாதிரி இருக்குது, அதனாலதான் இந்த கொசுவத்தி//
அப்புறம் அமி அம்மா.. வீசிங்க் கிற்கு கொசுவத்தி எதிரினு நினைக்கிறேன்.. ஸோ கொசுவத்தியை அலோ பண்ணாதீங்க :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டத்தில் கனிவான ஆறுதலையும், பதிலையும் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்